
ஏ.சி இயந்திரத்தின் கம்ப்ரஸரை வைத்து ஒரு மாயக்கதையைச் சொல்கிறது இது. புகைப்படக் கலைஞர் ரித்திகா சிங்கும் திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ரோஜுவும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்
Story of Things (ANTHOLOGY)
ஐந்து பொருள்களைக் கொண்டு எதார்த்தமும் ஃபேன்டசியும் இணைந்து ஜார்ஜ்.கே.ஆன்டனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆந்தாலஜி, சோனிலைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஸ்டோரி ஆப் திங்ஸ்.'
எடை இயந்திரத்தின் கதை
பரத், லிங்கா இருவரும் முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும் முதல் படம், எடை இயந்திரத்தை வைத்துப் பின்னப்பட்டுள்ளது. நடிக்க வாய்ப்பு தேடி அலையும் இளைஞர்கள் கவனக்குறைவால் நிகழ்த்தும் ஒரு விபத்து, எப்படிப் பாவச்செயலாக மாறுகிறது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது. குற்றவுணர்வில் குமையும் லிங்காவின் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
தொடரும் அலைபேசி பந்தம்
நம் ஆறாவது விரலாகவே மாறிவிட்ட அலைபேசியை வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம், அதிதி பாலனுக்கும் அவரின் அம்மா கௌதமிக்கும் இடையிலான உறவின் நெருக்கத்தைச் சொல்கிறது. வெளியூரில் வேலைபார்க்கும் அதிதி பாலனுக்கு இரவு 10.30 மணியானாலே அலைபேசியில் அழைக்கும் அம்மா, தன் இறப்புக்குப் பின்னும் அந்த அலைபேசியில் தன் ஆன்மாவைத் தக்கவைத்துக்கொள்வதைச் சொல்கிறது. என்றாலும் காதல் குறித்த குழப்பம் இந்தக் கதையில் நீடிக்கிறது.


குளிரூட்டப்பட்ட மாயம்
ஏ.சி இயந்திரத்தின் கம்ப்ரஸரை வைத்து ஒரு மாயக்கதையைச் சொல்கிறது இது. புகைப்படக் கலைஞர் ரித்திகா சிங்கும் திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ரோஜுவும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். வீட்டுக்குப் புதிதாக வரும் பழைய ஏ.சி., அவர்கள் வாழ்க்கையையே எப்படி மாற்றுகிறது என்பதை ஃபேன்டசியாகச் சொல்கிறது இந்தப் படைப்பு. வித்தியாசமான கதைகளை விரும்புபவர்கள் மட்டும் பார்க்கலாம்.
அச்சத்தில் உறையும் கார்
சிறுவயதில் தந்தையால் கண்டிப்பு ப்ளஸ் சித்திரவதைகளுக்கு உள்ளான சிறுவனின் கொடுங்கனவாய் இருக்கிறது, ஓர் இரவில் அவன் அடைக்கப்பட்ட கார். வளர்ந்து பெரியவனான பிறகு அதே காரை அவன் வாங்குகிறான். அவன் பயம் விலகியதா, வாழ்க்கையின் மர்ம முடிச்சுகள் என்ன என்பதை ரொம்பவே சுவாரஸ்யமாகச் சொல்கிறது. சாந்தனு பாக்யராஜும் மலையாள நடிகர் சித்திக்கும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
காலம் தாண்டிக் கதை சொல்லும் கண்ணாடி
கல்லூரி இளைஞரான வினோத் கிஷன் ஒரு வாடகைவீட்டில் குடியேறுகிறார். அவர் அறையிலிருக்கும் கண்ணாடியில் இன்னொரு சிறுமியின் உருவம் தெரிகிறது. கண்ணாடி வழியாகவே இருவரும் பேசிப்பழக, அந்தச் சிறுமி யார், இருவருக்கும் இடையிலான உறவு என்ன என்பதைக் கவித்துவமாகச் சொல்லும் கதை. மொத்த ஆந்தாலஜியில் பின்னிரண்டு கதைகளே சிறந்தவை.
நம் அன்றாட வாழ்வில் காணும், பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு மாயச்சித்திரத்தை வரைந்து காட்டும் இந்தப் படங்கள் உருவாக்கத்தில் அசத்துகின்றன. அதேநேரம் எல்லாக் கதைகளுமே ஓரிரு வரிகளில் முடிந்துவிடக்கூடியவை என்பதால் திடுக்கிடும் திருப்பங்களை எதிர்பார்ப்பவர்களுக்கானவை அல்ல.


Mumbai Mafia: Police (vs) the Underworld (DOCUMENTARY)
எக்கச்சக்க படங்கள், புத்தகங்கள், ஆவணப்படங்கள் வந்தபின்னும் மும்பை மாஃபியா பற்றிய ஆர்வம் ரசிகர்களிடம் குறையவில்லை. அதன் வெளிப்பாடே நெட்ப்ளிக்ஸின் சமீபத்திய ஆவணப்படம். 90களில் காவல்துறையினரும் மாஃபியாவிற்கு இணையாக ‘என்கவுன்ட்டர்’ என்கிற பெயரில் நடத்திய ரத்தவேட்டையைப் பற்றிப் பேசுகிற படைப்பு இது. ஒரு கும்பலை ஒழிக்க இன்னொரு கும்பலை வளர்த்து விடும் அதிகார மையத்தின் போக்கு, ஈகோ காரணமாக காவல்துறைக்குள்ளாகவே நடக்கும் உள்ளடி அரசியல், தனி மனிதனின் சாகச மனநிலையும் அதன் விளைவுகளும், போலி மோதல் கொலைகளைக் கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் நியாயப்படுத்தும் அதிகாரிகளின் மமதை என ஏராளமான விஷயங்களைப் பேசுகிறது இந்தப் படம். முக்கியமாக, தொடக்கத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட இந்த என்கவுன்ட்டர்கள் காலம் நகர நகர எப்படி அவர்களையே பயமுறுத்தும் ஆயுதமாக மாறியது என்கிற கோணத்தை விரிவாகக் கையாண்டிருக்கிறார்கள். ஆங்காங்கு தென்படும் ஹீரோயிசத்தன்மையைக் குறைத்திருக்கலாம். நிழலுலக தாதாக்களைப் பற்றிச் சலிக்காமல் தேடிப் பார்ப்பவர்களுக்கான சாய்ஸ் இது.


The Pale Blue Eye (MOVIE)
1830-ல் நடக்கும் இந்தக் கதையில், நியூயார்க்கில் இருக்கும் ஒரு பிரபல ராணுவப் பயிற்சி அகாடமியில் நடக்கும் ஒரு மரணத்தை விசாரிக்க வருகிறார் ஓய்வுபெற்ற துப்பறிவாளரான அகஸ்டஸ் லேண்டோர். தொடர் கொலைகள், பயமுறுத்தும் சம்பவங்கள் என விரியும் விசாரணையில் அவருக்கு உதவியாக இருக்கிறான் அதே அகாடமியில் பயிற்சிபெறும் ஓர் இளைஞன். லேண்டோர் கொலையாளியை நெருங்கினாரா? இதே பெயரில் வெளிவந்த ஒரு நாவலை அப்படியே திரைப்படமாக மாற்றியிருக்கிறது நெட்ப்ளிக்ஸ். பிரபல எழுத்தாளர் எட்கர் ஆலன் போ இந்தக் கற்பனைக் கதையில் ஒரு பாத்திரமாக உலா வருவது ஒரு சுவாரஸ்யமான ஐடியா. லேண்டோராக கிறிஸ்டியன் பேல் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். பனிப்பிரதேசத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மசநோபு. துப்பறியும் கதைகளுக்கான பரபர வேகம் இல்லையென்றாலும், ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. ஆனால், இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட்டால் படம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதையாகத் தன் வெளியைச் சுருக்கிக்கொண்டது ஏமாற்றமே!