Published:Updated:

ஊரையே அசத்தும் சமையல் மாஸ்டர் 'செஃப்' எலி! #Ratatouille #MovieRewind

சுரேஷ் கண்ணன்
ஊரையே அசத்தும் சமையல் மாஸ்டர் 'செஃப்' எலி! #Ratatouille #MovieRewind
ஊரையே அசத்தும் சமையல் மாஸ்டர் 'செஃப்' எலி! #Ratatouille #MovieRewind

சமையல் அறையில் ஓர் எலியை, திடீரென்று பார்த்தால் பொதுவாக நம்முடைய உணர்ச்சி என்னவாக வெளிப்படும்? பயம், அருவருப்பு, எரிச்சல், கோபம் ஆகியவை கலந்து வரும்தானே? அந்த எலிகள், நம்முடைய உணவைத் திருடி தின்கின்றன; நாசம் செய்கின்றன; நோய்களைப் பரப்புகின்றன என்பன போன்ற காரணங்களால் அவற்றை உடனடியாக அடித்துத் துரத்துவோம் அல்லது கொல்ல முனைவோம், இல்லையா? எலிகள் மீதுள்ள இப்படிப்பட்ட எதிர்மறை உணர்ச்சியும் வெறுப்பும் Ratatouille திரைப்படத்தைப் பார்த்தபிறகு குறிப்பிட்ட அளவுக்காவது நமக்குள் குறையக்கூடும். நகைச்சுவையோடு சமையல் திறனின் மூலம் அப்படியொரு பிரியத்தை ஏற்படுத்தி விடுகிறது இதில் வரும் ரெமி என்கிற அனிமேஷன் எலி.

 ரெமி என்கிற குட்டி எலி, இதர எலிகளை விட வித்தியாசமானது. இதற்கு நுகரும் திறன் அதிகம். அது மட்டுமல்ல, ‘உணவுப் பொருட்களைத் திருடி உண்ணக்கூடாது’ என்கிற வித்தியாசமான கொள்கையையும் கொண்டது. ‘குப்பையில் அழுகிக்கிடக்கும் உணவை, இதர எலிகள் சாப்பிடுவதை ஆட்சேபிக்கிறது. இதற்கு மாறாக, உணவைப் பல்வேறு முறைகளில் கலந்தும் சுவையாகச் சமைத்தும் சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்கிறது. அவற்றைப் பரிசோதனை செய்தும் பார்க்கிறது. 

Auguste Gusteau என்கிற சமையல் கலைஞரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரெமி ஆவலுடன் கவனிக்கிறது. ‘Anyone can cook’ என்கிற அவர் எழுதிய பிரபலமான புத்தகத்தை வாசித்து, பல்வேறு சமையல் நுட்பங்களை அறிந்து கொள்கிறது. 

ஒரு நாள் – சந்தர்ப்ப சூழலால் தன்னுடைய குடும்பத்தையும் எலிக்கூட்டத்தையும் விட்டுப் புரிய நேரும் ரெமி, வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பி பாரிஸ் நகரத்தை வந்தடைகிறது. அது ஒதுங்குமிடம் ஒரு ரெஸ்ட்டாரண்ட். ஆம், ரெமியின் ஆதர்ச நபரான Auguste Gusteau-ன் உணவகம்தான் அது. பிரபல உணவு விமர்சகர் ஒருவர், இந்த உணவகத்தைப் பற்றிச் சற்று எதிர்மறையாக எழுதிவிட அதன் புகழ் குறைகிறது. அந்தக் கவலையில் Auguste Gusteau இறந்து விடுகிறார். 

உணவகத்தினுள் என்ன நடக்கிறது என மறைந்திருந்து பார்க்கிறது ரெமி. Alfredo Linguini என்கிற உதவாக்கரை இளைஞன் அங்குப் பணிக்குச் சேர்கிறான். தலைமைச் சமையல்காரரரான ஸ்கின்னர், அரைமனதாக அவனை எடுபிடி வேலைக்குச் சேர்க்கிறார். ஒருநாள் அந்த இளைஞன், தயாராகிக் கொண்டிருக்கும் சூப் பாத்திரத்தைத் தவறுதலாகத் தள்ளி விட்டு, பிறகு அதைச் சரி செய்தவற்காகப் பயந்துபோய் எதை எதையோ அதில் போடுகிறான். 

இதை ஒளிந்திருந்து பார்க்கும் எலி, பதறிப் போய் தன்னுடைய சமையல் திறமையின் மூலம் சூப்பின் சுவையைச் சரியாக்குகிறது. புதிய இளைஞன் சூப்பில் எதையோ கொட்டி விட்டான் என்கிற கோபத்துடன் எல்லோரும் இருக்கும் போது, தற்செயலாக வாடிக்கையாயளர்களிடம் செல்லும் இந்த ‘புதிய சூப்’ மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. எலி தயாரித்த உணவின் எல்லாப் புகழும் இளைஞனுக்கே கிடைக்கிறது. 

எலிதான் தமக்கு உதவி செய்தது என்பதைக் கண்டுகொள்ளும் இளைஞன், அதைத் தன்னோடு வைத்துக் கொள்கிறான். இளைஞனின் தலையில் ஒளிந்து கொள்கிறது எலி. அது தரும் ஆணைக்கேற்ப சமையல் செய்து மேலும் புகழை அடைகிறான்.

புதிய இளைஞன் அடையும் வரவேற்பைக் கண்டு எரிச்சலாகும் ஸ்கின்னர் அவனை வெளியேற்ற முடியுமா என்று பார்க்கிறார். அவனுக்கு எலி உதவுவதைக் கண்டு திகைப்படைகிறார். இதற்கிடையில் Auguste Gusteau-ன் மகன்தான் இளைஞன் என்கிற உயில் கிடைக்கிறது. அதை மறைத்து விட்டு எலியையும் இளைஞனையும் ரெஸ்ட்டாரண்ட்டை விட்டு வெளியேற்ற அவர் சதி செய்கிறார்.

 தலைமை சமையல் கலைஞரின் சதி என்னவானது? உண்மையில் எலிக்குச் சேர வேண்டிய புகழை எடுத்துக் கொள்ளும் இளைஞன் என்னவானான் என்பது போன்ற சம்பவங்களை நகைச்சுவை வழிய வழிய சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்குவதில் விற்பன்னர்களான பிக்ஸார் நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது.. எனவே, ஒவ்வொரு பிரேமும் வண்ணமயமாகவும் பிரமிக்க வைக்கும் துல்லியத்துடனும் இருக்கிறது. 

அனிமேஷனுக்கு எலியை விடவும் மிகவும் பொருத்தமான விலங்கினம் வேறெதுவும் இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. நடைமுறையில் நாம் ஒரு எலியைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாலே போதும், அதன் துறுதுறுப்பான ஓட்டமும் வளைந்து வளைந்து ஒளிந்தோடும் திறனும், நடுங்கும் மீசையுடன் சூழலைச் கூர்ந்து கவனிக்கும் வேடிக்கையும் என... பார்க்கவே ஜாலியாக இருக்கும். சுட்டி எலி மற்றும் குறும்பு பூனையை வைத்து உருவாக்கப்பட்ட ‘டாம் & ஜெர்ரி’ கார்ட்டூனை அறியாதவர்களே இருக்க முடியாது என்பதை இங்கு நினைவுகூரலாம். 

எனவே எலியின் உருவத்தைக் கொண்டு எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சுவாரஸ்யமான கற்பனையுடன் விளையாடியிருக்கிறார்கள். எலியின் பார்வையிலிருந்தும் அதன் வேகமான அசைவுகளிலிருந்தும் பல காட்சிகள் அபாரமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இளைஞனின் தலைமுடியைத் திசைக்கொன்றாக இழுப்பதின் மூலம் ரெமி தரும் ஆணைகளும் தன்னுடைய சமையல் குருவின் ஆவியுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்துவதும் அட்டகாசம். 

எலிக்கூட்டம் ஓடும் வெள்ளத்தில் தப்பிக்கும் காட்சி, ரெமி சமையல் அறையில் இயங்கும் லாவகமான காட்சிகள், உயிலை எடுத்துக் கொண்டு ஸ்கின்னரிடமிருந்து ரெமி தப்பிப்பது, ‘ ஓர் எலியின் தலைமையில் பணிபுரிவதா என்கிற வீம்புடன் மற்ற பணியாளர்கள் வெளியேறும் போது ரெமியின் நண்பர் கூட்டம் சமையல் அறையில் வந்து உதவும் காட்சி என்று பல விஷயங்கள் நம்மைக் கவர்கின்றன. 

Ratatouille என்கிற பிரெஞ்சு வகை உணவின் பெயரையே படத்தின் தலைப்பிற்கும் பொருத்தமாக இணைத்துள்ளார்கள். கட்டடத்தின் மேலிருந்து ஈஃபில் டவர் உள்ளிட்டு பாரிஸ் நகரின் அழகை கலை ரசனையுடன் ரெமி ரசிப்பதில் இருந்து விலங்குகளுக்கு உள்ள நுண்ணர்வையும் சித்தரிக்கிறார்கள். 

Michael Giacchino –ன் அற்புதமான பின்னணி இசையுடன் உருவாகியுள்ள இந்த அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளவர் Brad Bird. இந்தத் திரைப்படம் அனிமேஷன் பிரிவில் அந்த வருடத்திற்கான அகாதமி விருதைப் பெற்றுள்ளதோடு, 21-ம் நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள பெருமையையும் அடைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி பார்க்கும் திரைப்படங்களில் இதற்கு தனி இடம் உண்டு.