Published:Updated:

``காவிரி பிரச்னை என்றால் என்னவென்றே ரஜினிக்கு தெரியாது..!" - சீமான்

``காவிரி பிரச்னை என்றால் என்னவென்றே ரஜினிக்கு தெரியாது..!" - சீமான்

``காவிரி பிரச்னை என்றால் என்னவென்றே ரஜினிக்கு தெரியாது..!" - சீமான்

``காவிரி பிரச்னை என்றால் என்னவென்றே ரஜினிக்கு தெரியாது..!" - சீமான்

``காவிரி பிரச்னை என்றால் என்னவென்றே ரஜினிக்கு தெரியாது..!" - சீமான்

Published:Updated:
``காவிரி பிரச்னை என்றால் என்னவென்றே ரஜினிக்கு தெரியாது..!" - சீமான்

`காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், மத்திய அரசு இதைக் கண்டுகொள்ளாத நிலையில் இருப்பதைக் கண்டித்து, தமிழ் திரையுலகினர் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசைக் கண்டித்தும், பாதுகாப்புத்துறை கண்காட்சிக்காக தமிழகத்துக்கு நாளை வருகை தரவிருக்கும் மோடியை எதிர்த்தும் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவிக்க இருக்கின்றனர். இதுதொடர்பாக பாரதிராஜா, அமீர், சீமான், தமீமுன் அன்சாரி, ஆர்.கே செல்வமணி, வெற்றிமாறன், ராம், சேரன் ஆகியோர் இன்று 'சென்னை ப்ரஸ் க்ளப்பில்' செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். 

இது தொடர்பாக சீமான் கூறியதாவது, "நடிகர் சங்க ஆர்பாட்டத்தில்  ஊமையாக  நின்றவர்கள் கருத்து சொல்லத் தேவையில்லை. களத்தில் போராடியவர்கள் பேசினால் போதும். ரஜினியால் எந்த உரிமையையும் தமிழக மக்களுக்குப் பெற்றுத்தர இயலாது. அவருக்கு 'காவிரி பிரச்னை' என்றால் என்னவென்றே தெரியவில்லை. விவசாயிகளுக்கு நிகழும் தண்ணீர் பிரச்னை பற்றி எந்தத் தகவலையும் அறிந்து வைத்திருக்கவில்லை. போர் அடித்தால் இமய மலைக்கு சென்று வர வேண்டியதுதானே... அதை விட்டுவிட்டு ஏன் கருத்துச் சொல்ல முற்படுகிறார் ரஜினி?

கிரிக்கெட் பார்க்கச் சென்ற தமிழக மக்களுக்கான நீருக்கும் சோறுக்கும்தான் நாங்கள் போராடுகிறோம். இது முக்கியமா, இல்லை அந்த விளையாட்டு முக்கியமா? போராட்டத்தில் மக்களைத் தாக்க வந்த காவலர்களை விலக்க முயன்றேன். வெற்றிமாறனை அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இயக்குநர் களஞ்சியம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறவழியில் போராடினால் உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று கூறிய காவல்துறையினர், போராட்டக்களத்துக்குச் செல்லும் வழியிலேயே எங்களை அடிக்க ஆரம்பித்துவிட்டனர். முழு காணொளியையும் ஒளிபரப்பாமல், நாங்கள் சண்டையிட்ட வீடியோவை மட்டும் வெளியிட்டு, நாங்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளோம் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. 

ரஜினி ரசிகர்கள் அவருடைய போட்டோவைப் போட்டு 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்று எழுதி போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர். களத்திற்கு அவர்கள் ஒருபோதும் வருவதில்லை. வியர்வை சிந்திப் போராடுவதில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுவதில்லை.

போராட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்களை நாங்கள் தாக்கவில்லை. அப்படி தாக்கியிருந்தால், ஒருத்தராவது அரங்கத்துக்குள் சென்றிருப்பார்களா என்று யோசியுங்கள். ஒட்டுமொத்த தமிழர்களையும் வன்முறையாளர்களாக பார்க்காதீர்கள். ரஜினி காவிரிக்கான இந்தப் போராட்டடத்தைப் புறக்கணிக்கிறார். தமிழிசை அதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்" என்று கூறினார். 

மேலும் பாரதிராஜா இதுகுறித்து, "2016-ல் ஒரு தனியார் நிறுவன வண்டியை தீயிட்டுக் கொளுத்தினார்கள். நான்கு நாள்களுக்கு முன்பு பஸ் டிரைவர் ஒருவரை வன்முறைக்கு உட்படுத்தினார்கள். அப்போதெல்லாம் ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை? அவர் அமைதியாக இருப்பதை எண்ணி பெட்டிக்குள் பூ இருக்கிறது என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது பாம்பு இருக்கிறது என்று. ஐ.பி.எல் மைதானத்துக்கு முன்பு எந்தக் கட்சி சார்பும் இல்லாத மக்கள் இத்தனை பேர் ஒன்று கூடியிருந்தது சாதாரண காரணம் அன்று. குறைந்தபட்சம் 'அதை வரவேற்கிறேன்' என்றாவது ரஜினி ட்வீட் போட்டிருக்கலாம். 

கிரிக்கெட் மைதானத்தில் வெளி மாநிலத்தவர்கள்தாம் அதிகம் இருந்தனர். அங்கிருந்த வெள்ளை முகங்கள் தமிழர்கள் அல்ல. நாளை பிரதமர் வருகிறார். அதனை எதிர்த்து கறுப்புக் கொடி கட்டுவது என்பது நிச்சயம். எங்களுடைய எதிர்ப்பை, உணர்வை, வழியை நாளை நாங்கள் அறவழியில் காட்டுவோம். இவ்வளவு கொடுமைக்கு மத்தியில் மோடி நமது மண்ணில் காலடி எடுத்து வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். மோடி அரசு காவிரி மேலாண்மை அமைத்துக் கொடுத்து தமிழகத்தைச் சீர்படுத்தியிருந்தால், நாங்கள் அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்போம். நாளை காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் மோடி வந்து இறங்கும்போது, எங்களது கறுப்புக் கொடிகள்தாம் பறக்கும். 'தமிழகத்தைக் கண்டுக்காத மோடி அரசே திரும்பிப் போ' என்று கோஷமிடுவோம்" என்று தெரிவித்தார். 

இறுதியாக பேசிய அமீர், "ரஜினிகாந்த் அவர்கள் எத்தனை ஆண்டுகாலம் ட்விட்டர் பயன்படுத்துகிறார்? இத்தனை ஆண்டுகாலம் பேசாத இவர், இப்போது பேசுகிறார்... அதுவும் அதிகாரக் குரல்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். என்றைக்காவது பாமர மக்களுக்குப் பிரச்னை ஏற்படும்போது இவரது ட்விட்டர் பேசியிருக்கிறதா? காவல் துறையினர் தாக்கப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார். விஜயகாந்த் அவர்கள் அரசியலில் இருக்கும்போது, 'போலீஸ்காரர்கள் மிகவும் நல்லவர்கள் என்றே நினைத்தேன். ஏனென்றால் நான் நல்ல போலீஸ்காரானாகவே திரைப்படங்களில் நடித்துள்ளேன். இங்கு வந்த பின்தான் தெரிகிறது போலீஸ்காரார்கள் நல்லவர்கள் அல்ல' எனக் கூறியிருந்தார். அதேபோல் ரஜினிகாந்த் அவர்கள் களத்துக்கு வந்து போராடும்போதுதான் தெரியும் போலீஸ்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று. மெரினா போராட்டத்தின்போது வன்முறை நிகழ்த்தப்பட்டது. அப்போது ஏன் அவர் பேசவில்லை? மத்திய அரசின் குரல்தான் 'காவலர்களின் மீதான வன்முறைக்கு சிறப்புச் சட்டம் இயற்றுவது' என்பது. அதை ரஜினி ஆதரிக்கிறார் என்றால் அவரை மத்திய அரசுதான் பேச வைக்கிறது என்று அர்த்தம். போராட்டக்களத்தில் நாளை சந்திப்போம்" என்று அதிரடியாகக் கூறி முடித்தார்.