வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (11/01/2016)

கடைசி தொடர்பு:13:29 (11/01/2016)

பிரபல இயக்குநரின் மனநெருக்கடியைத் தீர்த்த படம்

சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் முக்கியமான படங்கள் பட்டியலில்
சில திரைப்படங்கள் இருக்கின்றன.அந்தப் படங்களை பார்க்கும்போது ஏற்படுகின்ற பாதிப்பை விட,பார்த்தபிறகு அமைதியாக அந்தப் படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் பற்றி அலசும்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையைத்தான் திரைப்படமாக பார்த்திருக்கிறோம் என்பதை உணருகிறோம். அப்போது ஏற்படுகிற பாதிப்பு ஆழமானது.

இந்த மாதிரி பார்வையாளனுக்குள் ஆழமான பாதிப்பை செலுத்துகிற படைப்புகள் சம காலத்தில் குறைவாகத்தான் வெளிவருகின்றன .அதில் முக்கியமானது mia madre. இப்படத்தின் இயக்குனர் நான்னி மொரெட்டி .

mia madre என்றால் என் அம்மா என்று பொருள். சில வருடங்களுக்கு முன் நான்னி படப்பிடிப்பில் இருந்த தருணத்தில் அவரின் அம்மா மரணமடைந்துவிட்டார்.அப்போது அவருக்குள் நிகழ்ந்த நெருக்கடிகளை ,மன உளைச்சலைத் தான் நான்னி படமாக்கியிருக்கிறார். படத்தின் கதைக்குள் செல்வோம்.

மார்க்கெரித்தா என்ற திரைப்பட இயக்குனர், தொழிலாளர்களின் பிரச்னையை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் .கணவனைப் பிரிந்து அம்மா,சகோதரனுடன் வாழும் மார்க்கெரித்தாவுக்கு ஒரு மகள் இருக்கிறாள் .அம்மா மருத்துவமனையில் படுத்த படுக்கையாக மரணத்தின் விளிம்பில் இருக்கிறாள்.மார்க்கெரித்தாவின் சகோதரன் தன்னுடைய வேலையைப் பெரிதாக எண்ணாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு அம்மாவை அருகில் இருந்து பார்த்துக்கொள்கிறான்.

ஆனால் மார்க்கெரித்தாவோ திரைப்படம் இயக்கிக் கொண்டிருப்பதால் படப்பிடிப்பு போக கிடைக்கும் நேரத்தில் மட்டும் அம்மாவை வந்து பார்த்து செல்கிறாள். அம்மா விரைவிலேயே இறந்துபோய்விடுவார் என்ற அச்சமும், துயரமும் கவலையும,வேலை நெருக்கடியால் அம்மாவின் அருகில் அதிக நேரம் இருக்க முடியாமல் போவதால் ஏற்படுகின்ற குற்றவுணர்வும் அவளை எந்த ஒன்றிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் செய்கிறது.

இதனால் பள்ளியில் படிக்கின்ற மகளுக்கு நேர்ந்த பிரச்னைகள் கூட அவளுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. மார்க்கெரித்தா அவளின் அம்மா,அவளின் மகள் இந்த மூவரையும் சுற்றிச் சுழல்கின்ற கதை பார்வையாளனின் மனதுக்குள் வாழ்க்கை ,மரணம், தவிர்க்க முடியாத இழப்புகள் மற்றும் புதிய ஆரம்பத்தை பற்றிய சிந்தனையைப் விதைப்பதோடு படம் நிறைவடைகிறது.

மார்க்கெரித்தா எடுத்துக்கொண்டிருக்கிற படத்தில் நடிப்பதற்காக பேரி என்ற நடிகன் புதிதாக ஒப்பந்தமாவான் .மொழி தெரியாமல் அவன் செய்கிற சேட்டையும், தப்புத் தப்பாக உரையாடலை வெளிப்படுத்துகின்ற இடங்களும் மிகுந்த நகைச்சுவையானவை. பார்வையாளனை மட்டுமில்லாமல் மார்க்கெரித்தாவையும் அவன்  சிரிக்க வைக்கிறான் .

மார்க்கெரித்தாவின் சகோதரனாக நடித்திருப்பவர் படத்தின் இயக்குனரான நான்னி. நிஜ வாழ்க்கையில் அம்மாவின் அருகில் இல்லாததால் ஏற்பட்ட மன நெருக்கடியால் அம்மாவின் அருகில் எப்போதும் இருக்கிறமாதிரி நடித்து அந்த நெருக்கடியிலிருந்து விடுதலை அடைய இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது

அம்மாவுக்கு மருத்துவமனையில் இருக்க விருப்பமேயில்லை.அதனால் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். அவர்  ஆசிரியராக இருந்தவர் .அவரைப் பார்க்க மாணவர்கள் வீட்டுக்கு வருகின்றனர்.அப்போது நடக்கின்ற உரையாடல்கள் நெகிழ்ச்சியானவை .

வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொண்ட, எதிர்கொள்ளவிருக்கும் இழப்பை நெருக்கடியை ,துயர் மிகுந்த கதையை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பதும் படத்தில் நடித்தவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது .குறிப்பாக அந்த அம்மா நோயாளியாகவே வாழ்ந்திருக்கிறார். மார்க்கெரித்தாவாகவும் பேரியாகவும் நடித்தவர்களின் நடிப்பும் பிரமாதமானவை .

கேன்ஸ் உட்பட பல விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில் வரும் பெண்ணைப் போல நாமும் தவிர்க்க முடியாத சூழலில் சிக்கிக் கொண்டு ,செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு நம்மையும் கஷ்டப்படுத்தி, நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். சூழலை மாற்ற முடியாது, நம் வாழ்க்கையை மாற்ற வேண்டும்.சூழல் தானாகவே மாறிவிடும். அதற்கு இழப்புகளை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு புதிதாக எல்லாவற்றையும் தொடங்க வேண்டும்

சக்திவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்