Published:Updated:

சினிமா ட்ரெய்லர் ஏமாற்று வேலை. - ராதாரவி

சினிமா ட்ரெய்லர் ஏமாற்று வேலை. - ராதாரவி
சினிமா ட்ரெய்லர் ஏமாற்று வேலை. - ராதாரவி

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கப் பிரச்னைகள், ரஜினி, கமலின் அரசியல் என்ட்ரி... சினிமாவிலும், அரசியலிலும் இருக்கும்  பலதரப்பட்ட சூழலில், நடிகர் ராதாரவியைத் தொடர்புகொண்டோம்.

விஜயகாந்த் : 

"விஜயகாந்த் என் நண்பர். முன்பு இருந்ததைப்போலவே கம்பீரமாக, அழகாக இருக்கிறார் அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அவருடைய பேச்சில் குழறல் தெரிகிறது இதற்குப் பிரேமலதா, 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்ட பிறகு குழறிப் பேசவில்லையா, அதுபோலத்தான் கேப்டனும் மழலைக்குரலில் பேசுகிறார்' என்று தனியாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். மக்கள் திலகத்தின் கரிஷ்மா வேறு, விஜயகாந்தின் கரிஷ்மா வேறு.

கமல் :

தமிழக அரசியலில் பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் தவறு, அமைதியாக இருக்கவேண்டிய நேரத்தில் பேசுவதும் தவறு. இந்த விஷயத்தில் கமல் சரியாக இருக்கிறார். தமிழில் புலமை பெற்றவர் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிய தமிழ் புரியவில்லை என்று பலபேர் சொன்னார்கள். கமல் மிகப்பெரிய ஹோம் வொர்கர். வாரத்தில் ஒருநாள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு, ஐந்து நாள்கள் நாட்டில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுவரும் புத்திசாலி. 

பிக்பாஸ் :

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை அதிகம் பார்த்தது இல்லை. ஏனெனில், என் நேரத்தில் ஒருமணி நேரத்தை வேஸ்ட் செய்யறதுக்கு எனக்கு மனசில்லை. ஒருமுறை பார்த்தபோது, ஜூலி என்கிற பெண் அழுதுகொண்டே இருந்தார். இன்னொருமுறை பார்க்கும்போது ஜூலி நிகழ்ச்சியைவிட்டே தூக்கிட்டாங்கனு சொன்னார்கள். அப்புறம் மறுபடியும் திரும்பிவந்துவிட்டது என்று சொன்னார்கள். இதன்மூலம், 'பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, ஒரு அறையில் போட்டுப் பூட்டுவது அல்ல, அவ்வப்போது திறந்துவிடுவார்கள்' என்று தெரிந்துகொண்டேன்.

பார்த்த படம் :

டிரெய்லர் பார்த்து ஒரு படத்தைத் தீர்மானிக்க முடியவில்லை. ஒரு ஜவுளிக்கடையில் விளம்பரம் செய்யும்போது, 'ஒரு புடவை வாங்கினால், இன்னொரு புடவை இலவசம்' என்று சொன்னால், தரமில்லாத புடவையை விற்கிறார்கள் என்பது புரிந்துபோகிறது. அதுபோல, சினிமாவிலும்  டிரெய்லர் என்பது ஏமாற்று வேலை. ஜவுளிக்கடைக்காரன் பாணியில் ரசிகர்களை ஏமாற்றுகின்றனர்.  நான் படம் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிறது. 'விக்ரம்வேதா' படத்தைத்  தியேட்டரில் போய்ப் பார்த்தேன். மாதவன் நல்லா நடித்திருந்தார், விஜய்சேதுபதி செயற்கை தாடியை வைத்துக்கொள்ளாமல், ஒரிஜினல் தாடியையே வளர்த்து இயல்பாக நடித்திருந்தார். 

தற்போதைய தமிழ்சினிமா :

சினிமாவில் எல்லோரும் டி.வி.டி-யில் திரைப்படம் பார்க்காதீர்கள், தியேட்டருக்குச் சென்று பாருங்கள் என்று சொல்கிறார்களே... முதலில் தியேட்டருக்குச் சென்று பார்க்கிற மாதிரியான தரமான படங்களை எடுங்கள். பழைய 'கிளியோபட்ரா' திரைப்படத்தை எந்த டிவி,  டி.வி.டி-யில் போட்டாலும் ரசிக்கமுடியாது. அந்தப் படத்தை தியேட்டரில்தான் முழுமையாக ரசிக்கமுடியும். கோயிலுக்குச் சென்று கருவூலத்தில் இருக்கும் மூலஸ்தானத்தை வழிபடுவது, மொட்டையடிப்பதுதான் இயல்பு. அதுமாதிரிதான் தியேட்டரில் போய்ப் படம்பார்ப்பதும். உங்கள் தெருவில் வீடுதேடிவரும் உற்சவர் போலத்தான், நீங்கள் டி.வி.டி-யில் பார்க்கும் திரைப்படங்கள். முன்பு புரட்சித் தலைவர், எங்கள் அப்பா நடித்த ஒருபடம் தோல்வியடைந்துவிட்டால், உடனே அதே தயாரிப்பாளருக்கு தன்சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு படம் நடித்துக்கொடுப்பார்கள். தயாரிப்பாளர்களும், என் அப்பா எம்.ஆர்.ராதாவுக்குப் போன் போட்டு, 'அண்ணே, உங்கள் சம்பளத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கோங்க' என்று அன்பாகக் கேட்பார்கள். அப்பாவும் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொள்வார். 

இன்றைய ஹீரோக்கள் :

எந்த ஹீரோக்கள் இப்போது அப்படிச் செய்கிறார்கள்? முன்பு நடித்த ஹீரோக்களின் முகங்கள் மனதில் நிற்கும். இப்போது ஹீரோக்களுக்கான இலக்கணம் எங்கே இருக்கிறது. இரவில் படுத்தவர், தூங்கி எழுந்து குளிக்காமல் முகத்தை மட்டும் துடைத்துவிட்டு நடிக்க வந்துவிடுகிறார்கள். சினிமாவில் எந்தத் தயாரிப்பாளர் முதலாளி ஸ்தானத்தில் இருக்கிறார்கள்? இப்போது ஆர்.பி.செளத்ரி, கேயார் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

கேட்கும் பாடல்கள் : 

என்னுடைய காரில் பழைய எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினிகணேசன் பாடல்களைத்தான் கேட்பேன். இப்போது உருவாகும் பாடல்களில் தமிழ்மொழி தெளிவில்லாமல் இருப்பதால், என்னால் ரசிக்க முடியவில்லை. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வெளிநாட்டுக்காரர்கள் சிலர், 'கந்தனுக்கு அரோகரா...' என்ற தமிழ்ப்பாடலை சரியான உச்சரிப்போடு பாடுகிறார்கள். நான் புதுப்படம் தயாரிக்கப் போகிறவன். இங்கே இருப்பவர்கள்  தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்களாக இருப்பதால், அந்த வெளிநாட்டுப் பாடகர்களை அழைத்துப் பாடவைத்து, தமிழை வாழவைக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.     

பின் செல்ல