
ஹாலிவுட் ஏற்கெனவே பலமுறை அலசிக் காயப்போட்டுவிட்ட rom-com டெம்ப்ளேட்டிலிருந்து இம்மியளவும் விலகாமல் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்


The Night Manager - Web Series
வங்கதேச ஸ்டார் ஹோட்டலில் நைட் மேனேஜராகப் பணியாற்றுகிறார் நாயகன் ஆதித்யா ராய் கபூர். விருந்தினராக அங்கே வருகிறார் சிறுவயதிலேயே மாஃபியா டானுக்கு மனைவியான ஒரு சிறுமி. அவருக்கு உதவ நாயகன் முன்வர, அடுத்தடுத்த சம்பவங்கள், ஆயுதக் கடத்தல் தலைவன், அவரைப் பிடிக்க நினைக்கும் இந்திய ரா அதிகாரி என்பதாக நகர்கிறது. உண்மையைக் கண்டறிய ஆதித்யா எந்த எல்லைவரை செல்கிறார், சிக்கல்களை எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த சீசன் 1. ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர், சோபிதா துலிபாலா, திலோத்தமா உள்ளிட்டவர்களின் நடிப்பை வீணாக்காத விறுவிறு திரைக்கதை பெரும்பலம். அசத்தலான ஒளிப்பதிவு, ஸ்டைலிஷ் மேக்கிங் என எல்லா இடமும் டிக் செய்வதால் ‘தி நைட் மேனேஜர்’ உலகத்துக்குள் தாராளமாக நாமும் சென்று வரலாம்.


Unlocked - Movie
தன் செல்போனைப் பேருந்தில் தவறவிடுகிறார் ஒரு பெண். அதை எடுக்கும் ஒருவன் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, நண்பர்கள், அலுவலக ரகசியங்கள் என அனைத்தையும் அறிந்துகொள்கிறான், ஸ்பைவேர் மூலம் அவளின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கிறான். மற்றொரு பக்கம் ஒரு சீரியல் கில்லரைத் தேடுகிறார் ஒரு காவல் அதிகாரி. பெண் காப்பாற்றப்பட்டாளா, சீரியல் கில்லர் பிடிபட்டானா என்பதற்கு விடை சொல்கிறது நெட்ப்ளிக்ஸின் இந்த கொரிய சினிமா. வில்லனாக வரும் இம் சி-வன்னின் நடிப்பு மிரட்டல். அப்பாவிப் பெண்ணாகப் பாவப்பட வைக்கிறார் நாயகி சுன் வூ-ஹீ. டெக்னிக்கலாக சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு, திரையின் ஒவ்வொரு இன்ச்சையும் கதை சொல்லப் பயன்படுத்துவது என ஒரு தேர்ந்த திரைமொழி படமெங்கும் வெளிப்படுகிறது. ஆனால் டெக்னாலஜி என்றாலே ஆபத்துதான் என்ற மேம்போக்கான மெசேஜைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி இருக்கை நுனிக்கு நம்மை நகர்த்தும் த்ரில்லர் என்பதால் குறைகளை மறந்து ரசிக்கலாம்.


Somebody I Used to Know - Movie
ஹாலிவுட் ஏற்கெனவே பலமுறை அலசிக் காயப்போட்டுவிட்ட rom-com டெம்ப்ளேட்டிலிருந்து இம்மியளவும் விலகாமல் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். மீடியா கனவுகளால் தன் காதலுக்கு குட்பை சொல்கிறார் ஆலி. பத்தாண்டுகளுக்குப் பின் திரும்பிப் பார்த்தால் மீடியாவிலும் நினைத்தபடியான வளர்ச்சி இல்லை, கடந்த கால காதலிலிருந்தும் மீண்ட பாடில்லை. குழப்பத்தோடு சொந்த ஊர் திரும்பும் அவர் மீண்டும் தன் பழைய காதலனையும் அந்தக் காதலன் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணையும் சந்திக்க நேர்கிறது. அதன்பின் நடக்கும் களேபரங்கள்தான் கதை. தொடக்கத்தில் ஆலி செய்யும் கலாட்டாக்களால் அவர் மேல் இரக்கம் வருவதைவிட எரிச்சலே வருகிறது. இதனாலேயே படத்தின் நாயகியான அவரை நம்மால் பின்பற்ற முடியாமல்போகிறது. ஆனாலும் இறுதியில் தட்டுத் தடுமாறி ஒரு மெசேஜ் சொல்லி முடிகிறது படம். ஜாலியாய் ஒரு படம் பார்க்க நினைப்பவர்களுக்கான சாய்ஸ் இது. ஆனால் ஸ்ட்ரிக்ட்லி 18+.


The Strays - Movie
அன்பான கணவர், பாசமான இரண்டு குழந்தைகள், வசதியான வாழ்க்கை, சமூக நன்மதிப்பு என நிம்மதியாக இருக்கும் நாயகி ஆஷ்லே மேடக்வேயின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுக் குழப்ப மனநிலைக்குக் கொண்டு செல்கிறது அண்ணன், தங்கை என இருவரின் வரவு. யார் அவர்கள், ஏன் ஆஷ்லேவைப் பழிவாங்க நினைக்கிறார்கள், அவர்களிடமிருந்து ஆஷ்லேவும் அவரது குடும்பமும் காப்பாற்றப்பட்டனரா என்பதுதான் இந்த நெட்ப்ளிக்ஸ் படத்தின் கதை. முழுப் படத்தையும் அபாரமான நடிப்பால் தாங்குகிறார் ஆஷ்லே மேடக்வே. சஸ்பென்ஸ், த்ரில்லர், கொஞ்சம் ஹாரர் எனக் காட்சிகளைக் கோத்துப் படத்துடன் ஒன்றவைக்கிறது திரைக்கதை. அண்ணன், தங்கை பழிவாங்க வருவது வரை ஓகேதான், ஆனால் அதற்காக அவர்கள் செல்லும் எல்லை சற்றே நெருடலை ஏற்படுத்தினாலும், ரசிக்க வைக்கிறது இந்தப் படைப்பு.