
ஸ்ட்ரீம்பாய்
Vikings
வெகுவாக மக்களைக் கவர்ந்த தொடர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால் ரசிகர்களைக் காத்திருக்க வைத்து கடைசி சீசனில் ஏமாற்றியிருப்பார்கள். ஆனால் அப்படியான ஃபினிஷிங் சொதப்பல்கள் இல்லாமல், நல்லபடியாகக் கரையேறுகிறது வரலாற்றுப் புனைவுத் தொடர் `வைக்கிங்ஸ்’.


9-ம் நூற்றாண்டுக்கும்11-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை ஐரோப்பிய வரலாற்றில் `வைக்கிங்ஸ் காலம்' எனக் குறிப்பிடும் அளவுக்கு மொத்த ஐரோப்பாவிலும் ஆதிக்கம் செலுத்திவந்தது வைக்கிங்ஸ் இனம். அதன் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்வதே கதை. நார்வேவில் தொடங்கும் கதை, அப்படியே அன்றைய இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என நகர்ந்து மீண்டும் ஆரம்ப இடத்திலேயே வந்து நிற்கிறது. போர்க்காட்சிகள், மேக்கப், கலை இயக்கம் என எப்போதும் ஸ்கோர் செய்யும் இடங்களில் இம்முறையும் ஸ்கோர் செய்கிறது ‘வைக்கிங்ஸ்.’ ரத்தம் தெறிக்கும் ஒரு தொடருக்கு இப்படி ஒரு சாந்தமான முடிவு இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால், அதையும் ரசிக்கும்படி எடுத்ததில் வெற்றி காண்கிறார்கள். வரலாற்றுப் புனைவுத் தொடர்களில் முக்கியமான இடம் எப்போதும் `வைக்கிங்ஸ்'-க்கு உண்டு.
The White Tiger


புக்கர் பரிசு வென்ற, அரவிந்த் அடிகாவின் `தி ஒயிட் டைகர்' நாவல் திரைப்படமாக `நெட்ஃப்ளிக்ஸ்' தளத்தில் வெளியாகியிருக்கிறது. பெங்களூரில் `தி ஒயிட் டைகர்' என்னும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் பல்ராம் என்ற தொழில்முனைவோரின் கதை. ஏழ்மை சூழ்ந்த ராஜஸ்தான் கிராமத்திலிருந்து ஒரு பணக்காரக் குடும்பத்துக்கு டிரைவர் ஆகும் பல்ராம், எப்படி தந்திரங்களால் தொழில் முனைவோராக மாறுகிறான் என்பதைச் சொல்லும் கதை. `புதுப்பேட்டை', `சூது கவ்வும்' என்று நாம் பல தமிழ்ப்படங்களில் பார்த்த கதை. ஆனால் அந்த விறுவிறுப்புகூட ஒயிட் டைகரில் இல்லை. படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் ராஜ்குமார் ராவ் மற்றும் பிரியங்கா சோப்ராவின் நடிப்பே நிறைவளிக்கிறது. முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதர்ஷ் கௌரவ் சில இடங்களில் மிகைநடிப்பை வழங்கியிருக்கிறார். ஏழைகள் முன்னேறினாலே அது தந்திரத்தின் மூலமாகத்தான் நடக்கும் என்று இந்தக் கதை புரிந்துகொள்ளப்படும் அபாயமுண்டு. தன்னை அடிமையாக நடத்துபவர்களைவிட ஜனநாயகத்துடன் நடத்தும் முதலாளியை பல்ராம் ஏமாற்றிப் பணம் பறிப்பது வாழ்வின் மோசமான அம்சம்.
Is Love Enough? SIR


காதல் என்ற மனித குலத்தின் அற்புதமான அழகியல் உணர்வைப் பல்வேறு கதைக்களங்களில் பார்த்துப் பழகிய நமக்கு இன்னொரு வித்தியாசமான களத்தில் அறிமுகம் செய்து வைக்கிறது `Is Love Enough? SIR’ என்ற படம். மும்பையின் வானுயர்ந்த அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் ஓர் இளைஞனுக்கும் அதே வீட்டில் வேலை பார்க்க வரும் கிராமத்துப் பெண்ணுக்கும் இடையே இயல்பாய் மலரும் உறவைப் பேசும் கதை. வழக்கமான ‘பணக்காரப் பையன் - ஏழைப் பெண்’ என்ற பாகுபாடு பற்றியெல்லாம் கதையில் பாடமெடுக்காமல் மிக இயல்பாக காட்சிகளின் வழியிலேயே வசனங்கள் அதிகம் இல்லாமலேயே நமக்கு உணர்த்திவிடுகிறார் இயக்குநர் ரொஹெனா! மென்மையான, அதே சமயத்தில் மிக ஆழமான உணர்வுக் கடத்தலை நம்மால் உணர முடிவது திரைக்கதையின் வெற்றி. காதலென்றால் நம்பிக்கையும் புரிதலும் என்ற விஷயத்தை அதிகம் பேசிக்கொள்ளாத ஒரு ஆணையும் பெண்ணையும் வைத்தே நமக்கு விளங்க வைப்பது, படம் முடிந்த பிறகும் சிலிர்க்க வைக்கும் பேரனுபவத்தைத் தருகிறது.
One Night in Miami


மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, ஜிம் பிரவுன், சாம் குக் என அமெரிக்காவின் ஜாம்பவான்கள் நால்வரும் முஹம்மது அலியின் குத்துச்சண்டை வெற்றிக்குப்பின் சந்தித்திருந்தால் என்ன பேசியிருப்பார்கள் என்பதைக் கற்பனையாக விவரிக்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் `ஒன் நைட் இன் மியாமி.’ விடுதலை, அரசியல், விளையாட்டு, இசை என 1960ல் நடக்காத ஒரு சம்பவத்தின் கற்பனை விவரிப்புதான் என்றாலும் படத்தின் ஒவ்வொரு வசனமும் அரசியல்தான். ஆப்ரோ அமெரிக்கர்களைக் கீழாக நடத்தும் அமெரிக்கர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க, கால்பந்து வீரரான ஜிம் பிரவுன் ஆப்ரோ அமெரிக்கர்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைப் பற்றிப் பேசும் காட்சி முக்கியமானது. அதேபோல், ‘மதம் மாறுவதால் நாங்கள் ஏன் எங்களின் விருப்பு வெறுப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும்’ போன்ற வசனங்களும், ‘இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கலாமோ’ என ஏங்க வைக்கிறது. கெம்ப் பவர்ஸ் எழுதிய நாடகத்தினை முன்வைத்து ஆப்ரோ அமெரிக்கப் பெண் இயக்குநரான ரெஜினா கிங் இயக்கியிருக்கும் இப்படம் இந்த ஆண்டின் தவிர்க்க முடியாத மிகச்சிறந்த படைப்பு.