
ஸ்ட்ரீம் பாய்
கோயன் சகோதரர்கள் உருவாக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான பிளாக் காமெடி வகைத் திரைப்படம் Fargo.

இது ‘ஓர் உண்மைக் கதை’ என்று முதல் காட்சியிலிருந்து விளையாட்டுக் காட்டி நம்மை ஏமாற்றத் தொடங்கி தற்போது நான்காவது சீசன் வரை வெப்சீரிஸாகவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனும் வெவ்வேறு காலகட்டம், கதைக்களம், கதைமாந்தர்கள் என அமைந்திருக்கும். 1950-ம் ஆண்டு காலப்பகுதியில் கன்ஸாஸ் நகரத்தில் மாபியா குழுக்களுக்கிடையே நடைபெறும் முட்டல் மோதல்கள்தான் நான்காவது சீசனின் கதை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டியது கொரோனாக் குழப்பத்தில் தற்போது வெளியாகியிருக்கிறது.

ஒரே ஹீரோ, ஒரே மொழி, இரண்டு வெர்ஷன்கள் என உலக சினிமா வரலாற்றில் முதல்முறை என்னும் சாதனையைச் செய்திருக்கிறது பாலாவின் ‘வர்மா.’ ஆதித்ய வர்மா ஏற்கெனவே திரையரங்கில் வெளியாகியிருக்கும் சூழலில், வர்மா இந்தியாவில் Shreyas ET என்னும் தளத்தில் வெளியாகியிருக்கிறது. கதை பல முறை ஏற்கெனவே படித்த தேவதாஸ் - பார்வதி காதல் கதைதான். கோபம் அதிகம் கொள்ளும் வர்மாவை கல்லூரியை விட்டு வெளியேறச் சொல்கிறது நிர்வாகம். ஜூனியர் மேகா வாசுதேவனைப் பார்த்ததும் கோபம் தற்காலிகமாகப் பறந்துபோய்விடுகிறது வர்மாவுக்கு. கோபத்துக்கும் காதலுக்கும் இடையே இவர்கள் இழந்ததைப் பற்றிப் பேசுகிறது வர்மா. அர்ஜுன் ரெட்டியில் நாம் பார்த்த, அதே ஆணாதிக்கம் மிகுந்த கதை. ஆதித்ய வர்மா படத்தில் நடித்த அளவுக்குக்கூட துருவ் விக்ரமுக்கு இதில் நடிப்பு கைகூடவில்லை. மற்றவர்களின் நடிப்பு இன்னும் மோசம். ஈஸ்வரி ராவ் மட்டும்தான் அனுபவ நடிப்பால் ஆச்சர்யப்படுத்துகிறார். மூன்று மணி நேரம் நீளும் ஒரிஜினல் வெர்ஷனை, இரண்டு மணி நேரமாக இயக்குநர் பாலா சுருக்கி, வேறொரு படத்தைக் கொடுத்திருப்பது மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல்.

நைஜீரியாவில் நடக்கும் அனுமதியற்ற பாலியல் கொடுமைகளை வெளிக்கொண்டு வர, பத்திரிகையாளர் ஒருவர் அங்கு பாலியல் தொழிலாளியாக அண்டர்கவரில் செல்கிறார். அங்கு அவருக்கு நடக்கும் சிக்கல்கள், மனிதக் கடத்தல் போன்றவற்றைப் பற்றி பகிரங்கமாகப் பேசுகிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் நைஜீரிய சினிமாவான oloture. வறுமை, வேலைவாய்ப்பின்மை, படிப்பறிவின்மை எனப் பல்வேறு காரணங்களால், நைஜீரியாவில் இருந்து ஐரோப்பிய தேசங்களுக்குப் பெண்கள் கடத்தப்படுகிறார்கள். பாலியல் கொடுமைகளைக் கடந்து, கடத்தப்படும் இடத்தில் நடக்கும் குரூரங்கள் அச்சமுறச் செய்கின்றன. 2014-ம் ஆண்டு ஒரு பெண் பத்திரிகையாளருக்கு நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், நைஜீரிய தேசத்தின் இருண்ட பக்கங்களை நமக்குக் காட்டுகிறது. அடல்ட் காட்சிகளைப் புகுத்தாமல், பிரச்னையை முன்வைத்து கவனிக்க வைக்கிறது இத்திரைப்படம்.

இந்த உலகில் முன்னேற அனைவரும் ஏமாற்றுகிறார்கள் என்ற கருத்தைச் சொல்லும் நகைச்சுவைப்படம் ‘சீரியஸ் மென்’. விண்வெளி ஆய்வாளர் அரவிந்த் ஆச்சார்யாவிடம் (நாசர்), உதவியாளராக வேலை பார்க்கிறார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யன் மணி(நவாஸூதீன் சித்திக்கி). இருவரின் பூர்வீகமும் தமிழ். அய்யன் மணி தன் மகனைக் குறுக்கு வழியில் புகழின் உச்சாணிக் கொம்பில் ஏற்றுகிறார். அதிகார வர்க்கத்தில் வசதிகளை அனுபவிக்கும் வகுப்பினர் பெருந்தவறுகள் செய்தாலும், தப்பித்துக்கொள்வார்கள். அதே சமயம், பட்டியல் இனத்தவர்கள் செய்யும் சிறு தவறுகள், அவர்களின் வாழ்வையே மாற்றிவிடும் என்னும் இந்திய யதார்த்தத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது சீரியஸ் மென். நாசர், நவாஸுதீன் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறான் சிறுவனான ஆக்ஷத் தாஸ். பத்திரிகையாளர் மனு ஜோசபின் நாவலை மையமாகக் கொண்ட படம் என்றாலும், சாதிய படிநிலைகள் பற்றிய போதாமையும், எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து விவாதம் செய்யும் விஷமத்தனமும் படம் முழுக்க விரவி இருக்கிறது. சர்ச்சைகள் இருந்தாலும், வாழ்க்கைப் போராட்டங்களின் தகிடுதத்தங்களைக் காட்டி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது சீரியஸ் மென்.