`பாய்காட்' பிரச்னையால் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் இருக்கும் பாலிவுட்டிற்கு இந்த ஆண்டாவது விடியலாக இருக்குமா என்பதே இந்தி சினிமா ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. இந்தப் பிரச்னையைச் சரி செய்ய, முதல் அஸ்திரமாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ஷாருக்கானின் `பதான்' (Pathaan). 2018-ம் ஆண்டு வெளியான `ஜீரோ' படத்துக்குப் பிறகு ஷாருக்கானின் எந்தப் படங்களும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஒரு முழுநீள ஆக்ஷன் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் இந்த பாலிவுட் பாட்ஷா. எதிர்பார்ப்பை எகிறச் செய்த `பதான்', ஷாருக்கானுக்கும், பாலிவுட்டுக்கும் ஒரு கம்பேக்காக இருக்கிறதா?

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், அஷுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா என நட்சத்திரப் பட்டாளத்துக்கு மத்தியில் கூடுதல் இணைப்பாக சல்மான் கானும் கௌரவத் தோற்றத்தில் வந்துபோகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா வுட்டிலும் இது யுனிவர்ஸ் தொடங்கும் காலகட்டம் என்பதால், இந்தப் படமும் அந்த டிரெண்டில் இணைந்திருக்கிறது. சல்மான் கான் நடித்த 'ஏக் தா டைகர்', 'டைகர் ஜிந்தா ஹை', ஹ்ரித்திக் ரோஷன் நடித்த 'வார்' படங்களைத் தயாரித்த யாஷ் ராஜ் நிறுவனமே இதையும் தயாரித்திருப்பதால், இவற்றை எல்லாம் இணைத்து 'ஸ்பை யுனிவர்ஸ்' என்ற ஒன்றை உருவாக்கி, அதில் நான்காவது படைப்பாக 'பதான்' படத்தைக் களமிறக்கியிருக்கிறார்கள். யுனிவர்ஸ் என்பதால் சல்மான் கான் தன்னுடைய 'டைகர்' கதாபாத்திரமாகவே இதிலும் வருகிறார்.
எக்ஸ் ரா (Ex RAW) ஏஜென்ட்டான ஜான் ஆபிரஹாம் (ஜிம்) இந்திய ராணுவத்தையும் இந்தியாவையும் வெறுப்பவராக இருக்கிறார். காரணம், அவருக்கு இழைக்கப்பட்ட துரோகம். ஒரு வைரஸ் மூலம் இந்தியாவைத் தாக்க நினைக்கும் அவரின் திட்டத்தை முறியடிக்க, சில காலம் தலைமறைவாக இருந்த மற்றொரு ரா ஏஜென்ட்டான ஷாருக்கானை (பதான்) நியமிக்கிறார் உயரதிகாரியான டிம்பிள் கபாடியா (நந்தினி). ஜான் ஆபிரஹாமைத் தடுக்க முயலும் ஷாருக்கானின் பாதையில் 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா' மோடில் வருகிறார் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டான தீபிகா படுகோன். சில பல ட்விஸ்ட்கள், ஆக்ஷன் பிளாக்குகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் ஆபத்தைத் தடுத்து ஜான் ஆபிரஹாமை வீழ்த்தினாரா இந்த 'பதான்'?

'சும்மா வாங்க, ஜாலியா ஒரு ஸ்பை படம் பண்ணுவோம்' என்ற கான்செப்ட்டில் சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராஃப்புக்குப் பிறகு ஷாருக்கானையும் தீபிகா படுகோனையும் அழைத்து வந்திருக்கிறார்கள். நான்கு வருட வனவாசத்துக்குப் பிறகு வந்திருக்கும் ஷாருக்கானுக்கு ஓர் அட்டகாசமான ஆக்ஷன் இன்ட்ரோவைச் சிறப்பாகவே எடுத்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த். எள்ளல் பேச்சு, துள்ளல் நடை, எதற்கும் அஞ்சாத துணிவு என அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பு. நாயகனுக்கு இணையாகச் சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார் தீபிகா படுகோன். யூகிக்கக்கூடிய ட்விஸ்ட்கள் கொண்ட பாத்திரம்தான் என்றாலும் நடிப்பில் குறையேதும் இல்லை.
வில்லனாக வரும் ஜான் ஆபிரஹாமின் பாத்திர வடிவமைப்பும் படத்துக்கு ப்ளஸ். அவர் இந்தியாவின் எதிரியாக மாறுவதற்கான காரணம் வலுவாகவே எழுதப்பட்டிருக்கிறது. எது சரி, எது தவறு என அந்தப் பாத்திரம் கொண்டே இன்னும் விவாதித்திருக்கலாம். அதற்கான வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் வெறும் சம்பிரதாய வில்லனாக அவரை வீணடித்திருக்கிறார்கள். ஃபிட்னஸ் மூலம் மிரட்டுபவர், கொஞ்சம் முகபாவங்களிலும் அக்கறை காட்டியிருக்கலாம்.
சல்மான் கான் வரும் காட்சி திணிப்பாக இல்லாமல் கதையின் ஓட்டத்திலேயே வந்து போவது ஆறுதல். அதன் நீட்சியை எண்டு கிரெடிட்ஸில் வைத்து சமகால பாலிவுட்டை ரகளையாகக் கலாய்த்திருப்பதும் சுவாரஸ்யமான ஐடியா. இரண்டு பெரிய நடிகர்கள் ஈகோ பார்க்காமல் அதில் நடித்திருப்பது வரவேற்கத்தக்கது.

படம் தொடங்கியது முதல் எங்குமே தொய்வடையாமல் பார்த்துக்கொள்கிறது ஸ்ரீதர் ராகவனின் திரைக்கதை. இயக்குநர் சித்தார்த் ஆனந்த், ஒன்லைனாக ஸ்பை த்ரில்லருக்கு ஏற்றக் கதைக்களத்தைப் பிடித்திருந்தாலும் அதை நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்துவதில் சறுக்கியிருக்கிறார். உருமாற்றம் செய்யப்பட்ட சின்னம்மை வைரஸ், இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை, இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவு, சட்டப்பிரிவு 370 ரத்து, ஜி.பி.எஸ் வைத்து டார்கெட் செய்யும் ஏவுகணைகளின் செயல்பாடுகள் போன்றவற்றில் எல்லாம் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம். வேகமாக நகரும் படத்தில் அவை அனைத்தும் அவசர கதியில் வெறும் மேம்போக்காக வந்துபோகின்றன.
போதாக்குறைக்கு மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, `பாம் வெடிக்கப் போகுது. இதோ என் கையில இருக்குல இந்த ரிமோட்... இதை வெச்சுதான் அதைத் தடுத்து நிறுத்த முடியும்' என்கிற ரீதியில் வசனங்களாலேயே பல விஷயங்களை `விளக்கு... விளக்கு என விளக்கியிருக்கிறார்கள்'.

இதை எல்லாம்விட பெரிய சிக்கல் படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம். ஸ்டன்ட்டுக்கான ஐடியாக்கள் சிறப்பாக இருந்தாலும், க்ரீன் ஸ்க்ரீன் காட்சிகள் அனைத்தும் சுமார் ரக கிராபிக்ஸால் நம்மை டயர்டாக்குகின்றன. இரண்டு ஹெலிகாப்டர், ஒரு பெரிய டிரக், ரயிலில் நடக்கும் சண்டை என எல்லாவற்றின் தரத்துக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். விஷால் - ஷேகரின் பாடல்களும், சஞ்சித் மற்றும் அங்கித் பல்ஹ்ராவின் பின்னணி இசையும் ஓகே ரகம்.
ஐடியாவாக ஈர்க்கும் படம், மேக்கிங்கிலும் சரி, கதைக்கான செட்டிங்கிலும் சரி, ரொம்பவே சொதப்பியிருக்கிறது. ஆனால், திரையரங்கை விசிலடிக்க வைக்கும் தேசிய உணர்வுக் காட்சிகள், ஷாருக்கானின் ஸ்டார் பவர், எங்கும் தேங்கி நிற்காத திரைக்கதை போன்றவற்றால் `மிஷன் பாஸ்' என்று திருப்திப்பட்டுக் கொள்கிறார் இந்த `பதான்'.