Published:Updated:

இரட்டைச் சகோதரர்களின் மிரள வைக்கும் அட்டகாசங்கள்! #DespicableMe3

சுரேஷ் கண்ணன்
இரட்டைச் சகோதரர்களின் மிரள வைக்கும் அட்டகாசங்கள்! #DespicableMe3
இரட்டைச் சகோதரர்களின் மிரள வைக்கும் அட்டகாசங்கள்! #DespicableMe3

'Despicable Me' திரைப்படங்களின் வரிசையில் மூன்றாவது பகுதி இது. முந்தைய பாகங்களில், உலகத்தின் மிகப்பெரிய வில்லனாக ஆசைப்படும் க்ரூ, மூன்று சிறுமிகளை மகள்களாகத் தத்தெடுக்கிறார். பிறகு, மனம் திருந்தி வில்லனுக்கு எதிரான குழுவின் ஏஜெண்ட் ஆகிறார். சக ஏஜெண்ட்டான லூசியைத் திருமணம் செய்துகொள்கிறார். வில்லன்களின் தீமைகளைத் தடுக்கிறார். இதன் தொடர்ச்சிதான்  Despicable Me 3.

இந்தப் பாகத்தின் சுவாரசியமான வில்லன், பல்தஸார் பிராட். சிறுவயதில் 'Evil Braat' என்ற தொலைக்காட்சி தொடர்களில் வில்லனாகக் கலக்கியவன். ஆனால், அவன் வளரிளம் பருவத்தை அடைந்துவிட்டதால், தொடர் ரத்து செய்யப்படுகிறது. எனவே, ஹாலிவுட்டின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறான் பிராட். தன் பாத்திரத்தின் தன்மையைப்போலவே நிஜத்திலும் வில்லனாக முடிவுசெய்கிறான். ஹாலிவுட்டை அழிப்பதே அவனது நோக்கம். அதற்கு முன்பு உலகின் மிகப்பெரிய வைரத்தைக் கடத்தி வந்துவிடுகிறான் பிராட். க்ரூ, தனது சாகசங்களால் பிராட்டிடம் சண்டையிட்டு வைரத்தை மீட்டு வருகிறான். ஆனால், வில்லனை அழிக்கத் தவறியதால், அவனது பணி பறிபோகிறது. "போங்கடா, நீங்களும் உங்க வேலையும்'' என்று மனைவியும் கோபத்துடன் வேலையை விட்டு வந்துவிடுகிறாள்.

'இனி பூவாவுக்கு என்ன செய்வது?' என்று அவர்கள் கவலைப்படுவது குழந்தைகளுக்குத் தெரிந்துவிடுகிறது. தங்களின் பொம்மைகளை விற்று குடும்பக் கஷ்டத்தைப் போக்க நினைக்கிறார்கள். க்ரூவின் வேலை பறிபோய்விடுவதால் அவனுக்கு உதவியாக இருக்கும் 'மினியன்ஸ்'களும் 'போய்யா போ' என்று நாக்கை நீட்டி வெறுப்பேற்றிவிட்டுக் கிளம்பிவிடுகின்றன. 

இந்நிலையில், க்ரூ மீட்டுவந்த வைரத்தை பிராட் மறுபடியும் திருடிவிட்ட அதிர்ச்சி செய்தி கிடைக்கிறது. க்ரூ பணியில் இல்லையே என்ன செய்யமுடியும்? அதேநேரம் க்ரூவுக்கு ஓர் ஆச்சரியமான தகவலும் கிடைக்கிறது. அவன் சகோதரன் ஒருவன் ஃப்ரீடோனியா (Freedonia) என்ற இடத்தில் வசதியாக இருக்கிறான், க்ரூவைப் பார்க்கவும் விரும்புகிறான் என்கிற தகவல் வருகிறது. க்ரூவால் நம்பவே முடியவில்லை. தனது தாயைத் தேடிச்சென்று அதுபற்றி விசாரிக்கிறான். 

இரட்டைக் குழந்தைகளான இருவரும், குழந்தைப் பருவத்திலேயே தாய், தந்தையரால் பிரித்து வளர்க்கப்பட்டார்கள் என்கிற ரகசியம் தெரியவருகிறது. தன் சகோதரனைக் காண, குடும்பத்துடன் கிளம்புகிறான் க்ரூ. அந்தச் சகோதரனின் பெயர் த்ரூ. இருவரும் சந்தோஷமாக கட்டியணைத்துக்கொள்கிறார்கள். அங்குள்ள பணக்காரத்தனமான சூழலை க்ரூ நெருடலாக உணர்கிறான். விசாரித்ததில், அந்த ரகசியத்தைச் சொல்கிறான் த்ரூ. பன்றி வியாபாரம் செய்வது சும்மாதான். அவர்களின் தந்தை மிகப்பெரிய வில்லனாக இருந்து நிறையச் சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனாலும், த்ரூவுக்கு மிகப்பெரிய மனக்குறை ஒன்றிருக்கிறது. அவனால் சிறந்த வில்லனாக முடியவில்லை. இறந்துபோன தந்தையும் 'நீ உருப்படாதவன்டா' என்று அடிக்கடி திட்டியிருக்கிறாராம். எனவே, சகோதரனான க்ரூவிடம், ''நாம் இருவரும் இணைந்து மிகப்பெரிய திருட்டு ஒன்றை செய்யலாமா?" எனக் கேட்கிறான்.

வில்லன் பணியை தலைமுழுகிவிட்ட க்ரூ முதலில் மறுத்தாலும், பிறகு ஒப்புக்கொள்கிறான். பிராட் திருடிச்சென்ற, உலகின் மிகப்பெரிய வைரத்தை மீட்பதென்று முடிவுசெய்கிறார்கள். அந்தச் சாகசப் பயணம் எவ்வாறு இருந்தது? பிராட் செய்துவைத்திருக்கும் அதிநவீன பாதுகாப்பு முயற்சிகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? இதில் மினியன்ஸ்களின் பங்கு என்ன என்பதை நகைச்சுவை கலாட்டாவுடன் சொல்கிறது Despicable Me 3.

கூர்மையான மூக்கு, மொட்டைத் தலை, கறுப்பு உடை, கழுத்தில் மப்ளர் என இருக்கும் க்ரூ. அவன் சகோதரன் த்ரூவின் தலையில் முடி இருப்பது மட்டுமே வித்தியாசம். மற்றபடி அச்சு அசலாக க்ரூவைப் போலவே இருக்கிறான். இருவரும் இணைந்து அடிக்கும் லூட்டிகள் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கின்றன. வில்லன் பிராட்டின் பாத்திரம் சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடனமாடிக்கொண்டே எல்லாச் சாகசங்களையும் செய்வது அசத்தல். முட்டாள்தனமான ரோபோ ஒன்று அவனது உதவியாள். சுவிங்கத்தை ஊதி எதிராளிகளை அழிப்பது, வேடிக்கையான உத்தி. இறுதிக் காட்சியில் நடனமாடிக்கொண்டே க்ரூவுடன் சண்டையிடுவது ரசிக்கவைக்கிறது. 

மஞ்சள் நிற தகர டின்களுக்கு கண் முளைத்தது மாதிரியான மினியன்ஸ்களுக்கு உலகம் முழுக்க தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தப் பாகத்தில் அவற்றின் பங்களிப்பு குறைவுதான் என்றாலும், வரும் காட்சிகளில் அதகளம். வழக்கம்போல 'ஜிப்ரிஷ்' மொழியில் பேசி செய்யும் கலாட்டாக்கள் பட்டாசு ரகம்.

சென்ட்டிமென்ட் பகுதிக்கு க்ரூவின் மூன்று மகள்கள். குடும்பத்தின் வறுமையைப் போக்க பொம்மை விற்கும் ஆக்னஸ் நெகிழவைக்கிறாள். யூனிகார்னை தேடி ஆட்டுக்குட்டியைக் கண்டெடுத்து மகிழும் காட்சிகளும் ரசனையானது. புது இடத்தின் கலாச்சாரம் தெரியாமல், சக வயது சிறுவனிடமிருந்து மூத்த பெண்ணான மார்கோ, சீஸ் பெற்றுக்கொள்வதும் பிறகு 'நிச்சயிக்கப்பட்ட' காதலியைத் தேடிவந்து அந்தச் சிறுவன் ஏமாறுவதும் ரகளையானது. மூன்று குழந்தைகளும் தன்னை அம்மாவாக ஏற்றுக்கொண்டதை எண்ணி லூசி மகிழ்ச்சி அடையும் காட்சி நெகிழ்ச்சி. கணவன் க்ரூவுக்கு இணையாக மனைவி லூசி செய்யும் சாகசங்களும் ரசிக்கவைக்கிறது.

Despicable Me வரிசைத் திரைப்படங்களையும் 'மினியன்ஸ்' என்கிற அட்டகாசமான உருவங்களையும் உருவாக்கிய Illumination Entertainment மூன்றாம் பாகத்தையும் தயாரித்துள்ளது. Pierre Coffin மற்றும் Kyle Balda இணைந்து இயக்கியுள்ளார்கள். ஒரு க்ரூ இருந்தாலே ரகளையாக இருக்கும். இதில் இன்னொன்றும் சேர்ந்தால்..? கூடவே மினியன்ஸ்களும். கலாட்டாவுக்குச் சொல்ல வேண்டுமா? 

நகைச்சுவைக்கு குறைவில்லாமல் இருக்கிறது. எப்படித்தான் யோசிப்பார்களோ என்கிற பிரமிப்பை ஏற்படுத்தும் படி சாகச காட்சிகள் உள்ளன. அவை குழந்தைகளை நிச்சயம் ஈர்க்கும்