மனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...!

இளவரசன், சங்கர் என எண்ணற்ற மனிதர்கள் சாதி வெறிக்குப் பலியாகி வரும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்வதே ஒருவித மானக்கேடாக இருக்கிறது. இதை எப்படி தடுக்கப் போகிறோம்? இனி என்ன செய்யப் போகிறோம்? உலகம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம்? நாடும் சூழலும் பைத்தியகார விடுதிக்குள் விழுந்து கிடக்கும் போது , உலகமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் ? ஆயுதத்தையா? இல்லை மனித நேயத்தையா? சொல்லுங்கள் . நாம் இனி எதை கையில் ஏந்த வேண்டும் என்பதற்கு அற்புதமான வழிகாட்டியாக நம்முன் வந்து நிற்கிறது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து டெர்ரி ஜார்ஜால் இயக்கப்பட்ட ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் .படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

படத்தின் கதை 1994-ல் நிகழ்கிறது . பால் என்ற அமைதியான மனிதர் ருவாண்டாவிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக இருக்கிறார் . அவர்  ஹீட்டு என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். அவரின் மனைவி சிறுபான்மையினமான டூட்சியை சேர்ந்தவள். . பால் நிர்வகிக்கும் ஹோட்டலில் தான் மிக முக்கியமான பிரமுகர்கள் தங்குவார்கள் .ஹீட்டு இன மக்களுக்கும் டூட்சி இன மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

பால் குழந்தைகள், மனைவி, குடும்பம் என்று சந்தோசமாக  வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் காலை நேரத்தில், வானொலியில் இருந்து  ஒரு  குரல் ஆவேசமாக  ஒலிக்கிறது. டூட்சி இன மக்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள், ஒன்றுவிடாமல் அவர்களை அழித்து ஒழிக்கவேண்டும் என்கிறது அந்தக் குரல் . அங்கங்கே ஆயுதங்கள் வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்படுகிறது . டூட்சி இனத்தைச் சேர்ந்த மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். பாலின் மனைவி டூட்சி இனத்தை சேர்ந்தவள் என்பதால்  மனைவியை பயப்பட வேண்டாம் , பிரச்னைகள் எதுவும் நடக்காது  என்று சமாதானப் படுத்துகிறார் பால்

இதற்கிடையில் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டாவின் அதிபர் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப் படுகிறது.அந்த விமானத்தை டூட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் சுட்டிருப்பார்கள் என்று ஹூட்டு இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இது தான் டூட்சி இன மக்களை அழிக்க சரியான சந்தர்ப்பம் என நினைத்த சில ஹூட்டு இனத்தவர்கள் ஆயுதத்துடன், கொலைவெறியுடன் களத்தில் இறங்குகின்றனர். இனக்கலவரம் பெரிதாக வெடிக்கிறது . ஆயிரக் கணக்கான டூட்சி இன மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

டூட்சி இனத்தை சேர்ந்தவரை அவரின் பக்கத்து வீட்டில் வாழ்ந்தவரும், நன்கு பழகியவருமே இரக்கமின்றி கொல்கின்றனர் . குழந்தைகள் ,பெண்கள்,உடல் ஊனமுற்றோர் என்று , எந்தவித பாரபட்சமுமின்றி  எல்லோரையும் கொலை செய்கின்ற மாபெரும் அவலமும் அரங்கேறுகிறது .வீடுகள் எரிக்கப்படுகின்றன. பெண்கள் பாலியில் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். பால் ஹோட்டலுக்கு செல்கின்ற போது சாலைகளின் ஓரத்திலும் நடுவிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின்,குழந்தைகளின் இறந்த உடல்கள் வெட்டப்பட்டு ரத்தக் கறைகளுடன் சிதறிக் கிடைப்பதைப் பார்க்கிறார்.  இவையெல்லாம் பாலை பெரிதும் பாதிக்கிறது

ஐ.நா வின் அமைதிப் படை அங்கே இருந்தாலும் ,கலவரத்தை தடுக்கவோ, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவோ யாரும்  முன் வருவதில்லை. மேலிருந்து வருகின்ற உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். ருவாண்டாவின் அரசும், ராணுவமும் ஹீட்டு இன மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வீட்டை இழந்து உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் டூட்சி இன மக்கள் பால் மேலாளராக இருக்கும் ஹோட்டலில் அகதிகளைப் போல தஞ்சமடைகின்றனர். ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவராக பால் இருந்தாலும் தன்னுடைய எதிரி இனமான டூட்சி மக்களை அழிக்க கையில் ஆயுதத்தை ஏந்தாமல் மனதிற்குள் மனித நேயத்தை ஏந்தி கலவரத்தில் பலியாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான , நிராதரவான மனிதர்களை ஹோட்டலில் தங்கவைக்கிறார் .

இனக்கலவரத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பும் ,உணவும் அளித்து அவர்களின் உயிரையும் காப்பாற்றுகிறார். அவர்கள் நாட்டைவிட்டு பாதுகாப்பாக வெளியேற வேண்டிய உதவிகளையும் செய்கிறார். இதற்காக தன் கையில் இருக்கும் பணத்தை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கிறார். ஏறக்குறைய 1,268 பேரை பால் தான் வேலை செய்த ஹோட்டலில் தங்க வைத்து இனக் கலவரத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்ற தகவலோடு படம் நிறைவடைகிறது.

பால் தன் குடும்பம், தன்னுடைய உயிர் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியது தான் பால் தன் வாழ்வில் செய்த மகத்தான செயல் .ஒருவேளை அவர் தப்பித்து தன் உயிரை ,குடும்பத்தை மட்டும் காப்பாற்றி இருந்தால் அவரும் ஹூட்டு இனத்தை சேர்ந்தவராக இருந்திருப்பார். அவரும் கையில் கத்தியை ஏந்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது .அப்படிச்  செய்யாமல் மனித நேயத்தை ஏந்தி அடுத்தவர்களையும் காப்பாற்றியதால் பால் மனித இனத்திற்குள் நுழைகிறார். நாம் இன்னும் வெளியே தான் நின்று கொண்டு இருக்கிறோம்.

லட்சக்கணக்கான மக்கள் இன வெறிக்கு பலியாகிக் கொண்டிருந்த  போது, ஐ. நா.வும் , உலகமும் ஏதும் அறியாமல் கண்ணை மூடிக்கொண்டும், மௌனமாகவும் இருந்த சமயத்திலும் , ராணுவமும் ,அரசும் சேர்ந்தே ஒரு இனப் படுகொலையை நடத்துகின்ற சூழலிலும் ,டூட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தன் மனைவி, தன் நண்பன், தன் அண்டை வீட்டுக்காரன் என்று கூட பாராமல் , இரக்கமின்றி கொலை செய்த ஹீட்டு இன மக்களின் மத்தியிலும்  ஆயிரக்கணக்கான மனிதர்களை காப்பாற்றியது பாலின் மனித நேயம் தான். மனித நேயத்திற்கு தான் நம் சூழலில் வெடித்து இருக்கும் சாதி வெறியை அணைக்க கூடிய சக்தியும்,ஆற்றலும் அதிகமாக இருக்கிறது என்பதை பாலின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது . மனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...!!

-சக்திவேல்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!