Published:Updated:

''கலைஞரைப் பிடிக்கும். 'இந்தியன்-2' வெளியாகுமா தெரியாது!" கமல் ஷேரிங்ஸ்.

அலாவுதின் ஹுசைன்
''கலைஞரைப் பிடிக்கும். 'இந்தியன்-2' வெளியாகுமா தெரியாது!" கமல் ஷேரிங்ஸ்.
''கலைஞரைப் பிடிக்கும். 'இந்தியன்-2' வெளியாகுமா தெரியாது!" கமல் ஷேரிங்ஸ்.

கல்விக்கான பொதுநலத் தொண்டு அமைப்பு சார்பில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல் பங்கு பெற்றார். ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு கல்லூரி மாணவர்கள் குழுமியிருந்த அரங்கில் பேசினார் கமல். அரசியலில் தனது வருகையை அறிவித்த பிறகு, இவர் மாணவர்களைச் சந்திப்பது இதுவே முதல் முறை. கூடுதல் விஷயமாக, மாணவர்களுக்கு அவர் எழுதிய வாழ்த்து செய்திக்கு கீழ் கமல்ஹாசன் என கையொப்பமிட்டு அரசியல்வாதி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கமல் பேசுகையில், " மாணவர்கள் 
ஒதுங்கியிருந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலைக்கு ஆளாகிட்டோம் என்று எண்ணாமல், நம்மால் என்ன செய்யமுடியும் என்ற துணிவு வர வேண்டும். நாடு கெட்டுப்போச்சு, படிப்பு கெட்டுப்போச்சு, ரோடு கெட்டுப் போச்சுன்னு சொன்னா போதாது. அதற்கு  என்ன செஞ்சிங்கன்னு பாக்கணும். உங்கள் விழிப்பு உணர்வே முக்கியம். அதைச் சொல்லிவிட்டுச செல்லவே இங்கு வந்தேன். ஏனெனில், நாளைய தலைவர்கள் நீங்கள்.  நான் தலைவனாக இங்கே வரவில்லை." என்றார்.

"நீங்கள் பங்கு பெறாமல் நடந்த பங்கங்கள் எல்லாவற்றையும் நீங்கள் மாற்றியமைக்கும் நேரம் வந்துவிட்டது. 2019, 2021-ல் அல்ல... இன்றுமுதல் நீங்கள் இதை ஆரம்பிக்க வேண்டும். இங்கே கல்விக்கு உதவுகிறார்கள். நாங்கள் பெற்றால்தான் பிள்ளையா என்று எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 2000 குழந்தைகளுக்கு உதவினோம். அவர்களது நம்பிக்கையும், அறிவியல் வளர்ச்சியும் இன்று அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இது  சமுதாயத் தொண்டு, சேவை  என்பார்கள், அதிலும் சிறு சுயநலமும் இருக்கிறது."

"அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு வரைபடம் இருக்கிறது. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அரசியல்வாதிக்குப் பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... உதாரணத்திற்கு இப்படி இருக்கலாம் (என மாணவர்களைப் பார்த்துக் கை காட்டினார்). அந்த நம்பிக்கை உங்களுக்கு வரணும். என்கூட வாங்கனு நான் கூப்பிடல, தயவு செய்து வாங்க... வந்து உங்கள் ஆற்றலை நிரூபியுங்கள். நாம் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் தானாக நிறைவேறும். விமர்சகர்களாக மட்டும் இருந்துவிடமுடியாது. வீரர்களாக இருக்க வேண்டும். இங்கே இந்தக் கருத்தை இத்தனை மனங்களில் விதைத்து இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. இதைப்பற்றி ஒரு ஐந்து நிமிடம்  நீங்கள் பேசினால், விவசாயம் தொடங்கிவிட்டது என எண்ணிக் கொள்வேன்"  

"அரசியலைப் பற்றிப் படியுங்கள் இதில் உள்ள குறைகளைக் கண்டுபிடியுங்கள் , மாற்றுங்கள். இன்றுமுதல் செய்தி, நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் கடமை, நாட்டில் யார் கொள்ளையர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏன் என் கல்வி நிலை உயரவில்லை? எனக் கேள்வி கேளுங்கள், உங்களுக்குக் கிடைத்த இந்தக் கல்வி, எல்லாத் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் ஏன் கிடைக்கவில்லை எனக் கோபப்படுங்கள். இதை ஏற்பாடு செய்யவேண்டிய அரசு டாஸ்மாக் மூலம் மது விற்றுக்கொண்டிருக்கிறது. அது வியாபாரம் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கழுத்தளவு தண்ணீர் வரும்வரை களமிறங்கி அதை செய்யத் தேவையில்லை அதை அரசு கண்காணித்தால் போதுமானது. கல்வி, சுகாதாரம் என இங்கே அரசு களமிறங்க வேண்டிய இடம் இது. தனியார்கள், தன்னார்வலர்கள் செய்யும் கல்விதான் இங்கே இருக்கிறது, அதை மாற்றவேண்டும். அது உங்களால் முடியும். " என்றார்.

பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ராகுல்காந்தியை வாழ்த்தி பதிவிட்ட ட்வீட் பற்றி எழுந்த கேள்விக்கு, "நீங்கள் இருக்கும் இருக்கை உங்களுக்கு மரியாதை தராது. உங்களது செயல்களே நீங்கள் யாரென்று புரியவைக்கும்  உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தரும் .என்றார். அவருக்கு பிடித்த தலைவர்கள் யாரென்ற கேள்விக்கு, "போர் சேதங்கள் ஏதும் இல்லாமல் போரை ஏற்படுத்திய மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.  அவருக்கு நேர் எதிராக நின்று விமர்சனங்கள் வைத்த அம்பேத்கர். பெரிய காந்தி பக்தனாய் இங்கு இருந்த காமராஜர், சமுக மாற்றத்தைக்  கொண்டுவந்து வாக்குச்சாவடி அரசயலில் சேராமல் வெளியில் இருந்தே சமூகத்தைக் செதுக்கிய பெரியார், சினிமா நடிகர்தானே என அனைவரும் எண்ணும்போது, பாமரக் கனவுகளோடு வந்து, அதை நிறைவேற்றிக் காட்டிய எம்.ஜி.ஆர் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் நிறைய நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். சொன்னால், பெயரை வைத்து ஆதாயம் தேடுகிறேன் என்பார்கள்.  பிடித்த தலைவர் என்றுக் கேட்டதால் சொல்கிறேன் கலைஞரையும் எனக்குப் பிடிக்கும்" என்றார்.

இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு கமலின் திட்டம் என்ற கேள்விக்கு "எனது வரிசையில் தமிழகம் முன்னிலை பெரும். எனது வீடு அக்கம் பக்கம் ஒழுங்காகவும், சுத்தமாகவும் இருந்தால் நாடு தானாக மாறும். இங்கு கல்விதான் வறுமையை ஒழிக்கும் என்று சொன்னவர்கள்,  தங்கள் வறுமையைப் போக்கிக்கொண்டு சுவிஸ் பேங்க்கில் கணக்கு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் ஆடுகள் இல்லை, நமக்குத் தலைவர்கள் தேவையில்லை. நாம் சொல்வதை, நமக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கான ஒரு ஆபிஸர் இருந்தால் போதும். அவர் தனது கடமைகள் செய்யாவிட்டால் உடனே பதவியைவிட்டு அகற்றுங்கள்.  உங்களுடைய திட்டம்தான், என்னுடையதும். நல்ல திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள், அதைக் கூச்சப்படாமல் எடுத்துக்கொள்கிறேன். "

ஊழலை ஒழிப்பது மற்றும், அவரது திரைப்படங்களுக்கு வரும் சர்ச்சைகள், திடீரென்று அரசியலுக்கு வருவதற்கான காரணம் குறித்த கேள்விகளுக்கு, "இல்லை என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வாய்ப்புகள் வரும்போது நான் முடியாது எனக் கூறியிருக்கிறேன், அதனால் பலவற்றை இழந்திருக்கிறேன். நேர்மைக்கு விலை தியாகங்கள். அதை மக்கள் அனைவரும் வழிப் படுத்திக்கொள்ளலாம். 'அன்பே சிவம்' , 'தசாவதாரம்', 'வறுமையின் நிறம் சிவப்பு' ஆகிய படங்களை இன்றைக்கு என்னால் எடுக்கமுடியாது  எடுத்தால், என் மேல் வழக்கு போடுவார்கள். 'இந்தியன் 2' படம்கூட வெளிவர விடமாட்டார்கள் என நினைக்கிறேன். இங்கே இருப்பவர்களுக்கு சவாரி செய்ய ஒரு பிரச்னை எப்போதும் தேவை. அது எதுவாக இருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. சர்ச்சைகள் படத்தில் இல்லை, அவர்கள் உருவாக்குவதில் இருக்கிறது. இன்று 'பத்மாவத்' படத்தைப் பார்த்துவிட்டு யாரும் கோபம் கொள்ளவில்லை. எங்கேயோ ஒரு இடத்தில் படத்தின் பெயரால் குழந்தைகள் மீது கல்லெறிகிறார்கள். 'நாளை நமதே' என்று முழங்கிவிட்டு. எதிர்காலத்தின் மீது கல்லெறிவதைப் பார்க்கமுடியவில்லை. அவர்களுக்கு வேண்டியது பிரச்னை மட்டுமே. பத்து பதினைந்து வருடங்களாகவே ஒரு கோபம் வந்தது. நல்லது செய்ய கோபம் மட்டும் போதாது, நல்ல எண்ணம் வேண்டும் அன்று நான் கூறியதுதான் சாத்தியம் என்பது 'சொல் அல்ல செயல்' . இந்தக் கோபம்தான் உங்களுக்கும் வரவேண்டும். ஒரு பத்து வருடமாக ஓட்டு போடுங்கள் எனச் சொல்லிவருகிறேன் அதுவே நான் அரசியலுக்கு வந்ததற்குச் சமம். இதெல்லாம் தாண்டி, சில மஹானுபாவர்கள் என்னை  அரசியலுக்கு வரவழைத்துவிட்டனர்." என்றார்.