வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (12/09/2015)

கடைசி தொடர்பு:11:30 (14/09/2015)

கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? கோபமாகக் கேள்வி கேட்கும் பர்க்மன் படம்

கடவுளைக் காண யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலியானார்கள். சபரிமலைக்கு வேனில் சென்ற பக்தர்கள் விபத்தில் பலியானார்கள். ஐந்து வயது சிறுமியை கிழவன் பாலியல்வன்புணர்வு செய்து,கொலை செய்தான். விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி. போர், இனவெறியில் லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரழப்பு. இவ்வாறான கொடூரங்களைக் கேட்கும் போது நிச்சயமாக கடவுள் என்பவர் இருக்கிறாரா? என்ற கேள்வியும் ,அப்படி அவர் இருந்தால் எங்கே இருக்கிறார் ? என்ற கேள்வியும் நம் மனதில் கண்டிப்பாக எழும்..

இதற்கு சமீபத்திய சான்று,  முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிச்சயம் மெக்காவில் ஏற்பட்டிருக்கும்  உயிரழப்பு கடவுளைத் தீவிரமாக  நம்புகிறவர்களின் மனதில் கூட  கடவுளைப் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது.

இது சார்ந்த பதிவு ஒன்றை, கடவுள் மேல் கேள்விகளை எழுப்பிய படங்களில் முக்கியமானது பர்க்மன் “தி வர்ஜின் ஸ்ப்ரிங்”. படத்தின் கதை மிகவும் எளிமையானது .ஒரு கன்னிப்பெண் காட்டின் வழியாக தேவாலயத்துக்கு சென்று கொண்டு இருக்கும் போது ஆடு மேய்ப்பவர்களால் கொடூரமாக பாலியல்வன்புணர்வு செய்து கொலை செய்யப்படுகிறாள். கொலையாளிகள் அந்தப் பெண்ணின் உயர்ந்த விலையுடைய ஆடையை எடுத்துக் கொண்டு ஒரு வீட்டில் தஞ்சமடைகின்றனர். அந்த வீடு அந்தப் பெண்ணின் வீடு. அந்த ஆடையை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் விலை பேசும்போது தன் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை ஜீரணிக்க முடியாத தந்தை கொலையாளிகளைக் கொன்று பழி தீர்த்துக் கொள்கிறார் இதுவே கதைத் தளம்.

பழிவாங்குதல் மதத்திற்கு எதிரான செயல் என்பதால் தந்தை தன் குற்றத்திற்காக  வருத்தப்பட்டு மகள் கொலையுண்ட இடத்தில் ஒரு தேவாலயம் எழுப்புவேன் என்கிறார். அந்த கன்னிப்பெண் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு நீருற்று பெருக்கெடுத்து ஓடுகிறது .அந்த நீருற்று தான் கன்னி நீருற்று. அந்த ஊற்று அந்தப் பெண் கொலை செய்யப்பட்டதற்கு அடையாளமாக என்றைக்கும் இருக்கும் என்பதோடு படம் நிறைவடைகிறது.

இறுதியில் கன்னிப்பெண் கொலையுண்ட இடத்திலிருந்து  பெருக்கெடுக்கும். அந்த ஊற்று அந்த பெண் புனிதமானவள்.அவள் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கிறாள் அக்கொலையின் அடையாளமாகவும் .அப்பெண்ணின் புனிதத்தின் அடையாளமாகவும் நான் இருக்கிறேன் என்று சொல்வதைப் போல அமைந்திருக்கும்.

தன் மகளைப் பறிகொடுத்த தந்தை இறுதியாகக் கடவுளை நோக்கி இவ்வாறு கூறுகிறார். “நீ பார்த்தாய் ,கடவுளே நீ பார்த்தாய் என் மகள் கொல்லப்படுவதையும் நான் கொலையாளிகளைப் பழி வாங்குவதையும் நீ பார்த்தாய். இதெல்லாம் நடக்க நீ அனுமதிக்கிறாய். என்னால் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை ..இருந்தாலும் நான் உன்னிடம் என் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன். நான் அமைதியாக வாழ இதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. என் பாவத்திற்கு பிராயசித்தம் தேடிக் கொள்ள
இந்த இடத்தில் உனக்கு ஒரு கோவில் கட்டுவேன். சுவர்களும் கற்களும் கொண்டு அல்ல. என் கைகளால் என்கிறார்”.

இளம் பெண்ணை ஆடு மேய்ப்பவர்கள் குரூரமாக பாலியல்வன்புணர்வு செய்ததையும் பின்னர் கொன்றதையும் கடவுள் பார்த்துக் கொண்டு இருந்தார் என்றால் அவர் மௌனமாகத் தான் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். கடவுள் கருணையை முற்றிலும் நம்பியிருந்தவர் கடவுள் கண் முன்னே எந்த அக்கிரமும் நடக்க முடியாது. பின் இவையெல்லாம் எப்படி நடைபெற்றன.? கடவுள் சம்மதத்தோடு இவை நடந்திருக்க முடியாது தன் மகள் மீது கடவுளுக்கு எந்த வகையிலும் கோபம் இருந்திருக்கவும் முடியாது . அப்படியானால் கடவுள் ஏன் மௌனமாக இருந்தார் என்பது அவர் கேள்வி .

கடவுள் அறவே இல்லை என்று அவரால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை .முற்றான கடவுள் நம்பிக்கை உடையவர் அவர். கடவுள் நம்பிக்கையை தனக்குள் இருந்து
அவரால் வெளியேற்றிக் கொள்ள இயலவில்லை .இந்த இளம்பெண் கொல்லப்பட்டதும் கூட கடவுள் ஏதேனும் நோக்கம் கொண்டு இருக்க வேண்டும் என்று அவர் கருதினாரா?
தெரியவில்லை . எப்படியோ அவர் கடவுளோடு ஒரு சமரசத்திற்குத் தான் வந்து சேர்கிறார்.

கடவுளே நீரே எமக்கு கதி என்று தான் அவர் கதறுகிறார் . இதே இடத்தில் ஒரு கோவில் எழுப்புவேன் என்கிறார். சமயம்,கடவுள் இப்படித்தான் மனிதனுக்குள் நுழைந்து அவனை முற்றாக ஆட்கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு கடவுள், சமயம் இருக்க முடியுமா?இவர் கடவுளா அல்லது சாத்தானா? இப்படி அவர் எண்ணவில்லை ஒருவேளை பர்க்மன் இத்தகைய சித்தரிப்பின் மூலம் கடவுள்/சமயத்தை ஒரு ஆழமான கேள்விக்கு உட்படுத்துகிறார் . கடவுள் இல்லை என்றாலும் அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் வால்டேர். கடவுள் இறந்து விட்டார் அந்த இடத்தில மனிதன் தன்னை வைத்து கொள்ள வேண்டும் என்றார் நீட்சே .இதே பயணத்தில் தான் பர்க்மனும் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

கன்னிப்பெண் கொடூரமாகக் கற்பழித்துக் கொலை செய்யப்படும் காட்சியும் ,கொலையாளிகளையும்,அவர்களுடன் இருக்கும் அப்பாவிச் சிறுவனையும் தந்தை கொலை செய்யும் காட்சியும் நம்மை நிலைகுலைய வைக்கக் கூடியவை .. .மனிதனின் மனதுக்குள் பதுங்கிக் கிடக்கும் குரூரங்களையும் ,கொடூரங்களையும் அவனுக்குள் இருக்கும் பழி வாங்கும் உணர்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடியாக அக்காட்சிகள் அமைந்து இருக்கின்றன..பழிவாங்குதல் ,கொடூரம், அதே நேரத்தில் அன்பான உபசரிப்பு ,உதவுதல் என கடவுளும் ,சாத்தானும் கலந்த ஒரு பிம்பமாகத் தான் மனிதன் இருக்கிறான்.

வர்ஜின் ஸ்ப்ரிங் .படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுளே நீ எங்கே இருக்கிறாய் ? உனக்கு முன் நடக்கும் அநியாயங்களைக் கண்டு ஏன் மௌனமாக இருக்கிறாய் ? நீ மௌனமாக இருந்தால் நாங்கள் என்ன செய்வது ? என்பதை மென்மையான கதையின் வழியாக மிக ஆழமாக உணர்த்தும் படைப்பு . பர்க்மன் படங்களில் மிகவும் எளிமையான அதே நேரத்தில் மிகவும் ஆழமான கருத்துகளை உடைய படம்.

சக்திவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்