சென்னை திரைப்பட விழாவில் ரசிகர்களைக் கவர்ந்த அமீர்

சென்னை திரைப்பட விழாவின் ஆறாம் நாள்.

பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஜப்பானிய திரைப்படமான "ஆன்", அயர்லாந்து திரைப்படமான "யூ ஆர் அக்லீ டூ", ஈரானிய திரைப்படங்களான "மை மதர்ஸ் ப்ளூ ஸ்கை" மற்றும் "ரான்னா சைலன்ஸ்", க்ரானிக், எம்ப்ரேஸ் ஆஃப் தி சர்ஃபன்ட் போன்ற உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

காலை, ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்ட "மை மதர்ஸ் ப்ளூ ஸ்கை (My mother's blue sky)" எனும் ஈரானியத் திரைப்படம், தந்தை இறந்த பின், தன் தாயுடன், மலைகளுக்கு அடியில் இருந்து நிலக்கரியைத் தோண்டி எடுத்து விற்பனை செய்ய நினைக்கும் அமீர் எனும் சிறுவனின் கதை. தன் தாயுடன், மிகவும் கடினமாக உழைத்து, இரண்டு லாரி நிலக்கரியை சேமிக்கும் அமீர், அதை விற்கச் செல்லும் போது, சுரங்க முதலாளி குறைந்தது ஐந்து லாரி நிலக்கரி வேண்டும் என கூறுகிறார்.

அதே நேரத்தில், அமீர் வாழும் அந்த மலைகளையும் அபகரிக்க நினைக்கிறார். சுரங்கத்தில் வேலை செய்யும் சிறுவர்கள், தினமும், வேலை முடிந்தவுடன், அமீருக்கு உதவ, ஐந்து லாரி நிலக்கரி சேமிக்கப்படுகிறது. ஆனால் அதை வாங்க வரும் சுரங்க முதலாளி தனக்கு இந்த மலைகளையும் கொடுத்துவிடுமாறு கேட்கிறார். ஆனால் அமீரின் தாய் நிலக்கரியைக் கூட தர மறுத்து விடுகிறார். இதனால் அமீர் வேறு சுரங்கத்தை நாடிச் செல்கிறான்.

திடீரென ஒருநாள், அமீரின் தாய் நிலக்கரி எடுக்கும் போது, மலை அடிவாரத்தில் மாட்டி, உயிரிழக்கிறார். மனமுடையும் அமீர், நகரத்தில் இருக்கும் தன் மாமா வந்தவுடன், அவருடன் செல்ல கிளம்புகிறான். ஆனால் அவனுடைய தாயின் நினைவுகள் அவனைத் தடுக்கிறது. அமீர் சென்றானா என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ். மிகச்சிறந்த படமான இதில், அமீராக நடித்த சிறுவன் கலக்கியிருக்கிறான்.

அடுத்த படமான " யூ ஆர் அக்லீ டூ (You are ugly too)" அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தது. ஆங்கில மொழித் திரைப்படமான இது, தன் தங்கை இறந்தவுடன், தங்கையின் மகளைக் கவனித்துக் கொள்ள, சிறையில் இருந்து விடுவிக்கப்படும் வில் மற்றும் தங்கை மகளான ஸ்டேசி ஆகியோரின் நடுவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை உள்ளடக்கியது. பார்வையாளர்களை அடிக்கடி சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தன, காட்சிகளும், வசனங்களும்.
நகரத்திற்கு வரும் வில் மற்றும் ஸ்டேசிக்கு, புதிய நண்பர்கள் கிடைக்க, அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகச் செல்கிறது. ஆனால், தன் மாமா எதற்காகச் சிறைக்குச் சென்றார் என தெரிந்துகொள்ள விரும்புகிறார் ஸ்டேசி. தனது தந்தையைக் கொன்றதற்காகத் தான், அவர் சிறைக்குச் சென்றார் எனத் தெரிந்தவுடன் அதிர்ந்து போகிறாள். வில்லை விட்டுச் செல்கிறாள். கீழே விழுந்து, அவளுக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட, வில்லின் பிணை ரத்து செய்யப்படுகிறது. ஆறு மாத சிறைவாசத்திற்கு பின் இருவரும் சந்திக்கும் க்ளைமேக்ஸ் காட்சி பார்வையாளர்களின் மனதை நெகிழ வைத்தது.

அடுத்ததாக திரையிடப்பட்டது, ஜப்பானிய திரைப்படமான "ஆன் (AN)". டோராயாக்கி எனப்படும், பேன் கேக்குகளை தயாரித்து விற்கும், சென்டாரோ, வேலைக்கு ஆட்கள் தேவை என  பலகை வைக்கிறார். அதைப் பார்த்து ஒரு மூதாட்டி, தம்மை வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். ஆனால் சென்டாரோ மறுக்க, தான் எடுத்து வந்த கேக்குக்குள் வைக்கும் பீன்ஸ் பேஸ்டை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதை ருசிக்கும் சென்டாரோ, அதில் உள்ள வித்தியாச சுவையை உணர்ந்து மூதாட்டியை வேலையில் சேர்கிறார். பாட்டியின் கைப்பதத்தில் கேக் விற்பனை அமோகமாகிறது. ஆனால் பாட்டியின் கைகளில் இருக்கும் கட்டிகள், அவருக்கு தொழு நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தை சென்டாரோவுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் உடல்நலக் குறைவால் பாட்டி வேலையில் இருந்து நின்றுவிட, அவர் இருக்கும் இடத்திற்குச் செல்கிறார் சென்டாரோ.

அது தொழுநோயாளிகள் இருக்கும் இடம். அங்கு அவரிடம் மூதாட்டி பேசும் போது அழுதுவிடுகிறார் சென்டாரோ. நோயின் காரணமாக மக்களை மக்களே வெறுக்கும் போக்கினை ஆணித்தரமாக எதிர்த்துள்ள இந்தப் படம், நோயாளிகளிடம் இருக்கும் மனதை நமக்குக் காட்டுகிறது.

அடுத்து, ஈரானிய குழந்தைகள் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது. "ரானா சைலன்ஸ் (Ranna Silence)" எனும் இந்தத் திரைப்படம், இரண்டு சிறுவர்களை மையப்படுத்தியது. தான் வளர்த்த காக்கோலி எனும் கோழி காணாமல் போனதால், அது இறந்து விட்டது என நினைக்கும் ரான்னா எனும் சிறுமி, அதிர்ச்சியில், வாயடைத்துப் போகிறாள். யாரிடமும் பேசாமல் இருக்கும் ரான்னாவை மறுபடியும் இயல்பு நிலைக்கு திருப்ப, அவளின் சகோதரன் ரஹ்மானும், அவனுடைய நண்பன் ஹஸ்ஸனும், ரான்னாவின் தாய் வியாபாரியிடம் விற்ற காக்கோலியின் முட்டைகளைத் தேடிச் செல்கின்றனர்.   

அங்கு நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும், குண்டுப் பையனான ஹஸ்ஸனின் செயல்களும் பார்வையாளர்களிடம், சிரிப்புடன் கைத்தட்டல்களையும் பெற்றன. குழந்தைகளுடன் பெரியவர்களும் ரசிக்கும்படி படத்தை எடுத்துள்ளார், பேஹசாத் ரஃபி. இவர் சில்ரன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரான்னா சைலன்ஸ் படத்திற்கு ஷார்ஜா திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.  

ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)                                     
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!