உன்னதக் கலைஞன் அகிராகுரோசவாவின் மறக்கமுடியா படைப்பு - பிறந்த தின சிறப்புப் பகிர்வு

உலக திரைப்பட ஆர்வலர்கள்,ரசிகர்கள் முதற்கொண்டு நம்ம ஊர் மிஷ்கின் முதல் ஜூராசிக் பார்க் எடுத்த ஸ்பீல் பெர்க் வரை அனைத்து திரைப்பட முன்னோடிகளும் போற்றும் ஒரே இயக்குனர் அகிரா குரோசவா. அவரின் பிறந்த தினம் இன்று. அவரை நினைவு கூறும் வகையில் தெர்சு உசாலா என்ற காலத்தால் அழியாத திரைப்படக் காவியத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது சினிமா விகடன்.

" தெர்சு உசாலா" மென்மையான உணர்வுகள் வழியாக ஆழமான நட்பையும், அந்த நட்பின் வழியாக இயற்கையின் இயல்புகளையும் பிரமாண்டங்களையும்,கருணையையும் பற்றி விரிவாக பேசுகிறது ,அதே நேரத்தில் நம்முடைய நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் தவிர்க்க முடியாமல் அழிந்துக் கொண்டிருக்கும் இயற்கையையும்,முதுமையின் தாங்கவொண்ணா சிரமங்களையும் நுட்பமாக அலசுகிறது . படத்தின் கதை மிகவும் எளிமையானது.

ரஷ்யாவை சேர்ந்த இராணுவ தளபதி ஆர்சன்யேவின் வேலை புதிய புதிய பகுதிகளுக்கு பயணம் செய்து அங்குள்ள நதிகளை,மனிதர்களை,நிலப்பரப்பளவை பற்றி ஆய்வு செய்து தகவல்களை சேகரிப்பது ஆகும். ஆர்சன்யேவ் இதுவரைக்கும் அதிகமாக யாருமே பயணம் செய்யாத மிகுந்த ஆபத்துக்கள் நிறைந்த சைபீரிய காட்டிற்குள் இருக்கும் பகுதிகளை பற்றி ஆய்வு செய்ய தன் படைகளுடன் பயணம் செய்கிறார். அந்தப் பயணத்தின் போது அந்தக் காட்டிலேயே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தெர்சு உசாலா என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த மனிதனை சந்திக்கிறார்.தெர்சுவின் உன்னதனமான குணநலன்களும் ,மற்ற உயிர்களின் மீது தெர்சு காட்டும் அக்கறையும்.காட்டை பற்றிய கூர்மையான அறிவும் ,ஆர்சன்யேவ்விற்கு தெர்சுவின் மீது ஈர்ப்பையும் ,மரியாதையையும் கொடுக்கிறது .

விரைவிலேயே இருவரும் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்.ஆர்சன்யேவ்வின் பயணத்திற்கு தெர்சு வழிகாட்டியாக உதவி செய்கிறார் . அந்தப் பயணத்தின் போது தெர்சு இரண்டு முறை ஆர்சன்யேவ்வின் உயிரை காப்பாற்றுகிறார்.தெர்சுவுக்கு வயது ஆக ஆக பார்வை திறன் குறைந்து காட்டில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது . ஆர்சன்யேவ் தெர்சுவை நகரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைக்கிறார்.தெர்சுவுக்கு நகரத்தில் வாழப் பிடிக்காமல் மீண்டும் காட்டிற்கே திரும்பி போகும் போது மர்மமான முறையில் இறந்து விடுவதோடு படம் நிறைவு பெறுகிறது. இருவேறு பின்புலங்களில் பிறந்து வாழ்ந்த ஆர்சென்யேவ்வும்,தெர்சுவும் அவர்களின் நட்பும் நம்மை வியக்க வைக்கிறது.நட்பிற்கு புதிய அர்த்தத்தையும்,வடிவத்தையும் வழங்குகிறது . காட்டின் இயல்புகளை,இயற்கையின் மகத்துவத்தை காட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த தெர்சுவின் பார்வையிலேயே சொல்லியிருப்பது மிக அற்புதமான ஒன்று . முதுமையின் வலியை,தனிமையை ,இயலாமையை தெர்சுவின் வாழ்க்கைப்பயணம் பார்வையாளனின் இதயத்திற்குள் மென்மையாக உணர்த்துகிறது. தெர்சு உசாலா என்ற மனிதனின் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை பயணம் நம்முடைய மனசாட்சியை நிர்வாணப்படுத்தி அதற்குள் ஒளிந்து கிடக்கும் போலித்தனங்களையும்,மிருகத்தனங்களையும்,சுய நலங்களையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது .

குற்ற உணர்வு ஒரு கூர்மையான கத்தியை போல நம் இதயத்திற்குள் இறங்குகிறது இயந்திரங்களுடன் இணைந்த வாழ்க்கையால் இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோம் என்ற சிந்தனைகள் மனதுக்குள் மலருகிறது . காட்சி கவிதைகளாக வெளிப்படும் இப்படத்தின் திரைக்கதையும்,பின்னணியாக ஒலிக்கும் இசையும் தரும் அனுபவம் நெகிழ்வான ஒன்று.கண்களால் பார்த்து காதுகளால் கேட்டு ,ரசித்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய படமல்ல இது.நம் மனசாட்சியை திறந்து வைத்து இதயத்தால் உணரப்பட வேண்டிய மாபெரும் தரிசனம் தெர்சு உசாலா.மீண்டும் மீண்டும் இத்தரிசனத்தை பெரும் போது நவீன நாகரீக வாழ்க்கையால் இறுகி போயிருக்கும் நம் மனது தெர்சுவைப் போல தூய்மையான நதியாகிறது .இந்த உலகம் ,இந்த வாழ்க்கை எவ்வளவு கேடு கெட்டதாக இருந்தாலும் நாம் அதை ஒரு குழந்தையைப் போல புதியதாக பார்க்க ஆரம்பித்து விடுகிறோம் .

1902,1906,1907 ஆம் ஆண்டுகளில் சைபீரிய காடுகளில் தான் மேற்கொண்ட பயணத்தையும்,அந்தப் பயணத்தின் போது சந்தித்த கோல்டி இனத்தை சேர்ந்த தெர்சு உசாலாவையும் பற்றி விளாடிமிர் ஆர்சென்யேவ் என்ற ரஷ்ய ராணுவ அதிகாரி எழுதிய நினைவுக்குறிப்புகளை அடிப்படையாக கொண்டது இப்படம் .ரஷ்ய ஜப்பானிய கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்கியவர் மாபெரும் இயக்குனர் அகிரா குரோசவா .அகிராவின் முதல் வேற்று மொழித் திரைப்படம் கூட தெர்சு உசாலா தான் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது ... இயற்கையோடு நல்லிணக்கத்துடன் வாழ்கின்ற தெர்சு என்ற மனிதனைப் பற்றி இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

நாம் அனைவரும் இயற்கையின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து இயற்கையுடன் ஒத்திசைந்து , இயற்கையிடம் பணிவுடன் வாழ வேண்டும் . இயற்கை அழிந்துவிட்டால் மனிதர்களாகிய நாமும் அழிந்து விடுவோம். அதனால் தெர்சுவிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்காகவே இந்தப் படத்தை எடுத்தேன் என்கிறார் அகிரா. ஜப்பானை சேர்ந்த அகிரா குரோசவா இரண்டு உலக மகா யுத்தங்களைப் பார்த்தவர். யுத்தத்தின் போது கோடிக்கணக்கில் மக்கள் பூச்சிகளைப் போல,புழுக்களைப் போல மடிவதைப் பார்த்தவர் . மக்களுடன் சேர்ந்து இயற்கையும் அழிந்துப் போவதை பார்த்தவர்.குறிப்பாக ஜப்பானில் இரண்டாம் மகா யுத்தத்தின் தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது..நவீன அணு ஆயுதங்கள் புல் பூண்டு முளைக்காத அளவிற்கு தன் வீச்சை ஜப்பானில் காட்டியது .

இயற்கையில் இருந்து முற்றிலும் விலகி வந்து விட்ட நவீன அறிவியலும்,நவீன வாழ்க்கையும்,நாகரீகமும் மனித வாழ்கையை,இயற்கையை அழிவை நோக்கிய பாதையில் கொண்டு செல்லும் போது நம்மை காப்பாற்றிக்கொள்ள மீண்டும் இயற்கையிடம் திரும்பி சென்று இயற்கையின் கருணையை நாடுவதை விட வேறு வழியில்லை என்பதை தொடர்ந்து தன் படைப்புகளில் சொல்லிக் கொண்டே இருந்தார் அகிரா . அகிரா குரோசவா என்ற திரைப்படக் கலைஞன் இயற்கையின் மீதும்,சக மனிதர்களின் மீதும் கொண்டுள்ள நேசத்தின் எண்ணத்தின் வெளிப்பாடாக தான் தெர்சு உசாலாவை இன்று பார்க்க வேண்டியிருக்கிறது .

அகிரா தனக்கு இருக்கும் இயற்கையின் மீதும்,சக மனிதர்கள் மீதும் கொண்டுள்ள நேசத்தை தெர்சு உசாலா என்ற பழங்குடி மனிதன் வழியாக வெளிப்படுத்துகிறார்.அகிராவின் மற்ற படங்களிலும் அவர் இயற்கையின் மீது கொண்டுள்ள நேசத்தை நாம் .தரிசிக்கலாம் .தெர்சு உசாலாவிற்கு பின்வந்த ட்ரீம்ஸ் திரைப்படம் கூட இயற்கையோடு இணைந்த வாழ்வை அழுத்தமாக முன் நிறுத்தும் படைப்பு .அகிராவின் ஆரம்ப கால படமான ரஷோமானில் கூட இயற்கைக்கு முக்கியமான இடம் இருக்கும். மனிதனின் எல்லா பொய்களையும், உண்மைகளையும் இயற்கை கவனித்து கொண்டிருக்கிறது என்பதை காட்ட சூரியன் என்ற பெரிய மனிதனை அற்புதமாக காட்சிபடுத்தியிருப்பார் .

அகிராவிற்கு திரைப்படக் கலையின் மீதான நேசத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தெர்சு உசாலாவை அகிரா ஆரம்ப காலத்திலேயே படமாக்க விரும்பினார். கதை எந்த இடத்தில் நிகழ்ந்ததோ அந்த இடத்தில் படமாக்கினால் தான் உயிர்ப்போடு இருக்கும் என்று காத்து இருந்தார்.அதற்குள் வேறு ஒருவர் தெர்சு உசாலாவை இயக்கினார்.அந்தப்படம் பெரிதாக பேசப்படவில்லை. தெர்சு உசாலாவை கதை நடந்த இடத்திலேயே படமாக்க வாய்ப்பு தேடி வந்தது .

அதில் மாபெரும் வெற்றியும் அடைந்தார் அகிரா. 1975-இல் வெளியான தெர்சு உசாலா சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதையும் ,பல உயரிய விருதுகளையும் வென்றுள்ளது .அகிராவின் உயிரை காப்பாற்றிய படம் .இப்படத்திற்கு முந்தைய படம் கொடுத்த வணிக ரீதியான தோல்வியும் ,தன்னுடைய படைப்பாற்றல் மலிந்து விட்டது என்ற மனசோர்வும் தற்கொலையை நோக்கி அகிராவை இழுத்து சென்றது .தெர்சு உசாலா கொடுத்த வெற்றியும்,உந்துதலும் அகிராவை ககேமுஷா ,ரான்,ட்ரீம்ஸ் போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை படைக்க உதவியது . அகிரா என்ற உன்னத கலைஞன் இன்னும் திரைப்படத்தின் வழியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.

- சக்திவேல்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!