Published:Updated:

கரையில் திமிறும் மீன்... 3 Days In Quiberon #IFFI2018

கோகுல் பிரசாத்
கரையில் திமிறும் மீன்... 3 Days In Quiberon #IFFI2018
கரையில் திமிறும் மீன்... 3 Days In Quiberon #IFFI2018

You must not quote to me what I once said. I am wiser now.

- Romy Schneider

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்ளில் அக்குறிப்பிட்ட சம்பவங்களின் பின்னணி ஆராயப்பட்டிருக்கும். அச்சம்பவம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்துவிட்ட உந்து சக்திகள் மீது கவனம் குவிக்கப்படும். விதியின் கரங்கள் வாரி அணைத்த மனிதர்களின் அவலமும் அதன் விளைவுகளும் ஒற்றைச் சரடில் கச்சிதமாகக் கோர்க்கப்பட்டு வாழ்வு குறித்த பதற்றமான யோசனைகளை முன்னெடுப்பதே அவற்றின் நோக்கம். சாதனையாளர்களின், பிரபலங்களின், வரலாற்றை உண்டாக்கித் தனதாக்கிய மாமனிதர்களின் வாழ்க்கை சரிதத் திரைப்படங்கள் வேறு விதமானவை. அவர்தம் ஒட்டுமொத்த வாழ்வும் மூன்று மணி நேரத் திரைப்படத்திற்குள் திணறிப் பிதுங்கியவாறு இருக்க, காலப் பெருவெள்ளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் முழுமையடையும் முன்னமே அது கடலைச் சேர்ந்திருக்கும். நரை கூடிக் கிழப் பருவமெய்தி மையக் கதாபாத்திரத்தின் கண்கள் நிலைத்திருக்க ஒரு கிரேன் ஷாட் அல்லது ஓர் அந்திச் சூரியன். சுபம். ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி ஒரு நல்ல உதாரணம். விளிம்புகளின் ஓரங்களை ஒட்டியவாறே தாவித் தாவி கடந்து முன்னகர்ந்து முழுமை கொண்டு விட்டதைப் போன்ற நிறைவைப் புனைந்து வைத்தால் போதும் என நம்புகிற இயக்குநர்கள். தண்ணீர் கொடுத்தே ஏப்பம் விட வைக்கிறவர்கள். உங்களது மேடிட்ட வயிறைத் தடவிக் கொண்டே நீங்கள் வீடு போய்ச் சேரலாம். ஆனால், முழுமை என்றதும் மனக்கண்ணில் எழுவது விளிம்புகளற்ற வட்டம் அல்லவா?

எமிலி அதெஃப் (Emily Atef) இதன் இயக்குநர். நடிகை ரோமியின் (Romy Schneider) கதை. இயக்குநர் ரெனே க்ளெமென்ட்டின் (René Clément) Purple Noon (1960), விஸ்கான்டியின் (Luchino Visconti), Boccaccio '70, Ludwig (1972), ஆர்சன் வெல்ஸின் The Trial (1962) போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்தவர். ஆனால், அவர் பொதுத்திரளிடையே நிலைபெற்று இறுதி வரைக்கும் நினைவு கூரப்பட்டது ரோமியே விரும்பாத 'சிஸ்ஸி' கதாபாத்திரத்திற்காக! தன் நடிப்பாற்றலை உணர்ந்தறிந்த ரோமிக்கு ஓர் அமெச்சூர் கதாபாத்திரத்தின் பிம்பத்தை எந்நேரமும் சுமந்தலைவது என்பது அதீத எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தெருவில், விழாக்களில், பத்திரிகையாளர் சந்திப்பில் என எங்கும் எப்போதும் 'சிஸ்ஸி, சிஸ்ஸி' என்று உற்சாகத்துடன் கூக்குரலிடும் கூட்டம். கை வீசி, தலை சாய்த்து, போலிப் புன்னகைகளை ஒளிர்த்து, முத்தங்கள் பறக்க விடும் வாழ்வை ரோமி வெறுத்தார். மேலதிகப் பணமும் புகழும் ஈட்டித் தந்த ஜெர்மனியை விட்டு வெளியேறி, பரிசோதனை திரைப்பட முயற்சிகளை மேற்கொண்டிருந்த புதுயுக பாரீஸில் குடி புகுந்தார். எழுந்து வந்த புதிய அலையில் கொட்டித் தீர்க்கும் மழையானார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில், இந்தப் படத்தின் திரையிடலின் போதே கெய்ரா நைட்லி (Keira Knightley) நடித்த Colette (2018) படமும் அருகே அமைந்திருந்த இன்னொரு திரையரங்கில் திரையிடப்படவிருந்தது. கெய்ரா நடித்திருக்கிறார் என்பதும் அது ஓர் எழுத்தாளருடைய உண்மைக் கதை என்கிற கதைப் பின்புலமும் ஆர்வத்தைக் கிளர்த்தியது. ரோமியா கோலெட்டா என்கிற ஊசலாட்டத்தின் முடிவில் நான் 3 Days In Quiberon படத்தையே தேர்வு செய்தேன். காரணங்கள் எளிமையானவை. கோலெட் அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம். சில வாரங்கள் பொறுத்திருந்தால் வீட்டிலேயே பார்த்து விடலாம். ஆனால், இயக்குநர் எமிலி அதெஃபின் முந்தைய படங்கள் எதுவும் இணையத்தில் காணக் கிடைப்பதில்லை. இந்தக் கருப்பு வெள்ளைத் திரைப்படம் இணையத்தில் வெளியாகுமா என்பதும் சந்தேகத்திற்குரியது. ஜெர்மனியிலிருந்து உருவாகி வந்த பெண் இயக்குநர்கள் மீது எனக்கிருக்கும் பிரேமை மற்றொரு ஒரு முக்கியக் காரணி. லெனி ரெய்ஃபன்ஸ்தால் (Leni Riefenstahl) தொடங்கி ஹெல்மா சான்டர்ஸ் (Helma Sanders-Brahms), மார்கரெத் வான் ட்ரோட்டா (Maragarethe Von Trotta) வரை நீளும் தொய்வற்ற தரமான தொடர்ச்சி. அதன் மகோன்னத வரிசையில் எமிலியும் நிச்சயமாக இடம் பெறுவார் என்பதை உணர நீண்ட நேரம் எடுக்கவில்லை. விழிகள் மின்ன படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. நடிகை ரோமியின் வாழ்விலிருந்து வெறும் மூன்று நாட்கள். ஜெர்மனியிலிருந்து இரண்டு பத்திரிகையாளர்கள் ரோமியை பேட்டியெடுக்க வருகிறார்கள். அவர்களுடனான உரையாடல் ஊடாக அவளது ஆளுமையும் நினைவுகளும் வெறுமையும் வெளிப்பட்டவாறு இருக்கின்றது. சம்பவங்களை கோர்த்துக் கொண்டு போய் கதாநாயகர்களின் சகல பக்கங்களையும் அரைகுறையாகப் புரட்டித் தொட்டுக் காட்டி மரணத்தில் முடிக்க வேண்டும் என்கிற அசட்டுத்தனம் இல்லை. வருடங்களை அளந்து பார்க்கும் உத்தேசங்கள் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால், வெட்டியெடுக்கப்பட்ட சின்னஞ்சிறிய சதைத் துண்டின் குருதி வாடை நாசியைத் துளைக்கிறது. தன்னுடலே தன் பாகத்தைக் கண்டு அருவெறுக்கும் விசித்திரம். வாழ்வின் தீராத நோய்மை நெருங்குவதற்கான சமிக்ஞை. உதிர்ந்த இறகைக் கொண்டு பறவை அளந்த வானத்தை நம் கற்பனையில் விரிக்கச் செய்யும் வித்தைப் படத்தில் அனாயசமாகக் கூடி வந்திருக்கிறது. ஒரு துளி தேனில் மகரந்தமணிக் காட்டையே காணச் செய்தல். மெல்லிய சுடரொளியில் துலங்கும் அகலக் கருவறை. பிறை நிலவு மிதக்கும் ஆழக்கிணறு. பேட்டிக்குப் பிறகு ரோமிக்கு நிகழவிருப்பதைப் படத்தின் தொடக்கத்திலேயே எழுத்துருவில் காட்டி விடுகிறார்கள். அவளுடைய எதிர்காலத்தை முன்னமே அறிந்துவிட்ட துடிப்பில், ரோமியின் கையறு நிலையைக் காணும் போதெல்லாம் நமக்குள் காருண்யம் பொங்கித் ததும்புகிறது. அவளது வாழ்வை நெருங்கி நின்று அணுகி, மிகுந்த பரிவுடன் அரவணைத்துக் கொள்கிறோம். 

தன்னுள் தானறிந்த மெய்யான சுயத்தின் விசையை, அன்புக்குரியவர்களுக்காக அறுத்துக் கொள்ள நேரிடுபவர்களின் பரிதாப ஓலம் அகத்தின் ஆழத்துள் ஓயாத சுழலை உண்டு பண்ணுகிறது. தன்னுடைய விருப்பத் தேர்வுகளுக்கும் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்குமான அனுசரணைப் போராட்டத்தின் பளு ஏற்றி வைக்கும் அழுத்தங்கள். விருப்பங்கள் சுயநலமாகவும் திணிப்புகள் பிரியத்தின் பரிமாணமாகவும் புதிய பெயர்களைச் சூடிக் கொள்கின்றன. தானொரு சுயநலவாதி எனும் குற்றவுணர்விலிருந்து விடுபடும் பொருட்டு பாவனையாகவே இருப்பினும் பரிந்திருக்கும் பிரியத்தின் கைகளைப் பற்றிக் கொள்ளத் தவிக்கிறோம். எப்பேர்ப்பட்ட மேலான ஆளுமையும் இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப் போனால், மேன்மையுற்றுப் பொலிந்து திரண்ட கலையாளுமைகளிடையே எழும் உறவுநிலை சார்ந்த சிக்கல்கள் மேலும் பன்மடங்கு ஆவேசத்துடன்  உருக்கொள்கின்றன. அத்தகைய ஆவேசப் பொழிவை எதிர்கொள்ளத் திராணியற்று சரணடைபவர்கள் தான் அநேகம் பேர். தம்மைக் கலைத்துப் போட்டு, விடைத்துக் கொள்ளும் அடியாழ விருப்புகளைக் கவனத்துடன் விலக்கி, 'சமூகம் என்கிற நான்கு பேர்' ஏற்றுக் கொள்கிற ஒழுங்குகளை மட்டும் பொறுக்கி எடுத்து சீராக்கிக் கொள்ள முனைகிறார்கள். ஆனால், வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் உருமாற்றங்களின் வரவினால் சிதறுண்டு தவிக்கும் அவர்தம் எண்ணக் கொப்பளிப்புகளில் செதிற்கல் பாய்கிறது. ஆளுமைச் சிதறல் விதிர்க்கும் விரிசல்களுக்குள் சிக்குண்டவர்களின் நெஞ்சத்து அதிர்வுகள் பாளம் பாளமாக வெடித்து வடுக்களாகின்றன.

ரோமிக்கு மட்டுமின்றி, நம் அனைவருக்குள்ளும் கடந்து வந்த பாதை குறித்த சலிப்புகளும் ஏக்கங்களும் வழிதவறி விட்ட அங்கலாய்ப்புகள் தரும் குற்றவுணர்ச்சியும் ஊளையிட்டவாறு இருக்கின்றன. அதன் எதிரொலிப்புகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி, எதிர்காலம் இன்னும் மிச்சமிருக்கிறது எனும் ஒரே வசீகர நம்பிக்கை. நிகழ்காலத்தை தகவமைத்துக் கொண்டு பழைய களங்கங்களில் இருந்து மீண்டெழ அவள் முயற்சிக்கும் போதெல்லாம் பழக்கத்திற்குச் சுகப்பட்டுவிட்ட உள்ளுறைப் பேய்கள் வெற்றுச் சமாதானங்களை நாடுகின்றன. அவற்றை அடக்கி ஆள விழைகையில் மன அழுத்தங்கள் வீரிட்டுப் பெருகுகின்றன. தூக்கமற்ற இரவுகள். தகித்தணைந்த வெப்பச் சாம்பலை அவளது மேனியெங்கும் மூர்க்கத்துடன் பூசிச் செல்லும் நினைப்புப் புரவி. அப்போதெல்லாம் ஒரு முழு போத்தல் சாராயம் அவசியமாகிறது. நுரையீரல் நிறைத்து வெளியேறும் புகை காற்றின் அடர்த்தியைக் கூட்டுகிறது. தவிர்க்க நினைத்ததெல்லாம் மனக்குரங்கின் சொறிதல்களுக்கு ஒப்புக்கொடுக்கின்றன. மறப்பதே நினைப்புதான். மாறுதல்களை உதறித்தள்ளி ஒதுக்கி விட்டு அவள் தனது இயல்பான சந்தோஷங்களுக்கு தாற்காலிமாகத் திரும்புகிறாள். சுய அழிப்பின் மென்சோக வருடல்களுக்கு இளகிக் கொடுத்து சிலிர்க்கிறாள். உற்சாக மிதப்பின் ஜுவாலை அவளது உரோமங்களில் அடர்ந்திருந்த சாம்பலை மீண்டுமொருமுறை தீப்பிடிக்கச் செய்கிறது. 

தனது மகனைத் தக்கவைத்துக் கொள்ளவே தன்னை உரித்துப் போட்டு தானல்லாத ஒன்றாய் உருமாறத் தடுமாறுகிறாள். தான் 'திருந்தி' ஸ்திரப்பட்டு விட்டதைச் சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளைப் பேட்டி எடுக்கவே ராபர்ட் லெபெக்கும் மைக்கேலும் வந்து சேர்கிறார்கள். அவளைச் சீண்டி தந்திரத்துடன் ஊடுருவி கசப்புகளை வெளிக்கொணர்ந்து அவளது இருண்ட பக்கங்களை வாசகருக்கு விற்றுப் பரபரப்பாக்குவதே மைக்கேலின் அசலான நோக்கம். நட்பின் போர்வையில் அமிழ்ந்து வரும் மைக்கேலின் நைச்சியப் பேச்சுகளைக் குறித்து ரோமியின் தோழி ஹில்டெ எச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துவதோ அவை குறித்து அலட்டிக் கொள்வதோ அவளது டிஎன்ஏ.வில் இல்லை. 'இது எல்லாம் வரட்டுமே. இவை அனைத்தும் என்னுள் உணரும் நான் அல்லவா?' என அவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடுகிறாள். 'இதைச் சொல்லாதே', 'ஐயோ, இதைப் போய் பத்திரிகையாளனிடம் சொல்லலாமா?' என நாம் பதைபதைத்துக் கொண்டிருக்கும் போதே அத்தனையையும் கொட்டித் தீர்க்கிறாள். மீன்களுக்குப் புழுவாவதன் வாதை. உடலைக் குறுக்கியவாறு அவள் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கையில் சட்டென்று கவியும் உளச்சித்திரம் வேறொன்றைப் புலப்படுத்துகிறது. அவள் அவர்களிடையே நடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது ஆளுமை அசாதாரணமானது. அவள் புழுவாகத் துடிக்க வாய்ப்பே இல்லை. புழுவை மீனுக்குத் தரும் கைகள் அவளுடையவை. சீறிப் புரண்டு வரும் பேரலையானாலும் கரைகளை மீறாத கட்டுப்பாடுடையவள். தன்னை அரிந்தெடுத்து வைத்தாலும் பொதுவெளி அறிய வேண்டியதை மட்டும் அளந்து கொடுக்கத் தெரிந்தவள். ஓங்கியெழுந்து விண்ணை முட்டி நிற்கும் அவளது கட்டமைக்கப்பட்ட பிம்பத்தின் முன் மைக்கேலின் கபடத்தனங்கள் யாவும் செல்லுபடியாவதில்லை.

ஒவ்வொரு வெட்டிலும் முயங்கி வந்திருக்கும் லயம். கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் பளிச்சிடும் ஃபிளாஷ்கள். பேசிக் கொண்டே புன்னகைத்தவாறு போஸ் கொடுக்கும் இலாவகம். ஒவ்வொரு கணமும் மாறி வரும் கதாபாத்திரங்களின் உளவியற் சிக்கல்களைப் பின்தொடரும் பக்குவம். மொத்தத்தில் அபாரமான படம். அலைகள் தாவியடிக்கும் ஈரப் பாறைகள் மீது ரோமி தாவித் தாவி ஓடி விளையாடும் அந்தக் கடைசிக் காட்சியில் பீறிடும் அவளது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் எனும் மன்றாடலின்றி நாம் நிறைவு கொள்ள இயலாது. ஆனால், அதற்குப் பிறகு அவளுக்கு நிகழ்ந்ததெல்லாம் ஊழியின் கொடுங்கனவுகள். பேருவகைப் பாய்ச்சலுடன் அவள் காற்றில் மிதந்திருக்கும் அந்தக் கடைசி ஷாட் எப்போதோ காலத்தில் உறைந்து விட்டது.