Published:Updated:

``அரசியலுக்கு வந்த பிறகுதான் எனக்குப் பிரச்னை அதிகமாகியிருக்குது!" - நடிகை காயத்ரி ரகுராம்

கு.ஆனந்தராஜ்

"அரசியல்ல இருக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் வளர விடமாட்டாங்க. நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுது. ஜெயலலிதா மேம் எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருப்பாங்கனு இப்போ உணர்றேன்."

``அரசியலுக்கு வந்த பிறகுதான் எனக்குப் பிரச்னை அதிகமாகியிருக்குது!" - நடிகை காயத்ரி ரகுராம்
``அரசியலுக்கு வந்த பிறகுதான் எனக்குப் பிரச்னை அதிகமாகியிருக்குது!" - நடிகை காயத்ரி ரகுராம்

டிகை  மற்றும் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும்கூட. சமீப காலமாக, சமூக வலைதளத்தில் இவருடைய கருத்துகள் எதிர்வினையை ஏற்படுத்த ``அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். இனி போலீஸில் புகார் அளிப்பேன்" என ட்விட்டரில் அறிக்கை விட்டிருக்கிறார். இச்சம்பவம் குறித்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் காயத்ரி ரகுராமிடம் பேசினோம்.

``ட்விட்டரில் ஆதங்கத்துடன் அறிக்கை விட்டிருக்கீங்க. என்ன நடந்தது?"

``நான் பி.ஜே.பி-யில இருக்கேன். அதனால, அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியில சமூக நிகழ்வுகளைப் பத்தி ட்விட்டர்ல என் கருத்தை வெளியிடுறேன். அதுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கருத்துச் சொல்லலாம். ஆக்கப்பூர்வமா இருந்தால், அதை நான் ஏத்துக்கத் தயார். என் கருத்துப் பிடிக்கலைன்னா அதை உரிய முறையில வெளிப்படுத்தணும். மாறா என்னைக் காயப்படுத்தணும்ங்கிற ஒரே நோக்கத்துல ஆபாசமாகவும், தவறான கருத்துகளையும் சொல்றாங்க. ஒருகட்டம் வரைக்கும்தான் பொறுமையா இருக்க முடியும். அதனாலதான் இப்போ கோபத்தில் அறிக்கை விட்டேன். இனி சம்பந்தப்பட்ட ஆள்கள் மேல போலீஸ்ல புகார் கொடுக்கப்போகிறேன்."

``யார் இப்படியெல்லாம் செய்றதா நினைக்கிறீங்க?"

``காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் செயலாக இருக்கும்னு நினைக்கிறேன். பி.ஜே.பியி-ல இருக்கிறதால நான் சொல்ற கருத்தை ஏத்துக்க முடியாம, என்னைக் காயப்படுத்துறது மட்டும்தான் அவங்களின் ஒரே நோக்கம். அதுக்காக 'பாட்ஸ்'ங்கிற ஒரு முறையை பயன்படுத்துறாங்க. அதற்கென ஒரு நிறுவனமே இருக்கு. அவங்களுக்குப் பணம் கொடுத்து, தங்களுக்குப் பிடிக்காத நபர்களை சோஷியல் மீடியாவில் எதிர்க்க, காயப்படுத்த சொல்லுவாங்க. அந்நிறுவனத்தினரும் பல நபர்களைக் கொண்டு சோஷியல் மீடியாவில் எதிர்க்கருத்துகளை வெளியிட வைப்பாங்க. பொதுவா அரசியல் விவகாரங்கள்ல சோஷியல் மீடியாவில் தாங்களா முன்வந்து கருத்து சொல்றவங்க 20 % பேர்தான். மீதி 80 % பேர் 'பாட்ஸ்' முறையில்தான் கருத்து சொல்றாங்க. ஒருத்தரை தாக்கணும்னு முடிவு பண்ணிட்டா அதுக்காக தரம் இறங்கவும் தயங்க மாட்றாங்க. அதனால நான் எதிர்கொள்ளும் மன உளைச்சல் அதிகம். ஆனாலும், ட்விட்டரை விட்டு விலகப்போறதில்லை."

``காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டுமே நீங்கள் குற்றம் சொல்லிப் பதிவிடுறீங்க. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி உரிய நடவடிக்கை எடுக்காததுதானே இப்போதையப் பிரச்னைக்கு முக்கியக் காரணம்?"

``கடந்த முறை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தாங்க. ஆனா, அவங்க காவிரி விவகாரத்துல சரியான தீர்வு கொடுக்கலை. இப்பவும் கர்நாடகாவுல காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்குது. அவங்க நினைச்சா பிரச்னை தீரும். அதுக்காக பி.ஜே.பியை குறை சொல்லக்கூடாதுனு நான் சொல்லலை. உரிய நேரத்தில்தான் எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். ரெண்டு மாநிலத்துக்கும் பிரச்னை இல்லாத மாதிரியான தீர்வை பி.ஜே.பி தரும். அதுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. பி.ஜே.பியை விமர்சனம் செய்யலாம். பிரதமர் மோடியிடம் நம் தரப்பு நியாயத்தைச் சொல்லலாம். ஆனால், அவருக்கு எதிராக, 'கோ பேக் மோடி'னு சொல்றதும், கறுப்புக் கொடி காட்டுறதும்தான் தவறுனு சொல்றேன். உடனே, என்னைத் தாக்கி கருத்து சொல்றாங்க."

``சோஷியல் மீடியாவால் பெண்களுக்கு மட்டும்தான் பிரச்னை வருவதாக நினைக்கிறீங்களா?"

``ஆண்களுக்கும் பிரச்னை இருக்கு. ஆனா, தனிப்பட்ட பர்சனல் வாழ்க்கையைப் பாதிக்கிற மாதிரி பெண்களைதான் அதிகமா காயப்படுத்துறாங்க. கெட்ட வார்த்தை, தனிப்பட்ட பர்சனல் லைஃப் பத்தி அசிங்கமா பேசுறது ஹராஸ்மென்ட். அதில் உண்மைத்தன்மையும் நியாயமும் இருக்கணும். ஆனா, இருப்பதில்லை. நான் அமெரிக்காவில் இருக்கேன். ஆனா, என்னைக் கைது பண்ணிட்டதா வதந்தி பரப்புறாங்க. இதனால என் குடும்பத்தார், நண்பர்கள் பெரிசா கவலைப்படுறாங்க. தவறான சில நபர்களால சோஷியல் மீடியாவை பயன்படுத்துற சராசரி பெண்களுக்கு எத்தனை பிரச்னைகள் இருக்கும்? நினைக்கவே பயமா இருக்கு. உண்மையிலயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லைங்கிறதுதான் என் கருத்து."

``கட்சியினர், திரைத்துறையினரிடம் இப்பிரச்னைகள் குறித்துச் சொன்னீங்களா?" 

``நானாக யார்கிட்டயும் போய் என் பிரச்னையை சொல்லலை. கடந்த பல மாதங்களாவே சோஷியல் மீடியாவால் எனக்கு நிறைய பிரச்னை வருதுனு கட்சியினர், சினிமா துறையினருக்குத் தெரியும். ஆனா, இதுவரை யாரும் என் பிரச்னையை கேட்கலை. உதவி செய்யவும் முன்வரலை. நடிகர் சங்கமும் உதவலை. அதுதான் எனக்குப் பெரிய வருத்தம். குறிப்பா, 'பிக் பாஸ்'ல இருந்து நான் வெளிய போறப்போ, 'உங்களுக்கு என் சப்போர்ட் எப்போதும் உண்டு'னு கமல்ஹாசன் சார் சொன்னார். அவர் எங்க குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. ஆனால், இதுவரை அவர்கூட என் பிரச்னை குறித்து கேட்கலை. எல்லோருக்கும் அவங்கவங்க தனிப்பட்ட நலன்தான் பெரிசா இருக்கு. மத்தவங்க பிரச்னைக்கு குரல் கொடுக்க முன்வருவதில்லை."

``தற்போதைய பிரச்னையால அரசியலுக்கு வந்ததை நினைச்சு வருத்தப்படுறீங்களா?"

``இல்லவேயில்லை. இது ஒரு பாடம். பெண்கள் அரசியலுக்கு வரணும்னு பொதுவா சொன்னாலும், உண்மையில நிலை என்னன்னு எங்களுக்குத்தான் தெரியும். அரசியல்ல இருக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் வளர விடமாட்டாங்க. ஜெயலலிதா மேடம் எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருப்பாங்கனு இப்போ உணர்றேன். அவங்க போல்டுனெஸூக்கான காரணம் இப்போ புரியுது. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். என்ன பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்."

``தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள் பத்தி தெரியுமா?"

``இல்லைங்க. அமெரிக்கா வந்து ஒரு மாதம் ஆகப்போகுது. இங்க ஃபேமிலி நபர்கள் இருக்காங்க. ரெண்டு வருஷம் கழிச்சு அவங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தவிர, இங்க சினிமா ஷூட்டிங் வொர்க்கும் இருக்கு. காவிரி விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்னைகள் பத்தி தெரியும். ஆனா, கடந்த ஒருசில நாள் நிகழ்வுகள் பத்தித் தெரியாது."