சென்னை திரைப்பட விழாவின் முதல் நாளில் கலக்கிய விக்டோரியா!

பதிமூன்றாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று, சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கியது. நடிகர் சங்கம் சார்பாக கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்க விழா நிறைவடைந்த பின் ஜெர்மன் மொழித் திரைப்படமான "விக்டோரியா" திரையிடப்பட்டது.

விக்டோரியா - படம் பற்றி,

ஒரே ஷாட்டில் 138 நிமிடங்கள் எடுக்கப்பட்ட திரைப்படமான விக்டோரியாவில், ஒரு பிழையைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, அனைத்து நடிகர்களுமே தொடர்ந்து இரண்டு மணிநேரத்துக்கும் மேல்  இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி, விக்டோரியாவையும், நான்கு ஆண்களையும் சுற்றியே நகர்ந்தாலும், இரண்டாம் பாதி மிரள வைக்கிறது. அதிகாலை 4 மணி போல் ஆரம்பிக்கப்படும் திரைப்படம் காலை 7 மணிக்குள் முடிந்து விடுகிறது. டஸ்க் டு டான் என்பது போல் இருட்டில் தொடங்கி வெளிச்சத்தில் முடிகிறது இப்படம்.

படத்தில், "பணம், போதை, துப்பாக்கி" போன்ற கேங்ஸ்டர் ஐட்டங்கள் நிறைந்திருந்தாலும், அசால்ட்டாக விக்டோரியா களத்தில் குதித்து, ஆட்டய போடும் நண்பர்களைக் காப்பாற்றுவது செம்ம. படத்தின் டெக்னிக்கல் ஹீரோவான ஒளிப்பதிவாளர், ஸ்டர்லா ப்ராண்ட்த் க்ரோவ்லென், படம் முழுக்க, கேமராவுடன், நடிகர்களை ஃபாலோ செய்து அட்டகாசப்படுத்தியுள்ளார்.

படம் முடிந்தவுடன், கேமரா என்று முதலில் ஒளிப்பதிவாளரின் பெயரைப் போட்டது தான் அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அதை விடப் பெரிய அங்கீகாரம், 65வது பெர்லின் திரைப்பட விழாவில் தலைசிறந்த ஒளிப்பதிவுக்கான சில்வர் பேர் விருதை இப்படம் வென்றது தான்.

இந்த அமர்க்களமான படத்துடன் சென்னை திரைப்பட விழாவின் முதல் நாள் நிறைவுபெற்றது. 13 ஆம் தேதி வரை நடக்கும் விழாவில், இன்னும் பல பிரமிப்பூட்டும் படங்கள் இடம்பெறவுள்ளன. 

செய்தி, படங்கள்: ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிகையாளர்)                                 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!