Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அவள் இதழ் பட்டதும் காகிதம் மலர் போல பூத்தது! காதல்ரசம் சொட்டும் குறும்படம் ஒரு பார்வை

சில பல வருடங்களுக்கு முன்பு நான் இளைஞனாக இருந்த போது நியூயார்க் நகரின் புகழ்பெற்ற ஒர் நிறுவனத்தில் கணக்குப் பதிவாளராக வேலை செய்து கொண்டிருந்தேன்

அப்போதெல்லாம் தார் சாலைகளில் வாகனங்களைப் பார்ப்பதே மிகவும் அபூர்வம்.பெற்றோர்களிடமிருந்துப் பிரிந்து வந்த நான் அலுவலகம் கொடுத்திருந்த ஓர் அடுக்குமாடி  குடியிருப்பில் தன்னந்தனியாக வாழ்ந்து வந்தேன்.

நான் குடியிருக்கும் இடத்திற்கும் அலுவலகத்திற்கும் இடையே 15 கி.மீ தூரம் இருக்கும். எப்போதுமே அலுவலகத்திற்கு காலை எட்டு மணி தொடர்வண்டியில் தான்  பயணம் செய்வேன். அலுவலகம்,வேலை, வீடு என்று என் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது.

எனக்கென்று நட்பில்லை, காதலில்லை என்று இதயம் அதிகமாக அழுத்திக் கொண்டிருந்த தருணம் அது.

காலை எட்டு மணி வண்டிக்கு செல்ல 7.30 மணிக்கே பிளாட் பார்மிற்கு வந்து விடுவேன். என்னைப் போலவே ஏகப்பட்ட மக்கள் அங்கு காத்திருப்பார்கள். அவர்களில் பலரை தினம் தினம் பார்த்துப் பழகிவிட்டேன். அவர்களுடன் உரையாடியது கிடையாது.

இருப்பினும் அவர்களுடன் அவர்களுக்கே தெரியாமல் நட்பை வளர்த்துக் கொண்டேன். அவர்களில் நிறைய பேர் பெண்கள் , இருப்பினும் காதலும் காதல் சார்ந்த படலமும் இன்னும் உண்டாகவில்லை.

இந்த மாதிரி சென்று கொண்டிருந்த வாழ்க்கைப் பயணத்தில் அதே பிளாட்பார்மில் தான் முதல் முறையாக அவளைப் பார்த்தேன். இவ்வளவு வருடம் கழிந்தபின்பும் கூட
அவளை  முதன்முதலாக  சந்தித்த  டிசம்பர்4, 1940 என் நினைவு நாடாக்களில் தவழ்ந்து தினம் தினம் ஒலிக்கத்தான்  செய்கிறது.

ரயிலுக்காக காத்திருந்தபோது, என் கையில் அலுவலகம் சம்பந்தமான காகிதங்கள் நிறைய இருந்தன. அந்த நேரம் வேகமாக வீசிய காற்று என்  கையிலிருந்த காகிதங்களை அபகரித்து எனக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

சுழன்று அடித்த காற்று தன் சில்மிஷத்தை காட்டியது.  காகிதங்களின் வழியாக அவளின் இதழ்களை முத்தமிட்டது. இதை நானும் பார்த்தேன். அவளின் இதழ்களில் பூசப்பட்டிருந்த சிகப்பு வண்ண சாயம் காகிதத்தில் ஒரு மலரை போல பூத்து அந்தக் காகிதத்திற்கு உயிர் கொடுத்தது.

இதை அவளும் கவனித்திருப்பாள் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அவள் செல்ல வேண்டிய ரயில் வர அவசர அவசரமாக அவள் அந்தக் காகிதங்களை என்னிடம் கொடுத்துவிட்டு ரயிலை பிடிக்க கிளம்பிவிட்டாள்.

அவளின் கண்களை முதன்முதலாகப் பார்த்த உடனே எனக்குள் ஏதோ மாற்றங்கள் நிகழ்ந்தன. அவள் என்னைக் கடந்துசென்று பல நிமிடங்கள் கழிந்தபின்பும் அவளின்  அழகான உருவத்தை மனக் கண்ணில் நிழற்படம் போல  ஓட விட்டு என்னையே மறந்து அங்கே  நின்றிருந்தேன்.

அவளை மீண்டும் பார்க்கத் துடித்தேன்.. நான் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகம் நான்காவது மாடியில் இருந்தது. ஒரு நாள் என் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக எதிரே இருக்கும் குடியிருப்பைப் பார்த்த போது அங்கே அவளை கண்டேன்.. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அவளுக்கு என்னைத் தெரியுமா ? என்னை நினைவில் வைத்திருப்பாளா ? என்று எதைப் பற்றியும் நினைக்காமல் ,என் காதலை வெளிப்படுத்த ,என்னை நினைவு கூற  அலுவலகம் சம்பந்தமான முக்கிய காகிதங்களை ராக்கெட்டுகளாக மாற்றி அவளுக்குத் தூதுவிட்டேன்,  நான் தூதுவிட்ட காதல் ராக்கெட்டுகள் அவளை அடையவில்லை.

அதற்குள் அவளும் என்னைக் கடந்து சென்றுவிட்டாள்.

அவள் அங்கிருந்து வெளியேறிய போது என்னசெய்வதென்று தெரியவில்லை. இறுதியாக பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த அவளின் இதழ் பதிந்த அந்த காகிகத்தில்  ராக்கெட் செய்து தூது அனுப்பினேன். ஏவுதளத்திலிருந்து வெளியான கடைசி ராக்கெட்டும் தோல்வியிலேயே முடிந்தது.

முதலாளியின் அழைப்பை மறந்து, அலுவலகத்தை மறந்து அவளைக் காண ஓடினேன்!

இயற்கை தன் கருணையை என் மீது காட்டத் தொடங்கியது. மீண்டும் அதே காற்று என்னைச் சுற்றி அடிக்க ஆரம்பித்தது. நான் விட்ட காகித ராக்கெட்டுகளே என்னைச் சூழ்ந்து அவள் இருக்கும் இடத்தை நோக்கி இழுத்துச் சென்றன.

அதற்குள் அந்த இதழ் படிந்த பொக்கிஷம் அவளைச் சென்றடைந்திருந்தது.

காதலாகிக் காற்றில் கரைவது இந்தத் தருணத்தில் தானோ என்று உணருவதற்குள், என்ன ஆச்சர்யம் அவளே என்னை நோக்கிப் புன்னைகையுடன் வந்து கொண்டிருந்தாள்.

இருவரின் முகத்திலும் மழலையின் சிரிப்பு பூக்க ஆரம்பித்தது.  இருவரும் குழந்தைகள் ஆனோம் .இருவரையும் இணைத்த இயற்கைக்கு நன்றி சொன்னோம்.நாங்கள் இணைய வேண்டும் என்பது இயற்கையின் விருப்பம்.

மரணம் வரை நாங்கள் பிரியவில்லை...

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்ற பேப்பர் மேன் படத்தின் கதை தான் இது. காதல் மலரும் இடத்தை, அதன் வேதனையை, காதலில் அடையும் வெற்றியை நம் வாழ்கையின் வெற்றியாக்கி விளக்கிய படம்.

  பேப்பர் மேன் குறும்படத்தைக் காண:

 

-)சக்திவேல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்