Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுக்குள் திணிக்கப்படும் மதவெறி - அதிர வைக்கும் செர்பியப்படம்

சென்னை திரைப்பட விழாவின் நான்காம் நாளில் முக்கியமான படங்கள் பற்றிய ஒரு பார்வை!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்லாந்து திரைப்படமான "ராம்ஸ்", இந்திப்படம் "மஸான்", ஏ மான்ஸ்டர் வித் தௌஸண்ட் ஹெட்ஸ், தி ஃபென்சர், அலியாஸ் மரியா, என்க்லேவ், பாடி, தி கிட் வூ லைஸ் போன்ற பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

முதல் காட்சியாக உட்லண்ட்ஸ் சிம்பொனியில், இந்தித் திரைப்படமான மஸான் (Masaan) திரையிடப்பட்டது. இரு காதல் கதைகளை உள்ளடக்கிய படமான மஸானில், ஒரு காதல் முடிவில் இருந்து தொடங்குகிறது, மறு காதல் முடிவில் இருந்து மீள்கிறது. காதலிக்கும் இளைஞர்களின் உறவை, நம் நாட்டு மக்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதைத் தெளிவு படுத்துகிறது இந்தத் திரைப்படம்.

தன் காதலனுடன் உறவு வைத்துக்கொள்ளும் தேவியை, போலீஸார் கைது செய்கின்றனர். காதலனோ, வெளிஉலகிற்குப் பயந்து, தற்கொலை செய்து கொள்கிறான். இந்த தற்கொலை வழக்கில் இருந்து தேவியின் பெயரை நீக்க காவல் துறை அதிகாரி மூன்று லட்சம் ரூபாய் கேட்கிறார். நதிக்கரையில் சிறு தொழில் செய்யும் தேவியின் தந்தையும், தேவியும் சேர்ந்து மூன்று லட்சத்தை சேமிக்கத் தொடங்குகின்றனர்.

இடையே வரும் இன்னொரு கதையில், கல்லூரி மாணவனான தீபக், ஷாலு மீது காதல் கொள்கிறான். பிணம் எரிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீபக், உயர்சாதிப் பெண்ணான ஷாலுவிடம், தன் குடும்பத்தைப் பற்றி கூற, ஷாலு, 'உனக்கு நல்ல வேலை ஒன்றை தேடிக்கொள். உன்னுடன் ஓடி வரவும் நான் தயார்' என்கிறாள். தீபக், நன்றாகப் படித்து, வேலையும் கிடைத்து விட, மகிழ்ச்சியில் இருக்கும் தீபக், எரிக்க வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் ஷாலுவையும் காண்கிறான்.

உடைந்து போன தீபக், மீண்டு வந்தானா?, தேவி மூன்று லட்சத்தை சேமித்தாளா? என்ற கேள்விகளுக்கு விடையுடன், அழகிய காதலையும் துவக்கி வைத்து, முடிவு பெறுகிறது இத்திரைப்படம். நீரஜ் கேவானின் முதல் முழு நீளத் திரைப்படமான இது, கேன்ஸ் திரைப்பட விழாவில், இரு விருதுகளையும், கொச்சி திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ளது.

அடுத்து திரையிடப்பட்ட, அலியாஸ் மரியா (Alias Maria), கொலம்பியாவின் அரசுக்கு எதிரான புரட்சிப் படையில், கையில் குழந்தையுடன் 13 வயதுப் போராளியான மரியா சந்திக்கும் இன்னல்கள் பற்றியது. கமாண்டரின் குழந்தையுடன், மரியா, இரு போராளிகள் மற்றும் ஒரு சிறுவனும் காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு ராணுவத்தால் தாக்கப்படுவதால், சிறுவனுக்குக் காலில் காயம் ஏற்படுகிறது. இதனால், அங்குள்ள ஒரு வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, மருத்துவரிடம் செல்கின்றனர்.

வழியில் மரியா கர்ப்பமாக இருப்பதை தலைமைப் போராளி கண்டு பிடிக்க, அந்தக் கருவை கலைக்கச் சொல்கிறான். மரியாவோ அதற்கு சம்மதிக்காமல், அந்த இடத்தில் இருந்து தப்பிக்கிறாள். கொலம்பியாவில் உள்ள புரட்சிப்படைகளில் குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில், போட்டியிட்டது.

அடுத்து, செர்பியப் படமான என்க்லேவ் (Enclave), குழந்தைகளுக்குள் விதைக்கப்படும் மதவெறியை மிகச்சிறப்பாக விளக்கியது. குழந்தைகள் யாரும் மதத்துடன் பிறப்பதில்லை என்பதை வலியுறுத்திச் சென்றது இப்படம். செர்பியாவுக்கும், அல்பேனியாவுக்கும் இடையில் உள்ள கொசொவோ எனும் நகரில் வசிக்கும், கிறுஸ்துவச் சிறுவனான நெநாத், மரணமடைந்த தன் தாத்தாவின் உடலை, அல்பேனிய இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அடக்கம் செய்ய, மதகுருவை அழைக்கச் செல்கிறான்.
அங்கு இரு இஸ்லாமிய சிறுவர்களுடன் நண்பனாகும், நெநாத், செர்பிய கிறிஸ்துவர்களைக் கொல்ல நினைக்கும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனான பாஷ்கிமை காண்கிறான். நால்வரும் விளையாடிக்கொண்டிருக்க, தாத்தாவின் நினைவு வரும் நெநாத், அங்கிருந்து செல்ல முயல்கிறான். ஆனால் அவனைத் தடுக்கும் பாஷ்கிம், தோற்றுவிட்டதாகக் கூறிவிட்டுச் செல்லும்படி, ஆணையிடுகிறான். நெநாத் மறுக்க, பெரிய ஆலய மணியை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறான் பாஷ்கிம்.
மணி, நெநாதின் மீது விழ, அதற்குள் மாட்டிக்கொள்கிறான் நெநாத். பாஷ்கிமின் காலில் குண்டுக் காயம் பட, அவனை கிறுஸ்துவ மத குரு, அவனது வீட்டில் கொண்டு சேர்க்கிறார். இறுதியில், நெநாதை காப்பாற்றியது யார்? என்பது தான் மீதிக் கதை. பார்வையாளர்கள் அனைவரையும் படத்தின் இறுதிக் காட்சி நெகிழ வைத்தது.

அடுத்த திரைப்படம், பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராம்ஸ் (RAMS). செம்மறி ஆடுகளை வளர்க்கும் இரு முதிய சகோதரர்களின் கதை. அவர்கள் வசிக்கும் பள்ளத்தாக்கில், ஸ்ராப்பி எனும் நோய் செம்மறி ஆடுகளுக்குப் பரவ, அனைத்து ஆடுகளையும் கொல்ல மருத்துவர்கள் உத்தரவிடுகின்றனர். ஆனால், ஆடுகளின் மீது அளவற்ற பிரியம் கொண்ட கும்மி சில ஆடுகளை மறைத்து வைக்கிறார்.

இதை ஒரு மருத்துவர் கண்டுபிடிக்க, பயந்து போகும் கும்மி, நீண்ட நாட்களாக சண்டையில் இருக்கும் தனது சகோதரனான கிட்டியிடம், உதவி கேட்கிறார். இருவரும் ஆடுகளைக் காப்பற்ற, பனியில் வாகனம் மாட்டிக்கொள்கிறது. இதுவே சகோதரர்களுக்குள் மறுபடியும் அன்பை உருவாக்குகிறது. பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களுடன் நிறைவடைந்தது "ராமஸ்".

ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்