கட்டுரைகள்
Published:Updated:

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு வியூகம்! - சினிமா டு அரசியல் ரூட்

ஹீரோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ

சமீபத்திய சர்ச்சை லைம்லைட்டில் இருப்பவர் சூர்யா.

எம்.ஜி.ஆர்., சிவாஜிபோல தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதென்பது எழுதப்படாத விதி. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்த தலைமுறையில் ‘வருவேன் வருவேன்’ என்ற ரஜினி இன்னும் முழுதாக அரசியலுக்குள் வரவில்லை. ‘வரவே மாட்டேன்’ என்ற கமல் தடாலெனக் கட்சி தொடங்கி, செயல்படத் தொடங்கிவிட்டார். இவர்களுக்கு அடுத்த தலைமுறையினரில் சிலருக்கு அரசியல் ஆசை இருக்கிறது. சிலரை அரசியல் அதுவாகவே இழுக்கிறது. அதுவும் சமீபகாலமாக வரிசையாக முன்னணி நடிகர்கள் அரசியல் சர்ச்சையில் சிக்குகிறார்கள். இப்போது என்ன நடக்கிறது... இனி என்ன நடக்கும்..? கொஞ்சம் அலசலாம்...

‘நீட் சுனாமி’ சூர்யா!

நேற்று: சமீபத்திய சர்ச்சை லைம்லைட்டில் இருப்பவர் சூர்யா. ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் கல்விப்பணிகளைச் செய்துவரும் சூர்யா, சர்ச்சைகளுக்கு அகரம் எழுதியதும் ஓர் ‘அகரம்’ விழாவில் தான். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்த கஸ்தூரிரங்கன் வரைவு அறிக்கை வெளியாகியிருந்த நேரம். ‘மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புக் குழந்தை களுக்குப் பொதுத்தேர்வு’ என்பதை அகரம் விழா மேடையில் கடுமையாக விமர்சித்தார் சூர்யா. கோபமடைந்த பா.ஜ.க-வினர் சூர்யாவை சமூக வலை தளங்களில் தாளித்தனர்.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு வியூகம்! - சினிமா டு அரசியல் ரூட்

இன்று: கடந்த சில நாள்களுக்கு முன் நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே போல 13 மாணவர்கள் தற்கொலை செய்திருக்க, ‘நீட் தேர்வு ஒரு மனுநீதித்தேர்வு’ என்று கடுமையாக அறிக்கை விட்டார் சூர்யா. பதிலுக்கு பா.ஜ.க-வினர் சூர்யாவைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘நடிகர்களுக்கு கட்-அவுட் வைக்கும்போதுகூடத்தான் மரணங்கள் நிகழ்கின்றன. அதற்காக சினிமாவைத் தடை செய்துவிடலாமா?’ என்று கேள்வியெழுப்பினார் பா.ஜ.க கலை கலாசாரப் பிரிவின் தமிழகத் தலைவர் காயத்ரி ரகுராம்.

பா.ஜ.க-வினர் சூர்யாவைக் கண்டு பதறுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் தி.மு.க-வினரும் ‘நீட் தேர்வு எதிர்ப்பைத் தனிநபர் சாகசமாக மாற்றி தனக்குச் சாதகமாக’ சூர்யா மாற்றுவதாக விமர்சிக்கிறார்கள். ‘மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு தமக்கே சாதகமாக மாறவேண்டும், சூர்யா போன்றவர்கள் அதைச் சிதறடித்துவிடக்கூடாது’ என்று நினைக்கிறார்கள் அவர்கள். உதயநிதி ஸ்டாலின் சூர்யாவின் அறிக்கையை வரவேற்று ட்வீட் போட்டாலும், இணைய உ.பி-க்கள் சூர்யாமீது பாய்வதை நிறுத்தவில்லை. இது போதாதென்று, ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்வரி, சாதிமோதலுக்கு வழிவகுக்கும் என்று, பாடல் வெளியாகிப் பலமாதங்களுக்குப் பிறகு புகார் கொடுக்கப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதால் இப்போதைக்கு சூர்யா சர்ச்சை ஓயப்போவதில்லை.

நாளை: சூர்யாவைப் பொறுத்தவரை அவருக்கு நேரடி அரசியலுக்கு வரும் திட்டமிருக்கிறதா, இல்லையா என்று தெரியாது. ஆனால் அவர் தொடர்ந்து கல்விப்பணிகளில் ஈடுபட்டுவருவதால் கல்வி குறித்த கருத்துகளை வெளிப்படையாக முன்வைப்பதில் தவறேதுமில்லை என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் சூர்யாவுக்கு எதிரான அழுத்தங்களே அவரை அரசியலுக்கு அழைத்து வந்தாலும் ஆச்சர்யமில்லை.

‘ஐ’ம் வெயிட்டிங்’ விஜய்!

நேற்று: முன்னர் கருணாநிதி வசனத்தில் திரைப்படங்கள் இயக்கிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தி.மு.க அனுதாபியாக அறியப்பட்டவர். ‘காவலன்’ பட ரிலீஸ் தொடர்பாக தி.மு.க-வுக்கும் விஜய்க்கும் முட்டிக்கொண்டது. அடுத்து வந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகக் களமிறங்கியது. ஜெயலலிதா வெற்றிபெறவும் அந்த வெற்றிக்கு அணிலாக உதவியவர் விஜய் என்று அறிக்கை விடுத்தார் எஸ்.ஏ.சி.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு வியூகம்! - சினிமா டு அரசியல் ரூட்

ஆனால் ‘தலைவா’ படத்தில் ‘டைம் டு லீட்’ என்ற கேப் ஷனுடன் விஜய் களமிறங்கி யதும் ‘தலைவா’ ரிலீஸுக்குப் பல முட்டுக்கட்டைகள் போட்டார் ஜெயலலிதா. தொடர்ச்சியாகவே ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்று விஜய் படங்கள் சர்ச்சையில் சிக்கினாலும் ஜெயலலிதா இருக்கும்வரை அமைதிகாத்தே வந்தார் விஜய். ஆனால், அரசியல் களத்தில் நிலைமை மாற ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டிக்கு எதிராக விஜய் வசனம் பேசினார். களத்தில் குதித்தது பா.ஜ.க. ஹெச்.ராஜா விஜய்யின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு முதல் பான் கார்டு, பால் கார்டு வரை எடுத்து அவர் ‘ஜோசப் விஜய்- கிறிஸ்தவர்’ என்றார். அசராத விஜய் அடுத்து வெளியிட்ட அறிக்கையில் தன் பெயரை ‘ஜோசப் விஜய்’ என்றே போட்டார். ‘கத்தி’ படத்தி லேயே ஸ்பெக்ட்ரம் பிரச்னையைச் சுட்டிக்காட்டி தி.மு.க-வைச் சீண்டிய விஜய், ‘சர்கார்’ படத்தில் தி.மு.க, அ.தி.மு.க என்று இரு திராவிடக் கட்சிகளையும் சீண்டிப்பார்க்க, எதிர்ப்பு கிளம்பியது.

இன்று: ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்தவரிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தி, விஜய்யின் அரசியல் ஆர்வத்தைத் தணியவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன மத்திய, மாநில ஆளுங்கட்சிகள். இப்போதைக்கு எந்தச் சர்ச்சையிலும் சிக்காமல் அவர் உம்முன்னு இருந்தாலும் உசுப்பேற்றுவது என்னவோ அவர் ரசிகர்கள்தான். விஜய்யை எம்.ஜி.ஆராகச் சித்திரித்து, தொடர்ந்து போஸ்டர் அடித்து ‘அரசி யலுக்கு வா தலீவா’ என்கி றார்கள். அமைச்சர் ஜெயக்குமாரோ ‘எம்.ஜிஆர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று, கம்முன்னு இருக்கும் விஜய்யைக் கடுப்பேற்றிவருகிறார்.

நாளை: மற்ற நடிகர்கள் எப்படியோ, விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. அதற்காகவே ‘விஜய் மக்கள் இயக்கம்’ தொடங்கப்பட்டது. எனவே, 2026 அல்லது 2031 தேர்தலில் கண்டிப்பாகக் களத்தில் இருப்பார் விஜய்.

‘அமைதி’ அஜித்!

நேற்று: அதிகம் சர்ச்சைகளில் அடிபடாதவர் அஜித். கருணாநிதி ஆட்சியின் போது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் டெம்போவில் ஏற்றிச்சென்று அடிக்கடி ‘பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா’க்களை நடத்துவது வழக்கம். நடிகர்கள் உள்ளுக்குள் புழுங்கினாலும் வெளியில் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கருணாநிதி முன்னிலை யிலேயே ‘மிரட்டுறாங்கய்யா’ என்று மேடையிலேயே போட்டுடைத்தார் அஜித். அந்த தில் ஸ்டேட் மென்ட் டுக்குப் பிறகு மீடியாக்களின் வெளிச்சமே படாமல் ஒதுங்கியிருக்கிறார் அஜித். அரசியல் சார்பாகவும் எந்த அடையாளமும் வைத்துக் கொள்வதில்லை. ஜெயலலிதா இறந்தபோது வெளிநாட்டில் இருந்த அஜித், நாடு திரும்பியதும் தன் மனைவி ஷாலினியுடன் சென்று ஜெயலலிதா சமாதியில் மரியாதை செய்தார். அதேபோல கருணாநிதி உடல் நலமில்லாமல் இருந்தபோது காவிரி மருத்துவமனைக்கே சென்று ஸ்டாலினிடம் கருணாநியின் உடல்நலம் விசாரித்தார். திருப்பூரில் அஜித் ரசிகர்கள் சிலர் பா.ஜ.க-வில் இணைய, ‘விஜய் பா.ஜ.க எதிரி என்பதால் எதிரிக்கு எதிரி நண்பன்’ என்று தப்புக்கணக்குப் போட்ட தமிழிசை, அஜித்தைப் புகழ்ந்தார். ‘தனக்கு அரசியலில் வர விருப்பமில்லை’ என்றும் ‘தனக்கு எந்தச் சாயமும் பூச வேண்டாம்’ என்றும் அஜித்திடமிருந்து உடனடியாக அறிக்கை வந்தது.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு வியூகம்! - சினிமா டு அரசியல் ரூட்

இன்று: ‘சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் எனது கட்சிக்காரர் சார்பாகவோ அல்லது அவர் பிரதிநிதிபோலவோ அனுமதியின்றித் தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தன்னுடன் பல வருடங்களாகப் பணியாற்றி வரும் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற பிரதிநிதி என்று அறிவிக்கிறார்’ என்று அஜித் தரப்பிலிருந்து அறிக்கை வந்தது. அஜித்தின் முன்னாள் நண்பர்கள் சிலர் அவர் பெயரைச் சொல்லி அமைச்சர்களைச் சந்திப்பதால் இந்த அறிக்கை என்று சொல்லப்பட்டது. ஆனால் இதை மறுத்த அஜித் தரப்பு, ‘எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது’ என்கிறது.

நாளை: ரஜினி, விஜய் என்று எல்லா நடிகர்களின் ரசிகர்களுக்கும் இருப்பதைப் போலவே அஜித் ரசிகர்களுக்கும் அஜித், தலைவனாக வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. இப்போது வரை அஜித் ‘மிஸ்டர் சைலன்ட்.’ ஆனால் இப்படி பட்டும் படாமல் ஒதுங்கியிருந்த கமல்தான் கட்சி ஆரம்பித்தார் என்பதால் நாளை என்ன நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

‘நான் ரொம்ப ஓப்பன்’ விஜய்சேதுபதி!

நேற்று: விஜய் சேதுபதி மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர். ஜனநாதன் போன்ற முற்போக்கு இயக்குநர்களின் நட்பு, இப்போதைய அரசியல் சூழல் எல்லாம் இதற்குக்காரணம். அனிதா தற்கொலையின்போது நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலைக்கான கோரிக்கை ஆகியவற்றுடன் மேடைகளில் சாதி ஒழிப்பு பேசுவது, பெரியார் குறித்த கருத்துகளை முன்வைப்பது என்று முற்போக்கு முகம் காட்டுபவர் விஜய்சேதுபதி. இதன் காரணமாகவே அவருக்குத் திராவிடர் கழகம் பெரியார் விருதையும் அளித்தது. விஜய்யை மத அடையாளத்தைத் தோண்டியெடுத்து விமர்சித் ததைப்போல விஜய்சேதுபதி மனைவியின் மத அடையாளத்தை முன்னிறுத்தி அவரை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ்த் திரைத்துறையில் மதமாற்றம் செய்ய ஒரு கூட்டமே வேலை செய்வதாகவும் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டது ஒரு கோஷ்டி. பொறுமையிழந்த விஜய்சேதுபதி, ‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று ட்வீட் தட்டினார். ஆனாலும் அவர்கள் வேலையே இதுபோன்ற சர்ச்சைகளைக் கிளப்புவதுதான் என்பதால் அவ்வப்போது விஜய் சேதுபதியை விமர்சித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு வியூகம்! - சினிமா டு அரசியல் ரூட்
ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு வியூகம்! - சினிமா டு அரசியல் ரூட்

இன்று: ஜனநாதனின் ‘லாபம்’ மற்றும் ‘க/பெ.ரணசிங்கம்’ என்று தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் படங்கள் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை விமர்சிப்பதால் விஜய்சேதுபதி அவ்வளவு சீக்கிரம் சர்ச்சை வட்டத்திலிருந்து வெளியேற மாட்டார் என்று சொல்லலாம்.

நாளை: ‘வம்பு சண்டைக்குப் போக மாட்டேன். வந்த சண்டையை விடமாட்டேன்’ என்பது விஜய் சேதுபதியின் இயல்பு. அது அவரை எங்கு கொண்டு செல்லும் என்பதை வருங்காலம்தான் சொல்லும்!

‘விறுவிறு’ விஷால்!

நேற்று : நடிகர் சங்கம் என்பது சீனியர் நடிகர்களின் செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதுதான் வழக்கம். ஆனால் இளைய நடிகர்களைத் திரட்டி, சரத்குமார்-ராதா ரவிக்கு எதிராகக் களமிறங்கிய போதே கவனிக்கப்பட்டார் விஷால். ‘பாண்டவர் அணி’ அமைத்து நடிகர் சங்கச் செயலாளர் பதவியைக் கைப்பற்றிய விஷால், படத்தில் பஸ் ஏறி பல ஊர்களுக்குச் செல்வதைப்போல, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பஸ்ஸைத் திருப்பி, அங்கும் வென்றார். இரண்டு சங்கத் தேர்தல்களிலும் வென்று விட்டதால் எல்லாத் தேர்தல்களிலும் வென்று விடலாம் என்று நினைத்த விஷால், ஜெயலலிதா இறந்தபிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் களமிறங்கினார். ஆனால் அவரது வேட்புமனுவில் பிழை இருப்பதாக நிராகரிக்கப்பட, அதற்கு எதிராகப் போராட்டமும் நடத்தினார்.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு வியூகம்! - சினிமா டு அரசியல் ரூட்

இன்று : ‘நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டிவிட்டுத்தான் திருமணம் செய்வேன்’ என்று அறிவித்துவிட்டுத்தான் தேர்தலில் நின்றார் விஷால். ஆனால் இன்றுவரை இரண்டுமே நடக்கவில்லை. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலும் தொடக்கத்தில் துணைநின்ற பலரே விஷால்மீது புகார்களை அடுக்கினார்கள். தேர்தல் சர்ச்சை, திருமண சர்ச்சை, ‘துப்பறிவாளன் -2’ சர்ச்சை என சர்ச்சைமேல் சர்ச்சை என்று ஒரு அரசியல்வாதிக்கான அத்தனை பொருத்தங்களும் விஷாலுக்கு இருக்கின்றன.

நாளை: இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஷால் 2021 பொதுத்தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை இந்தத் தேர்தலில் இல்லையென்றாலும் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரும் வாய்ப்புள்ளவர்தான் விஷால்.

மேற்கண்ட பெரும்பாலான சர்ச்சைகளில் ஏதோ ஒருவகையில் பா.ஜ.க சம்பந்தப் பட்டிருக்கிறது. இவை யெல்லாம் பா.ஜ.க எதிர்ப்புச் சர்ச்சைகள் என்றால் ஆதரவுச் சர்ச்சைகளும் சினிமா நடிகர்களைச் சுற்றிவருகின்றன. விஷால், சிவகார்த்திகேயன் இருவரும் பா.ஜ.க-வில் சேரப்போவதாக சமீபத்தில் வதந்திகள் கிளம்பின. இருவரும் பதறிப்போய் உடனடியாக அதை மறுத்தனர்.

விஷால் ஏற்கெனவே ஆர்.கே.நகர் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் மூலம் அரசியல் ஆசையை வெளிக் காட்டியவர் தான். ஆனால், சிவகார்த்தி கேயன், தன் கரியரைச் செதுக்குவதில் முனைப்பு காட்டுகிறாரே தவிர எந்த வம்புதும்பிலும் சிக்குபவர் இல்லை. ‘வேலைக்காரன்’, ‘ஹீரோ’ என்று அவர் படங்கள் சமூகக்கருத்துகள் பேசினாலும் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை. அப்படிப்பட்ட வருத்தப்படாத வாலிபரையே பதற வைத்தி ருக்கிறது ‘பா.ஜ.க-வில் இணைகிறார்’ ஹேஷ்யம்.

இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க நடிகர்களை மையமாக வைத்து பல அரசியல் வியூகங்கள் வகுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை!