வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (09/01/2016)

கடைசி தொடர்பு:12:08 (09/01/2016)

விஜய், அஜித் படங்களைப் போல கூட்டம் கூட்டி அதிர வைத்த ஈரான் படம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் மூன்றாம் நாள், பெர்லின் திரைப்பட விழாவில் கோல்டன் பேர் விருது பெற்ற ஈரானியப் படம் "டாக்ஸி", சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்ற கன்னடப் படமான "நானு அவனல்ல… அவளு", மர்டர் இன் பேகாட், தி டோர்ணமண்ட், யூ ஆர் அக்லி டூ போன்ற இருபதுக்கும் மேற்பட்ட உலக மற்றும் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

காலை, முதல் காட்சியாக, கன்னடத் திரைப்படமான "நானு அவனல்ல அவளு" திரையிடப்பட்டது. இது, தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கையான "லிவிங் ஸ்மைல் வித்யா"வின் "நான், வித்யா" எனும் சுயசரிதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், பெண்ணாக மாறப் போராடும் மாதேஷா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாழ்ந்துள்ளார் எனக்கூட சொல்லலாம்.

சிறு வயதிலிருந்தே பெண்களின் உடை மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்து அழகு பார்க்கும் மாதேஷா, கல்லூரிப் பருவத்தில், தன்னை ஒரு பெண்ணாகவே உணர்கிறார். தன் நண்பனின் மீது காதலும் கொள்கிறார். 'கோயிலுக்குக் கூட்டிச் செல்', 'மருத்துவரிடம் கூட்டிச் செல்' என மாதேஷாவின் தந்தையிடம் ஊரார் அறிவுருத்த, மனமுடையும் மாதேஷா பெங்களூரில் இருக்கும் தன் அக்கா வீட்டிற்குச் செல்கிறார்.
அங்கும் அவர் சந்திக்கும் புதிய உறவுகள், அவருடைய வாழ்வில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகின்றன.

அதன் பின் அவருடைய வாழ்வில் அவர் கடந்து வரும் போராட்டங்கள் தான், படத்தின் இரண்டாம் பாதி. நம் நாட்டில்,  ஆண்களுக்கும், பெண்களுக்கும், திருநங்கைகளைப் பற்றிய அதிகபட்ச புரிதல், ஒன்று அவர்கள் பிச்சை எடுப்பர் அல்லது பாலியல் தொழில் செய்வர் என்பது தான். ஆனால் வெளியில் கூற முடியாத பெரும் மனக்குமுறல்களுடன், ஒவ்வொரு நாளும், அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பி.எஸ். லிங்கதேவரு.

ஒவ்வொரு இந்தியனும், இப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும். திருநங்கைகள் மீதான தவறான கண்ணோட்டத்தையும், அவர்களை நோக்கி நடத்தப்படும் கேலி கிண்டல்களையும், மாற்ற இப்படம் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும்.

திரைப்பட விழாவில், மக்கள் கைதட்டல் மழை பொழிந்த இரு திரைப்படங்கள் வார்சா பை நைட் மற்றும் தி டோர்ணமண்ட். வார்சா நகரில், ஓர் இரவில், நான்கு பெண்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் வார்சா பை நைட் திரைப்படத்தின் கதை. நான்கு பெண்களுக்குமான ஒரே தொடர்பு, "வார்சா பை நைட்" எனும் இரவு விடுதி மட்டும் தான். அசத்தலான வசனங்களுடன், சிறப்பான ஓர் ஆந்தாலஜி படம் பார்த்த ஃபீலை கொடுத்து இப்படம்.

அடுத்த படமான தி டோர்ணமெண்ட், ஒரு செஸ் சாம்பியனின் வாழ்வில் நடக்கும் அடிசறுக்கலை மையப்படுத்தியது. கண்ணைக் கட்டிக் கொண்டு, ஒரே நேரத்தில் எட்டு பேருக்கு செக் வைக்கும் திறமை படைத்த செஸ் சாம்பியனான கால், ஒரு சிறுவனைக் கண்டு பயப்படுகிறார். அந்த பயம் வளர்ந்து பெரிதாகி, அவருடைய வெற்றிப்பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. அதிலிருந்து கால் மீண்டு வந்தாரா? என்பது தான் மீதிக் கதை. படத்தின் இறுதிக்காட்சி செம பாஸிடிவாக முடிகிறது.

ஏழு மணிக்குத் திரையிடப்பட்ட "டாக்ஸி"க்கு, ஆறு மணியில் இருந்தே, விஜய்-அஜித் திரைப்படத்திற்கு நிற்பது போல் பெரும் கூட்டம் உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே நின்றுகொண்டிருந்தது. கதவைத் திறந்தவுடன் முட்டிமோதி சீட்டைப் பிடிக்க, ஒரு வழியாக படம் ஆரம்பித்தது. 2010 ஆம் ஆண்டு, ஈரான் அரசால், இருபது ஆண்டுகளுக்குத் திரைப்படம் இயக்கத் தடை விதிக்கப் பட்ட ஜாஃபர் பனாஹி இயக்கிய திரைப்படம் டாக்ஸி.

ஆச்சர்யம் என்னவென்றால், தடை விதிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள், பனாஹி, மூன்று படங்களை (டாக்குமெண்டரி டிராமா ஜானரில்) இயக்கிவிட்டார். அவருடைய வீடுகளில், அவரே நடித்து, முதல் இரண்டு படங்களை இயக்கிய பனாஹி, இம்முறை கலக்கியிருப்பது, டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில். டாக்ஸிக்குள் நான்கு கேமராக்களை பொருத்தியபடி, பயணிகளுடன் நடக்கும் உரையாடல்கள் மற்றும் சுவராஸ்யமான சம்பவங்களையே  படமாக அளித்துள்ளார் பனாஹி.

பெர்லின் திரைப்பட விழாவில், கோல்டன் பேர் விருது பெற்ற டாக்ஸி, 82 நிமிடங்களுக்குள், ஈரானில் நடத்தப்படும் மனிதவிரோத அரசியலை பல்வேறு வகையில் புட்டுப்புட்டு வைக்கிறது. இவ்வளவு சிறிய டாக்ஸிக்குள், இவ்வளவு குறைந்த நேரத்தில், ஒரு மனிதரால் சமூகம், அரசியல், காமெடி என அனைத்தையும் எப்படி இந்த திரைப்படத்திற்குள் கொண்டுவர முடிந்தது என்பது இப்போதும் பிரம்மிப்பாக உள்ளது.

ஒரு காட்சியில் திருட்டு விசிடிக்களை வாங்கும் இளைஞன் ஒருவன் , ”நான் படம் எடுப்பது குறித்து நிறையப் புத்தகங்கள் படித்து விட்டேன், நிறையப் படங்கள் பார்த்துவிட்டேன். ஆனால் எந்த சப்ஜெக்ட் வைத்து படமெடுப்பது என்பதுதான் தெரியவில்லை” என்றதும், ”நீ பார்த்த, படித்த அனைத்தும் ஏற்கனவே எடுக்கப்பட்டவைதான். நீ தான் புதிதாக உருவாக்க வேண்டும்” என இயக்குநர் பனாஹி சொல்ல அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஒரு மனிதனை அரசாங்கமே தடுத்தும் கூட துணிச்சலாக படமெடுக்கிறார் என்றால் அவரின் கலை தாகத்தை என்னவென்று சொல்வது. அவருக்குக் கிடைக்கும் விருதுகளைக் கூட வாங்க முடியாத அளவிற்கு ஈரான் நாடு அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை விதித்துள்ளது. தடை அவருக்குத்தான் அவருடைய படைப்புக்கில்லை என்பதைத் தன் படைப்புகள் மூலம் உலகத்துக்கு உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் பஹானி! 

ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)                      
                           
         

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்