Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

நம்மூரில்தான் இந்த ட்ரெண்ட் காலாவதி ஆகிவிட்டது. ஆனால், உலகளவில் இன்னும் செல்லப்பிராணிகளை வைத்துப் படமெடுத்து கல்லா கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

OTT கார்னர்
OTT கார்னர்

Jhansi (Season 2) - Web Series

நினைவுகளை இழந்த நாயகியின் முன்கதை என்ன, அவளைக் கொல்லத்துடிக்கும் வில்லன் செய்வது என்ன, உண்மையை அறிந்த நாயகன், நாயகியை ஏற்றுக்கொண்டானா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘ஜான்சி' வெப்சீரிஸின் சீசன் 2. முதல் சீசனில் ஆறு எபிசோடுகளை ஓட்டவேண்டும் என்பதற்காகவே, கிளைக்கதைகளை வெட்டியும் ஒட்டியும் பொறுமையைச் சோதித்தார்கள். ஆனால், சீசன் 2-ல் அடுத்தடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பை உருவாக்குகிற திரைக்கதையும், நாயகியின் ஃப்ளாஷ்பேக்குகளும் ஆறுதல் அளிக்கின்றன. தொடரின் தலைப்புக்கேற்றது போலவே சண்டைக் காட்சிகளில் ஜான்சி ராணியாக மாவீரம் காட்டுகிறார் அஞ்சலி. “அவளுக்குத் துப்பாக்கியை ஒழுங்கா பிடிக்கத் தெரியாம இருந்தப்போவே எல்லோரையும் கொன்னா. ஆனா, இப்போ..." போன்ற பில்டப் வசனங்களுக்கு ஏற்ப படு ஸ்டைலிஷாக வில்லன்களைச் சுட்டு வீழ்த்துகிறார். ஸ்டன்ட் காட்சிகளில் அவரின் உழைப்பு பாராட்டுக்குரியது. ஆங்காங்கே வரும் ட்விஸ்டுகளும் ஓகே ரகம். அதேநேரம், வில்லன்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் டப்பிங் குரலுக்கு இன்னமும் உழைத்திருக்கலாம். லாஜிக் பார்க்காதவர்களை இந்த 'ஜான்சி' நிச்சயம் மகிழ்விப்பாள்.

OTT கார்னர்
OTT கார்னர்

Beast of Bangalore: Indian Predator - Documentary

நெட்ப்ளிக்ஸின் ‘Indian Predator' என்ற நிஜக் குற்றங்கள் தொடர்பான ஆவணப்படத் தொடரின் நான்காவது அத்தியாயம் இந்த ‘Beast of Bangalore.' 1996-ம் ஆண்டு கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த சீரியல் சைக்கோ கில்லர் யார், அவனைக் கர்நாடக போலீஸ் எப்படிக் கண்டுபிடித்தது என்பதை விவரிக்கின்றன இதன் மூன்று எபிசோடுகள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரின் நேரடி வாக்குமூலங்களுடன் மனதை உலுக்கும் சித்திரிப்புகளும் இருப்பது, இதைப் பார்க்க நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. நல்லவர்கள், நம்மைக் காப்பவர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களே பாலியல் குற்றவாளிகளாக இருக்கலாம் என்பதாக விழிப்புணர்வூட்டிய இயக்குநர் அஷ்வின் ராய் ஷெட்டியைப் பாராட்டலாம். ஆனால், முதல் எபிசோடிலுள்ள பரபரப்பு, அடுத்தடுத்த எபிசோடுகளில் மிஸ்ஸிங். கொலையாளி உமேஷ் ரெட்டியைக் கண்டுபிடிக்க காவல்துறை படாதபாடு பட்டதைப்போலவே, இந்தத் தொடரையும் நாம் கடக்கவேண்டியிருக்கிறது. இந்தக் குறையைச் சரி செய்திருந்தால், இதன் முந்தைய சீசன்களைப் போலவே இதுவும் மிரட்டியிருக்கும்.

OTT கார்னர்
OTT கார்னர்

Dog Gone - Movie

நம்மூரில்தான் இந்த ட்ரெண்ட் காலாவதி ஆகிவிட்டது. ஆனால், உலகளவில் இன்னும் செல்லப்பிராணிகளை வைத்துப் படமெடுத்து கல்லா கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் லேட்டஸ்ட் வரவு இந்த ‘Dog Gone.’ காதல் தோல்வியிலிருந்து மீள கோங்கர் எனும் நாயை வளர்க்கத் தொடங்குகிறார் கல்லூரி மாணவரான ஃபீல்டிங். முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அவர் குடும்பமும், காலப்போக்கில் நாயோடு நெருங்கிப் பழகுகிறது. ஒருநாள் ட்ரெக்கிங் போகும்போது கோங்கர் தொலைந்து போய்விட, மொத்தக் குடும்பமும் நாயைத் தேடி அலைகிறது. இவர்களின் தேடல் நாடு முழுவதும் பிரபலமாகிவிட, ஆயிரக்கணக்கான பேர் கோங்கரைத் தேடிச் சுற்றுகிறார்கள், உதவ முன்வருகிறார்கள். இறுதியில் என்ன, எல்லாம் சுபம்தான்! உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நெட்ப்ளிக்ஸ் படத்தின் மைனஸ் அதன் யூகிக்க முடிந்த திரைக்கதை என்றாலும், ஆங்காங்கே இழையோடும் நெகிழ்ச்சித் தருணங்கள் நம்மைப் படத்தோடு ஒன்ற வைக்கின்றன. வீக்கெண்ட்டில் குழந்தைகளோடு பார்ப்பதற்கு ஏற்ற ஒரு ஃபீல்குட் படம் இது!

OTT கார்னர்
OTT கார்னர்

Trial By Fire - Web Series

1997-ல் டெல்லி உப்ஹார் தியேட்டரில் நடந்த நிஜப் பேரழிவு, 59 உயிர்களைத் தீக்கிரையாக்கியது. அதில் தங்களின் குழந்தைகளை இழந்த ஒரு தம்பதி, எப்படிப் பண பலம், அரசியல் பலத்துக்கு எதிராகப் போராடி ஓர் இயக்கமாக ஒன்றுதிரண்டு வெற்றிபெற்றனர் என்பதைச் சொல்கிறது ‘Trial by Fire’ நெட்ப்ளிக்ஸ் தொடர். அந்தத் தம்பதியினர் எழுதிய புத்தகம் மற்றும் பல்வேறு உண்மைச் சம்பவங்களை இணைத்து ஒரு பரபரப்பான கதையைச் சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர் பிரஷாந்த் நாயரும் ரன்தீப் ஜாவும். நீலமாக வரும் ராஜ் தேஷ்பாண்டேவும், சேகராக வரும் அபய் தியோலும் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். ஒரு வெப்சீரிஸுக்கு எப்படித் திரைக்கதை அமைக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட தொடர். கோபம், ஆற்றாமை, சோகம், பயம் எனப் பலதரப்பட்ட உணர்வுகளை அநாயசமாகக் கடத்துகிறது இதன் எழுத்தும், நடிகர்களின் பங்களிப்பும்! இதுவரை வெளியான இந்திய ஓ.டி.டி தயாரிப்புகளில் மிக முக்கியமான படைப்பாகத் தனியொரு இடத்தைப் பிடிக்கிறது இந்த வெப்சீரிஸ்.