Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

இணையத்தை உலுக்கி வரும் ‘துனியா’வின் கவலை! (வீடியோ இணைப்பு)

யூ டியூப்’ - உலகின் கண்கள் என்று இந்த வலைதளத்தைச் சொன்னாலும் மிகையாகாது. பத்தாண்டுகளையே தன் வயதாகக் கொண்ட இந்த நிறுவனம், இன்று உலகத்தையே தன் முன்னால் அமர்த்திக் கண் கொட்டாமல் காணொளிகளைக் காண வைக்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 48 மணிநேர அளவு காணொளிகள் இதில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. நாளொன்றிற்கு, சுமார் 300 கோடி பேர் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட வலைதளமான யூ டியூப்பில், ஒரு செய்தியோ, கருத்தோ ‘வைரல்’லாக வேண்டுமென்றால் அதற்கொரு தனி அறிவும், திறனும் வேண்டும். அத்தகைய சந்தைப்படுத்துதல் திறன் இல்லாது போனால் எப்படிப்பட்டப் பதிவும் மெல்ல மறைந்து விடும்.ஆகவே, மக்களின் விருப்பத்தையும், மனநிலையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப காணொளிகளின் கருத்தியலை அமைப்பது ஒரு கலையாகவே கருதப்படுகிறது.

அந்த வகையில் அண்மையில் வெளியாகி யூ டியூப்பைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ‘ஸ்கைமெட்’ என்னும் வானியல் அறிக்கையியல் நிறுவனத்தின் ஒரு விளம்பரப் பதிவு. வானிலை அறிக்கை என்றாலே ஒரு கிண்டலான கருத்தியல் வெகுஜன மக்களிடம் பரவி இருக்கிறது. திரைப்பட நகைச்சுவைக் காட்சிகள் தொடங்கி, இணையத்தில் சக்கைப் போடு, போடும் ‘மீம்ஸ்’ வரை, வானிலை முன்னறிவிப்பு கேலி செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் காண்பவர் பேச்சற்றுப் போகும் வகையில், வானிலை அறிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை மாற்றியிருக்கிறது இந்தக் காணொளி. #HelpTheFarmer எனும் ‘ஹேஷ்டேக்’ உடன் இணையத்தில் உலவி வரும் இந்த நான்கு நிமிடக் காணொளி, ஓர் உழவரின் எட்டு வயது மகளின் பயத்தையும் மனப்போக்கையும் படம் பிடிக்கிறது.

தினமும் பள்ளிக்குக் கிளம்பும் எட்டு வயதுப் பெண்ணான, ‘துனியா’, விவசாயியானத் தன் தந்தையை, தினந்தோறும் அவரறியாமல் பின் தொடர்கிறார். தந்தை எந்தத் தவறான முடிவிற்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே மனநிம்மதியோடு, பள்ளிக்குச் செல்கிறார். இரவு தந்தையின் மேல் சாய்ந்தபடி, வானின் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் துனியா, தன் உறவினர்களில், தற்கொலை செய்து கொண்டு, மாய்ந்து போன விவசாயிகளை எந்தெந்த உடுக்கள் என்று வானில் அடையாளம் கண்டு கொள்ளும் காட்சி நெஞ்சை நெருடுகிறது. மறுநாள், தன் அப்பா வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்ற கயிற்றைக் கண்டு பயந்து, அதை ஒளித்து வைக்கிறாள் துனியா. ஞாயிறன்று, பள்ளி விடுமுறை என்பதால் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கும் துனியா, அப்பா கிளம்பிப் போன பின்பு, கயிறு, ஒளித்து வைத்த இடத்தில் இல்லாததைக் கண்டு பதறுகிறாள். அவரைத் தேடி வயலுக்கு விரைந்தோடுகிறாள். அங்கே அவரில்லையென்றதும் மேலும் பீதி அடைந்து, சுற்றும் முற்றும் தேடுகிறாள்.

தூரத்தில் ஒரு மரத்தில், அவர் கயிறு கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு, பின்னங்கால் பிடரியில் பட ஓடிப் போய் அவரைத் தழுவிக்கொண்டு, அழத் தொடங்குகிறாள். அவள் கண்ணைத் துடைத்துவிட்டுக், கயிற்றை இறுக்கக் கட்டி அவளுக்கு, ஓர் ஊஞ்சல் செய்து தருகிறார் அவள் தந்தை. துனியாவைப் போல் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வானை நோக்கிக் காத்திருக்கின்றன. வானம் பொய்த்துப்போனதால், 1995ஆம் ஆண்டு முதல் மூன்று லட்சம் உழவர்களுக்கு மேல், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த முயற்சியை விரிவுபடுத்த உதவுங்கள் என்ற கோரிக்கையோடு நிறைவுறுகிறது இந்தக் காணொளி. துனியாவாகத் தோன்றும் அந்தச் சிறுமியின் முகமும், குரலும், பின்னணி இசையும் ஒரு நான்கு நிமிடத்துளிகள் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. ஊடகத்தின் சக்தி ஆட்சியையே நிர்ணயிக்கும் நம் நாட்டில், அந்தச் சக்தியை இப்படிப்பட்ட இணைய யுக்தியாகவும் கையாள முடியுமென்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

-ச.அருண்- 

காணொளிக்கு: 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement