வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (12/04/2016)

கடைசி தொடர்பு:17:02 (12/04/2016)

மக்கள் எல்லோரும் அணுகவேண்டிய மனநல மருத்துவர் இவர்தான்

சார்லி சாப்ளினைப் போல இந்த உலகில் நம்மைச் சிரிக்க வைத்ததோடு, நம் இதயத்தை ஆழமாகத் தொட்டவர் யாருமே இல்லை.இன்றைக்கு நாம் ஏன் அவரை நினைவு கூற வேண்டும். இன்றைக்கு ஏன் நாம் சார்லி சாப்ளினின் படங்களைப் பார்க்க வேண்டும் ? என்ற கேள்விகளுக்கு பதிலாக இருப்பது ஒன்றே ஒன்று தான். நாம் இன்றைக்கு சிரிப்பதையே மறந்து விட்டோம். நவீன வாழ்க்கைச் சூழல் நம் உடலை மட்டுமில்லாமல் மனதையும் சீர் குலைத்து வைத்திருக்கிறது. எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்து நம் உடலை ஆரோக்யமாக வைத்திருந்தாலும் மன அழுத்தம் நம் உடல் ஆரோக்யத்தை சிதைத்து விடுகிறது. நகைச்சுவையைப் போல மன அழுத்தத்துக்கு சிறந்த மருந்து எதுவும் இல்லை.

மற்றவர்களைக் கேலி , கிண்டல் செய்வதில் இருந்து உருவாவது இல்லை நகைச்சுவை. அது ஒரு உன்னதமான உணர்வு. அந்த உன்னதமான நகைச்சுவைக்காகவே நாம் சார்லியைத் தேடிப்போக வேண்டி இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை நம் வேதனைகள் பிறரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால் ஒரு போதும் நம் சிரிப்பு மற்றவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. அவரின் படங்கள் நகைச்சுவையோடு வாழ்வின் உன்னதமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மட்டுமில்லாமல் , நம் கவலைகள், பிரச்னைகளை மறந்து உடல், மன ஆரோக்யத்தோடு நம் வாழ்வையையும் செழிப்பாக மாற்றுகிறது அவரின் திரைப்படங்கள் . இன்றைக்கு மனதை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள ஒரு மன நல மருத்துவரை நாடிச் செல்வதை விட சார்லி சாப்ளினின் படங்களைப் பார்ப்பது சிறந்தது. இதோ அவரின் படங்கள்

மாடர்ன் டைம்ஸ் (modern times )

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கிடையில் உலக நாடுகளிடையே ஏற்பட்ட முக்கியமான ஒரு நிகழ்வு பொருளாதார வீழ்ச்சி.. அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது . அந்த கால கட்டத்தில் உருவான முக்கியமான படம் தான் மாடர்ன் டைம்ஸ்.இதன் இயக்குநர் சார்லி சாப்ளின் .

சாப்ளின் ஒரு மாபெரும் தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கும் வேலையைச் செய்கிறார்.. தொழிலாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப் படுகிறது .வாழ்க்கை இயந்திரங்களுடன் ஒரு போராட்டமாக மாறுகிறது ..சந்தர்ப்ப சூழ்நிலையால் காவல்துறையால் கைது செய்யபடுகிறார். அப்போது தன்னைப் போலவே வறுமையில் கஷ்டப்படும் பெண்ணைச் சந்திக்கிறார்..இடையில் சில வேலைகளைச் செய்தாலும் எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவரால் முடிவதில்லை ..இறுதியில் சார்லியும் அந்த பெண்ணும் இணைவதோடு படம் முடிகிறது

இந்தப் படத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை .. தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்க ஒரு திட்டம் கொண்டு வருவார்கள் தொழிலாளர்கள் உணவிற்கு செல்வதால் நேரம் விரயமாகிறது .அதனால் உற்பத்தி பாதிக்கிறது ..அந்த நேரத்தை மிச்சப் படுத்த தொழிலாளி வேலை செய்து கொண்டு இருக்கும் போதே அவனுக்கு உணவளிக்கும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி இருப்பார்கள்.. அந்த இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒரு தொழிலாளியை வைத்து சோதித்துப் பார்ப்பார்கள் அந்த தொழிலாளி நம்ம சாப்ளின் தான் .. சோதனை தோல்வியில் முடிந்தாலும் சாப்ளினுக்கும் இயந்திரத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டம் நம்மை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கிறது . இன்றைக்கு இந்தப் படம் நமக்கெல்லாம் ஒரு மன நல மருத்துவர் என்று சொன்னால் அது மிகையாகாது

தி கிட் ( The kid)

தாயால் அனாதையாக விடப்பட்ட குழந்தைக்கும் , அந்தக் குழந்தையை கண்டெடுக்கிற நாடோடிக்கும் இடையேயான அழகான உறவை கண்ணீரும் சிரிப்பும் கலந்து சித்தரிக்கிறது தி கிட்.

நாடோடியால் கண்டெடுக்கப்பட்ட குழந்தை வளர்ந்து சிறுவனாகிறான். நாடோடியின் வேலை உடைந்த ஜன்னல்களின் கண்ணாடியைச் சரி செய்வது .. சிறுவன் நாடோடியிடம் இன்றைக்கு எந்தத் தெருவில் வேலை என்று கேட்கிறான். நாடோடி ஒரு தெருவைச் சொல்கிறான். இருவரும் வேலைக்குச் செல்கின்றனர் .. முதலில் சிறுவன் யாருக்கும் தெரியாமல் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடியை உடைப்பான் ..

சரியாக அந்த நேரத்தில் நாடோடி அந்தப்பக்கம் வருவான். உடைந்த கண்ணாடியை சரிசெய்வார்.. கொஞ்சம் பணம் கிடைக்கும்.. இதுதான் இவர்களின் அன்றாட வேலை ..இப்படி சிறுவனும், நாடோடியுமான சார்லியும் படம் முழுவதும் தங்களின் சேட்டை களாலும்,குறும்புகளாலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். இறுதியில் அந்தச் சிறுவன் தாயுடன் இணைவதோடு  படத்தை முடித்திருப்பார் சார்லி சாப்ளின்.

சிட்டி லைட்ஸ் ( city lights )

இந்தப் படத்தில், நாடோடிக்கு பூக்கடை நடத்தும் பார்வையற்ற பெண்ணின் மீது காதல் வருகிறது.. சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடோடி தன் காதலியைப் பிரிய நேரிடுகிறது .. காதலிக்குப் பார்வை கிடைக்கிறது...நாடோடி காதலி இருக்கும் திசையில் ஏதேச்சையாக வருகிறான் .. நாடோடி தன் காதலியை அடையாளம் கண்டுகொள்கிறான் .. காதலியால் அடையாளம் காணமுடிவதில்லை.காதலி, நாடோடியை பிச்சைக்காரன் என்று நினைத்து அவன் கையைப் பிடித்து காசு போடுகையில் .. பார்வை இல்லாதபோது முத்தமிட்ட தன் காதலனின் கை என்று உணர்கிறாள். அவனை அடையாளம் கண்டு கொள்கிறாள் . இருவரும் இணைகிறார்கள் .. காதலை வார்த்தைகள் இல்லாமல் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்திய இத் திரைப்படம் நகைச்சுவை கலந்த காதலைப் பற்றிய படங்களில் சிறந்த படமாக எப்போதுமே நிலைத்திருக்கும்.

படத்தில் சார்லியின் நண்பனாக ஒரு பணக்காரன் இருக்கிறான். அவன் போதையில் மட்டுமே சார்லியை அடையாளம் கண்டு கொள்வான். போதை தெளிந்தவுடன் சார்லியை மறந்துவிடுவான். சார்லிக்கும் , அவனின் பணக்கார நண்பனுக்கும் இடையேயான காட்சிகள் ரகளையாக இருக்கும். தன் காதலியின் பார்வையை சரிசெய்ய தேவைப்படும் பணத்துக்காக சார்லி குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வார். திரைப்பட வரலாற்றில் மிகுந்த நகைச்சுவையான காட்சிகளில் ஒன்று அந்தக் குத்துச் சண்டைக் காட்சி. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மட்டுமில்லாமல் காதலின் உன்னதத்தை அறிந்து கொள்ளவும் இந்தப் படத்தை நாம் இன்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தப் படங்களுடன் ஹிட்லர் காலத்திலேயே ,ஹிட்லரைப் பற்றிய படமான தி கிரேட் டிக்டேட்டர், கடும் குளிரில் தங்கத்தைத் தேடிச் செல்லும் பயணத்தை மையமாக கொண்ட கோல்டு ரஷ் மற்றும் சர்க்கஸ் போன்ற படங்களையும் அவசியம் நாம் பார்க்க வேண்டும். இது போக ஏராளமான குறும்படங்களையும் சார்லி சாப்ளின் எடுத்திருக்கிறார். இவையெல்லாம் இன்றைக்கு இணையத்தில் கிடைக்கின்றன மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான மனிதனாக வாழ்வதற்காக நாம் சார்லி சாப்ளினின் படங்களை இன்றைக்கு பார்க்க வேண்டியிருக்கிறது.

-சக்திவேல்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்