கேன்ஸ் விருது வென்ற பெண் இயக்குநருக்கும் ‘தி காட்ஃபாதர்’ படத்திற்கும் என்ன தொடர்பு?

கேன்ஸ்

பிரமாண்ட திரைப்பட விழாக்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் திறமையான புதிய கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள். ஆனாலும் அவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருக்கும். நடிப்பைத் தவிர்த்து, பெண்கள் திரைத்துறையில் விருது பெறுவது மிகவும் அரிதானதே. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தி பிக்யூலெட் (The beguiled) என்ற திரைப்படத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த சோபியா கப்போலா (Sophia Coppola) எனும் பெண் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றிருக்கிறார். கேன்ஸ் திரைப்பட வரலாற்றில், இந்த விருதை பெண் இயக்குநர் வென்றிருப்பது இதுவே இரண்டாம் முறை! இதற்கு முன், கடந்த 1961-ம் ஆண்டு, ரஷியாவைச் சேர்ந்த யூலியா சொல்ண்ட்சேவா என்ற பெண் இயக்குநர்தான் முதன்முறையாக பெற்றிருந்தார். சுமார் 71 ஆண்டுகளாகியிருக்கிறது மீண்டும் ஒரு பெண் இந்த விருதைப் பெறுவதற்கு.

கேன்ஸ் விருது பெற்ற முதல் அமெரிக்க பெண் இயக்குநரும் சோபியாதான்! முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் இந்த விருதைப் பெற்ற சோபியா கடுமையான விமர்சனங்கள், கேலி, கிண்டல்களை எதிர்கொண்டுதான் தன் திரையுலக வாழ்க்கையைத் கேன்ஸ் விருதுதொடங்கினார் சோபியா.

உலக சினிமா வரலாற்றில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய ‘தி காட்ஃபாதர்’ திரைப்படத்தை இயக்கிய ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கப்போலா (Francis Ford Coppola) இவரின் தந்தை! அவர், தி காட் ஃபாதர் திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த நாட்களில்தான் சோபியா பிறந்தார். பிறந்த சில மாதங்களிலேயே அந்தப் படத்தில் நடித்தார் சோபியா. அதனைத் தொடர்ந்து ‘தி காட்ஃபாதர்’ படத்தின் மூன்று பாகங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவற்றில் கிடைத்த புகழ் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. 

திரைப்படங்களில் மிகவும் மோசமாக நடித்தவர்களுக்காக  வழங்கப்படுவது கோல்டன் ராஸ்பேரி விருது. 1990-ம் ஆண்டு, “மோசமாக நடித்த துணை நடிகை”, “மோசமாக நடித்த புதுமுகம்” ஆகிய விருதுகள் சோபியாவுக்கு வழங்கப்பட்டன. இது, சோபியா மனதை உறுத்தச் செய்தது. தனக்கு பிடித்தமான வேலையைத்தான் செய்கிறோமா என்ற குழம்பினார். ஒரு கட்டத்தில், அவர் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதைப் பற்றி அவர், ஒரு முறை கூறும்போது, “என் நடிப்பின்மீது பல விமர்சனங்கள் வருகின்றன. நான் நடிகையாக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பத்திரிகைகள் என் நடிப்பைத் தாக்கி எழுதும்போது, அது என்னைப் பாதிக்கிறது. ஆனால், என்னை நிலைக்குலைய வைக்கவில்லை.” என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார். 

அதன் பிறகு, தனது தந்தையைப் போலவே, திரைப்படம் இயக்கத் தொடங்கினார். “லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்” (lost in translation), தி வெர்ஜின் சூசைட்ஸ் (The Virgin Suicides), சம்வேர் (somewhere) ஆகிய படங்களை இயக்கினார். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்ணியத்தின் நுணுக்கங்களைப் பேசுவதாகவே இருந்தன. கேன்ஸ் விருது வென்ற ’தி பிக்யூலெட்’ திரைப்படமும் பெண்களுக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்களைப் பற்றியே பேசுகிறது. போரில் காயப்பட்ட  அமெரிக்க வீரன் ஒருவன், பெண்கள் தங்கிப்படிக்கும் பள்ளியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறான். அப்போது அங்கிருக்கும் இளம்பெண்களுக்கும் அவனுக்கும் இடையே நிகழும் உணர்வுபூர்வமான தருணங்களைச் சொல்வதாக உருவாக்கியிருக்கிறார் சோபியா. 1966-ம் ஆண்டு தாம்ஸ் பி.கல்லினன் (Thomas P.Cullinan) எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம், இம்மாதம் 23-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.  

’தி பிக்யூலெட்’ திரைப்படத்தின் டிரெய்லர்  பார்க்க:

 

பாலின சமத்துவத்தை நிலைநாட்ட சர்வதேச சினிமா இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. ஆனால், சோபியா வென்ற இந்த விருது, பெண் இயக்குநர்களுக்கு பெரும் நம்பிக்கையாக அமைந்திருக்கிறது என்பதில்லை ஐயமில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!