Published:Updated:

அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..!

அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..!

அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..!

அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..!

அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..!

Published:Updated:
அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..!

தமிழகத்தையும் திராவிடத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதே நிதர்சனம்.தமிழ் சினிமா நமக்கு 5 முதல்வர்களை (அண்ணா, கருணாநிதி , எம்ஜிஆர், ஜானகி,ஜெயலலிதா)  தந்துள்ளது. 60 ஆண்டு கால தமிழக அரசியல் இவர்களை சுற்றியே நடந்திருக்கிறது. சினிமாவும், அரசியலும் ஒன்று என்பது இதிலிருந்தே புரிந்திருக்கும்.

அண்ணாவும், கருணாநிதியும்:

அறிஞர் அண்ணா ஒரு பக்கமும், கருணாநிதி இன்னொரு பக்கமும் திரையில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொண்டிருந்த காலகட்டம் 1950.1952இல் வெளியான 'பராசக்தி'யில் கருணாநிதியுன் வசனம் பட்டிதொட்டி எங்கும் பரவின. நாத்திகவாத கருத்துக்கள் படம் முழுவதும் காணப்பட்டன. திமுகவின் கொள்கைகளை திரைப்படத்துறையின் மூலம் தமிழகமெங்கும் கொண்டு சென்றனர் அண்ணாவும்,கருணாநிதியும்.

எம்.ஜி. ஆர்:

முதலில் காங்கிரஸில் இணைந்து,பிறகு அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார் எம்.ஜி. ஆர்.அண்ணா இவரை அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார்.காரணம் மக்களிடையே எம்.ஜி. ஆருக்கு இருந்த செல்வாக்கு. அண்ணாவின் மறைவிற்கு பிறகு,கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அதிமுகவை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.1977 முதல் 1987 வரை, அதாவது தான் இருக்கும் வரை முதல்வராக இருந்ததே, மக்களிடையே இவருக்கு உள்ள செல்வாக்கினை நிரூபிக்கும். ஏழைகளுக்கு உதவுவது,பெண்களுக்கு உதவுவது என நேரில் இருப்பது போல் திரையில் பல காட்சிகளை நடித்தால் மக்கள் எம்.ஜி. ஆரை அப்படியே ஏற்று கொண்டனர். 1958இல் வெளியான 'நாடோடி மன்னன்' திரைப்படம் திமுகவின் கொள்கைகளுக்கு சாட்டையடியாக இருந்தது.பின்னர் வந்த உரிமைக்குரல், இதயக்கனி போன்ற படங்கள் நேரடி அரசியலை பேசின. தமிழ் திரையுலகில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து,பெரும் வெற்றி பெற்றது 'எம்ஜிஆர்' மட்டுமே.

விஜயகாந்த்:

எவ்வித பின்புலமும் இல்லாமல் 2005இல் தனது தே.மு.தி.க கட்சியினை தொடங்கினார் விஜயகாந்த்.இவர் நடித்த முக்கால்வாசி படங்கள் அரசியல்,காவல்துறை சம்பந்தப்பட்டதே. ஊழலை எதிர்த்து தலைமறைவு இயக்கம் (ரமணா),தேர்தல் அதிகாரியாக வந்து,பின்னர் முதல்வர் பதவியை பிடிப்பது (தென்னவன்),தனது தேமுதிக கொடியினை காட்டி,ஊர்வலம் செல்வதாகவும் (ராஜ்ஜியம்) நடித்துள்ளார் விஜயகாந்த்.'அரசியலுக்கு வர்றதுன்னா நேரடியா வருவேன்,சில பேர் மாதிரி இப்ப அப்போன்னு இழுத்துட்டு இருக்க மாட்டேன்' என்ற வசனத்தை நரசிம்மா படத்தில் பேசி தான் விரைவில் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார் விஜயகாந்த். 

ரஜினி:

ரஜினி தான் நடித்த படங்களில் ஆங்காங்கே,தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தி உள்ளார். 'அத்த, நீங்க தமிழ் நாட்டுக்கே ராணி மாதிரி, நான் தமிழ் நாட்டுக்கே,எதுக்கு விடுங்க, எல்லாருக்கும் தெரியும்'  (மாப்பிள்ளை ),'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு...?' , 'எல்லாரும் எதிர்பார்க்கிறத நான் செய்ய மாட்டேன்... நான் செய்ய போறது என்னான்னு யாரும் எதிர்பார்க்க விடவும் மாட்டேன்' (உழைப்பாளி ),'என்வழி தனி வழி' (படையப்பா) இப்படி தன்னுடைய அரசியல் ஆர்வத்தை பல படங்களில் கூறியிருக்கிறார்

'நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்' என்ற வசனம் முத்து படத்தில் இடம்பெற்றது. இதுவும் அவரது அரசியல் குறித்த அறிவிப்பாகவே பார்க்கப்பட்டது. இப்படி பல படங்களில் வசனங்களாலேயே அரசியல் பேசிக்கொண்டிருந்த ரஜினி, தற்போது மேடைகளிலும் பேசி வருகிறார். 

கமல்:

1978 ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்தை தொடங்கிய கமல், 1989 ஆம் ஆண்டில் நற்பணி மன்றமாக மாற்றினார். பல வருடங்களுக்கு முன்பே 'இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்' என்று கூறினார் கமல்ஹாசன். விருமாண்டி பட பெயர் பிரச்னை,விஸ்வரூபம் பட பிரச்னைகள் என தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்னைகளை சந்தித்தவர் கமல். கமல்ஹாசன் தனது திரைப்படங்களில் வன்முறைக்கு எதிராக எந்த அளவிற்கு கருத்துக்களை தெரிவித்திருக்கிறாரோ அதே அளவிற்கு வன்முறை மிகுந்த திரைப்பட கதாபாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார்.'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' என்ற இந்த ஒற்றை வரி 'நாயகன்' பட  வசனமே 'நம்மவருக்கு' போதும்.

விஜய்:

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம்  என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். 2009 ஆகஸ்டில் புதுவையின் அன்றைய முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தைக் கூட்டி நலத்திட்ட உதவிகளை செய்தார் விஜய்.அப்போது பேசிய விஜய், ‘அரசியலுக்கு கட்டாயம் வருவேன். ஆனால், நிதானமாக வருவேன்'என்றார். சில தினங்களிலேயே டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார். விஜய் தரப்பில் அப்போது ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கேட்கப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டன.

காவலன் பட பிரச்னைக்கு திமுக தான் காரணம் என்று, 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர் விஜய் ரசிகர்கள்.'இந்த மண்ணை ஆண்டவர், எங்க மனசை ஆண்டவர், இந்த மாநிலத்தையே....' (வேலாயுதம்),`இனி நீங்கதான் எங்க அண்ணா' (தலைவா),புலி படத்தில் செங்கோல் வாங்குவது என தன் படங்களில் அரசியலை வெளிப்படுத்தினார் விஜய்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும்,பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். ‘மெர்சல்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில், அவரது பெயருக்கு முன் ’தளபதி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவரை "இளையதளபதி" என்ற அடைமொழியைப் பயன்படுத்திவந்தவர், தற்போது தளபதியாக மாறியிருப்பது அவரது அரசியல் பிரவேசத்துக்கான குறியீடு என கருதப்படுகிறது.

சுருக்கமாக பார்த்தால் அறிஞர் அண்ணாவும்,கருணாநிதியும் தொடங்கிவைத்த இவ்வழியில் எம்ஜிஆர் புகழின் உச்சிக்கு சென்றார்.ஜெயலலிதாவும் அப்படியே. ஆனால், திரைத்துறையை சேர்ந்த மற்றவர்கள் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை.

எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி, கே.பாக்யராஜ், டி.ஆர், சரத்குமார், கார்த்திக், மன்சூர் அலிகான், சீமான், கருணாஸ் என இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது வந்துள்ள ரஜினி - கமல், தன்னுடைய அரசியல் வருகையை தற்போதே உறுதி செய்துள்ள விஷால், விரைவில் வருவதற்கான அதிக சாத்தியங்களை கொண்ட விஜய் என " சினிமா டு அரசியல்"  லிஸ்ட் கொஞ்சம் பெருசு தான்.

இவ்வாறு சினிமாவில் தடம் பதித்த இவர்கள், தங்களுடைய அரசியல் ஆர்வத்தை தாங்கள் நடிக்கும் படங்களில் குறீயீடாகவும், வெளிப்படையாகவும் காட்சிப்படுத்தி வந்தனர்/வருகின்றனர். இவர்கள் தங்களது ரசிகர்களை நம்பியே 'அரசியலுக்கு' வருகின்றனர். ஆனால் அந்த ரசிகர்கள் எல்லாம் தொண்டர்களாக மாறுவார்களா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.