Published:Updated:

''குழந்தைகளுக்குத் தேவை உங்கள் சுண்டுவிரல் ஸ்பரிசமே!'' - பேச்சாளர் ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் #VikatanPodcast

ஆ.சாந்தி கணேஷ்

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களைத் தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#VikatanPodcast-ல் ஜெயந்த ஶ்ரீ பாலகிருஷ்ணன்
#VikatanPodcast-ல் ஜெயந்த ஶ்ரீ பாலகிருஷ்ணன்

இன்றைய பெற்றோர்கள், குழந்தை வளர்ப்பு என்பது தாங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் கேட்ஜெட்களும், தாங்கள் செலவுசெய்து அவர்களை அனுப்பும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் க்ளாஸ்களும் என்று நினைக்கிறார்கள். நியூ ஏஜ் பெற்றோர்களின் அந்த எண்ணத்தை உடைத்து, உண்மையை உணர்த்தும் விதமாகப் பேசுகிறார், பேச்சாளர் ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன்.

''நாம் பகுதி நேர பெற்றோராக இருக்க முடியாது. குழந்தை வளர்ப்பு என்பது பார்ட் டைம் ஜாப் அல்ல. நமக்குப் பதிலாக வேறொருவர் நம் பிள்ளைகளுக்குப் பெற்றோராக இருக்க முடியாது. ஆனால், இன்றைய சூழ்நிலைகள் பெற்றோர்களை அப்படித்தான் வைத்திருக்கின்றன.

ஒரு காலத்தில் குழந்தை வளர்ப்பில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என்று உதவுவதற்கு மிகப்பெரிய உறவு வட்டம் நம் வீடுகளுக்குள்ளேயே இருந்தது. கூட்டுக் குடும்பங்களைத் திட்டமிட்டு தொலைத்தவர்கள் நாம்தானே. அதன் பலன்களைத்தான் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன்

குழந்தை வளர்ப்புக்கு மிக மிக முக்கியமான படிநிலை, குழந்தையின் அருகில் பெற்றோர்கள் இருப்பதுதான். அது முடியாததால், அந்த இயலாமைக்கு நஷ்டஈடுகளாக வண்ண வண்ண உடைகளையும் பொம்மைகளையும் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு உங்களுடைய பொம்மைகள் அல்ல, உங்களுடைய சுண்டுவிரல்தான் தேவை. அந்த சுண்டுவிரலைக் கொடுக்க நமக்கு நேரம் இல்லாததால் விலை உயர்ந்த, உயிர் இல்லாத ஏதோ ஒரு பொருளை, ஒரு பொம்மையை குழந்தைகளிடம் கொடுக்கிறோம். அப்படித்தான் செல்போனும் இன்றைக்கு குழந்தைகளின் கைகளில் சென்றடைந்துவிட்டது. இதுவொரு பொறுப்புத் துறப்பு மனநிலை.

ஆண் குழந்தைகள் என்றால், பெண் குழந்தைகளுக்கு எந்தச் சங்கடமும் தரக்கூடாது என்று சொல்லி வளருங்கள். பெண் குழந்தை என்றால், அவளால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று கற்றுக்கொடுத்து வளருங்கள். வயதான காலத்தில் நம்மை வைத்துக் காப்பாற்றுவதற்காக அல்ல, சமூகத்தை நல்லபடியாகக் காப்பாற்றுவதற்கு ஏற்றபடி பிள்ளைகளை வளருங்கள். இதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும்.

`வகுப்பறைக்கு வெளியே குழந்தைகள் என்னவெல்லாம் கற்கலாம்?'- எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் #VikatanPodcast

எனக்குக் கிடைக்காததெல்லாம் என் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நல்லது. அதே நேரம், நம் தலைமுறைக்குக் கிடைத்த பொறுமை, காத்திருப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல இயல்புகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தினால், இந்தக் கால பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே வந்துவிடுகிற மன உளைச்சலுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும் அல்லவா?''குழந்தை வளர்ப்பு பற்றி ஜெயந்தஶ்ரீ இன்னும் விரிவாகப் பேசியதை #vikatanPodcast-ல் கேளுங்கள்!