சினிமா
Published:Updated:

சினிமா விகடன் : OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

Finding ‘Ohana movie

12 வயது பிலி, தன் தாய் மற்றும் சகோதரனுடன் கோடை விடுமுறைக்காக ஹவாய் தீவில் உள்ள தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள். கடனில் மூழ்கியிருக்கும் தாத்தா தன் வீட்டையும் நிலத்தையும் இழக்கும் நிலையில் இருக்கிறார். பிலிக்குக் கிடைக்கும் டைரி ஒன்று, பல ஆண்டுகளுக்கு முன் கடற்கொள்ளையர்கள் ஒரு தீவில் விட்டுச் சென்ற புதையலைப் பற்றிப் பேசுகிறது.

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

தாத்தாவின் கடனை அடைக்க, புதையலை எடுக்க முடிவெடுக்கிறது பிலி தலைமையிலான நால்வர் படை. அதில் அவர்கள் வென்றார்களா என்பதை சாகசங்கள், நகைச்சுவைக் கலாட்டாக்கள், காதல் எனக் கலந்துகட்டி 2 மணி நேர விருந்து வைத்திருக்கிறது படம். லாக்டௌன் காலத்தில் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படங்கள் குறைவு. அந்த வகையில் ஹவாய் மக்களின் கலாசாரத்தைப் பொழுதுபோக்குடன் காட்சிப்படுத்தியிருக்கும் இது, வரவேற்கத்தக்க முயற்சி. இண்டியானா ஜோன்ஸ், கூனீஸ், ஜூராசிக் பார்க், காட்ஸில்லா என்று பல படங்களைப் பற்றிக் கதாபாத்திரங்களே பேசிக்கொள்வது சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பு. குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து மகிழச் சிறந்த ஆப்ஷன் இந்த ‘Finding ‘Ohana.’

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

Below Zero movie

கைதிகளை இரவில் வேறு இடத்துக்கு மாற்றும் பொறுப்பு காவல்துறை அதிகாரி மார்ட்டினுக்கு வருகிறது. வெவ்வேறு குற்றப் பின்னணிகொண்ட அந்தக் கைதிகளுடன் செல்லும் வண்டியை நடுக்காட்டில் சிக்க வைக்கிறார் மிகல். நடுங்கும் குளிரில், மிகல் ஏன் அப்படிச் செய்தார், அடுத்து என்ன நடக்கிறது என்பதை எமோஷனல் த்ரில்லராகச் சொல்கிறது ஸ்பானிஷ் மொழித் திரைப்படமான Below Zero. உறையும் பனி, பூட்டிய வாகனம், அடுத்தடுத்து கொலைகள் என த்ரில்லருக்கான எல்லா செட் பிராப்பர்ட்டிகளுடன் ஒரு கதை, அதைத்தாண்டி ஆரம்பக் காட்சியையும் இறுதிக் காட்சியையும் இணைக்கும் ப்ளாஷ்பேக் என இயக்குநர் லூயி க்யுலெஸ் ஒவ்வொரு நிமிடமும், அதற்கான டெம்போவை அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார். சிற்சில லாஜிக் விஷயங்களுக்கு ஓய்வு கொடுத்தால், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த த்ரில்லரை அனைவரும் ரசிக்கலாம்.

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

movie ‘கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்’.

‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபியின் படம். கேரளத்தைச் சேர்ந்த இளைஞன் ஜோஸ்மன், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மெக்கானிக் என்று சின்னச்சின்ன வேலைகள் செய்கிறான். தந்தை இறந்தபிறகு வீட்டுக்கடன்களையும் தங்கை கல்விச்செலவையும் சுமப்பவன். ஒருகட்டத்தில் தன் தந்தையின் பரிசான புல்லட்டை விற்கச் செல்லும்போது, அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தியை இந்தியா முழுவதும் சுற்றிக்காட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. ராஜஸ்தானில் இருவரின் உடமைகளும் திருடு போகின்றன. ‘பணம் மட்டுமே பிரதானம்’ என்னும் அமெரிக்க கேத்திக்கும், குடும்ப உறவுகளைப் பெரிதாக நினைக்கும் ஜோஸ்மனுக்கும் இடையில் ஏற்படும் முரணும் நெருக்கமும்தான் படம். தப்புத்தப்பான ஆங்கிலம் பேசுவதில் தொடங்கி இயல்பான நகைச்சுவையில் கவர்கிறார் டொவினோ தாமஸ். அலட்சியமான அமெரிக்கப்பெண்ணாக ஜார்விஷ் பாத்திரத்தில் பொருந்துகிறார். பீர் பாட்டில் பிரசாதமாகத் தரும் ராஜஸ்தான் கோயில், வடநாட்டுச் சடங்குகள், அழகான ஒளிப்பதிவு ஆகியவை கவர்கின்றன. ஆனால் கேத்தி இந்தியப் பண்பாட்டின் ‘பெருமை’யை உணரும் நாடகியக் காட்சிகள், ராஜஸ்தான்காரர் திடீரென்று மலையாள சேட்டனாக மாறுவது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகள் பலவீனங்கள்.

பாரம்பரியம், பண்பாடு ஆகியவை பெண்களை எப்படிச் சுரண்டுகின்றன என்று படமெடுத்த இயக்குநரின் படம் என்பதை மறந்துவிட்டால் இதை ரசிக்கலாம்.

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

movie Ma Rainey’s Black Bottom

திறமையைத் தாண்டி உங்களின் நிறம், மொழி, இனம் போன்றவற்றால் உங்களை ஒரு குழு உதாசீனம் செய்தால், அது எவ்வளவு ரணம் தரும் என்கிற அரசியலைப் பேசுகிறது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Ma Rainey’s Black Bottom. சிகாகோவில் ஆப்ரோ அமெரிக்கப் பெண்மணியான மா ரெய்னியின் பாடல் பதிவு நடைபெறவிருக்கிறது. அவர் குழுவில் இருக்கும் டிரம்பட் இசைக்கலைஞரான லெவிக்கோவுக்குத் தனியாகக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என ஆசை. பாடல் பதிவின்போது நடக்கும் ஈகோ யுத்தங்களைத் தாண்டி, படம் பேசும் அரசியல் அசுரத்தனமானது. மறைந்த பிளாக் பேந்தர் நாயகன் சாட்விக் போஸ்மென், லெவியாகக் கலக்கியிருக்கிறார். ‘இந்தக் கடவுள்கள் ஒருபோதும் ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு உதவியதில்லை’ என அழுதுகொண்டே சாட்விக் சொல்லும் ப்ளாஷ்பேக் கதையில் அவ்வளவு வலி! மா ரெய்னி என்கிற ப்ளூஸ் பாடகிக்காக உடலைப் பருமனாக்கி அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார் வயோலா டேவிஸ். ஆப்ரோ அமெரிக்கர்கள் பற்றிப் பல்வேறு மேடை நாடகங்களை எழுதிய ஆகஸ்ட் வில்சனின் நாடகத்தைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் ஜியார்ஜ் சி வொல்ஃப். நடிகர்களின் அட்டகாச நடிப்புக்காகவும், 1930களின் ஆப்ரோ அமெரிக்க மக்களின் நிலைகுறித்தும் அறிய இப்படத்தினைப் பார்க்கலாம்.