அரசியல்
சமூகம்
Published:Updated:

போர்... போர்... அக்கப்போர்!

போர்... போர்... அக்கப்போர்!
பிரீமியம் ஸ்டோரி
News
போர்... போர்... அக்கப்போர்!

தேர்தல் 2019

‘போர்... போர்...’ என்று சமீபத்தில் சத்தம் கேட்டது அல்லவா!

போர்... போர்... அக்கப்போர்!நல்லவேளை வரவில்லை. சரி... தேர்தல் மூடில் இருக்கும் நம் அரசியல் தலைவர்கள், போர் வந்தால் என்ன செய்வார்கள்? அவர்களிடமே கேட்டுவிடுவோம்.

போர்... போர்... அக்கப்போர்!

ரத்தத்தின் ரத்தங்கள்

“தர்மத்தின் வாழ்வு தன்னை சூதுகவ்வியதால் ஆட்சிக்கு வந்த தர்மயுத்த வீரர்கள் நாங்கள். மெரீனாவில் அம்மாவை அப்படிக்கா வணங்கிட்டு, சென்ட்ரல்ல அக்காவுக்கு போனை போட்டு, தனி விமானத்துல போருக்குப் புறப்படுவோம். போற வழியில நேவி காமாண்டர் மைக் டைசன் மெயின் ரோட்டுல வந்து நிப்பாரு. அவரையும் ஏத்திக்கிட்டு விமானம் டேக் ஆஃப் ஆகும். எதிரியோட எல்லைக்குள்ள நுழைஞ்சதும், அவங்க பீரங்கியின் சக்கரத்துக்குக் கீழே சாஷ்டாங்கமா விழுந்து உருளுவோம். அப்பவும் அவங்க இரக்கப்படலைன்னா... அந்தக் கல் நெஞ்சக்காரங்க முன்னாடி எங்க நேவி கமாண்டர் பாட்டுப் பாடி ஆட்டத்தை சாரி... கூட்டத்தை கலைப்பாரு. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை. நாங்களே கிளை கிளையா முந்திரிக்காவாதான் பிரிஞ்சு நிக்கோம். அய்யய்யோ பயத்துல என்னன்னமோ உளறுறோமே..!”

போர்... போர்... அக்கப்போர்!

உடன்பிறப்புகள்

“இந்தி எதிர்ப்பு, இலங்கைப் படுகொலை என்று பல போர்களை ‘லெப்ட் ஹேண்டில்’ டீல் பண்ணியிருக்கோம். படைத்தளபதியே எங்கக்கிட்ட இருக்காரு. அசால்ட்டா அடிப்போம். பட், எங்க தளபதியைத் தலைமையேற்க விடணும். இல்லாட்டி, போரை நிறுத்தச்சொல்லி, தலைவர் சமாதியில போய், ‘கட்டில், ஏர்கூலர்’ சகிதமா ஒருக்களிச்சுப் படுத்து, தளபதி உண்ணாவிரதம் ஆரம்பிப்பார். போராட்டத்தை ஒடுக்க, அங்கிருந்து தளபதியை கடலில் தூக்கியெறிந்தாலும் அவர், மினி கட்டுமரமாக மிதந்து கொண்டே போராடுவார்!”

போர்... போர்... அக்கப்போர்!

சிப்பாய்கள்

“பாகிஸ்தான் தீவிரவாதிங்ககூட பல படங்கள்ல சண்டைபோட்ட அனுபவம் கேப்டனுக்கு இருக்கு. கேப்டன் டி.வி-யில தினமும் கேப்டன் படங்களையே பார்த்துப் பார்த்து முறுக்கேறியிருக்கிற மச்சானை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம். அவரு எதிரிநாட்டுக்குப்போய், ‘உங்க தளபதி பத்தியும், தலைமை பத்தியும் உங்காளு என்னென்ன சொன்னாருன்னு தெரியுமா?’ன்னு வத்தி வைப்பாரு. அப்பவும் அவங்க நம்பாம மரண கலாய் கலாய்ச்சாலும், வலிக்காத மாதிரியே போர்களத்தின் நடுவுல நிப்போம். டீல் ஓகேன்னா அங்கிட்டு, இல்லைன்னா ரிப்பீட்டு... நாங்க நாட்டு எல்லையைச் சொன்னோம்!”

போர்... போர்... அக்கப்போர்!

கருப்புத் துண்டு வேங்கைகள்

“கலிங்கத்துத் தலைவனுக்கு யுத்தக் களறி எல்லாம் ரத்தப் பொரியல் மாதிரி. பத்து காசு செலவு இல்லாமல் பிரசாரத்துக்கும் போகாமல் தளபதிகிட்டயே ராஜ்ய பதவியை வாங்குன எங்க தலைவனின் ராஜதந்திரத்தைப் பார்த்து பாரே வியக்கிறது. போர்க்களத்துக்குச் சென்று எங்கள் தலைவன், ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்...’ என்று ஹை-பிட்ச்சில் கண்ணீரும் கம்பலையுமாகப் பாடினாலே போதும்... எதிரிகள் பரிதாபப்பட்டு ஓடிவிடுவார்கள்!”

போர்... போர்... அக்கப்போர்!

கதராடை வேந்தர்கள்

“பவனுக்கு வந்துபாருங்க... தினம் தினம் போர்ப் பயிற்சிதான். சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு... எங்களுக்கு வேட்டியே கிழிஞ்சாலும் அசரமாட்டோம். ஆமா சொல்லிட்டோம்... நாங்க போருக்கு போறோம்... போருக்கு போறோம்... போருக்கு போறோம். ஹல்லோ... பிம்ராஜ் கடை ஓனருங்களா... கடையை எப்ப சார்  தொறப்பீங்க? பத்து டஜன் வெள்ளை கதர்ச்சட்டை, வேட்டி ஆர்டர்...”

போர்... போர்... அக்கப்போர்!

பாட்டாளிகள்

“சமாளிப்பு... சாரி சமாதானம் ஒன்றே எங்களின் ஆயுதம். இயற்கை விவசாயத்தில் விளைந்த மல்கோவா மாம்பழத்தை எதிரி நாட்டு தலைவனிடம் அன்பாக கொடுப்போம். அவனும் நாங்களும் மாறி மாறி காறி துப்புனதை எல்லாம் மன்னிச்சிக்கோங்கன்னு கூட்டணி பேசி ராசியாகிடுவோம். அப்புறம் போராவது... புடலைங்காயாவது!

போர்... போர்... அக்கப்போர்!

தம்பிகள்

“ஆமை ஓட்டை அலேக்கா கவுத்து, மூவாயிரம் வீரர்களுடன் கடல்ல கிளம்புனோம்னு வையுங்க. நேரா இலங்கைக்கு போயி லேண்டாவோம். அங்க அப்படியே அறுபதாயிரம் யானைகளை ஏத்திக்கிட்டு யூ டேர்ன் அடிச்சு பாகிஸ்தான் கிளம்பினோம்னு வையுங்க... டயர்டாகி பாதி வழியில ராமேஸ்வரத்துல இறங்கி அப்படியே வீட்டுக்கு கிளம்பிடுவோம். என்னது போரா? அதெல்லாம் அண்ணன் ஒத்தை ஆளா பார்த்துப்பாரு!”

போர்... போர்... அக்கப்போர்!

ஜீ-க்கள்:

‘‘டசால்டை வெச்சி போரை அசால்டா சமாளிப்போம். போதாக்குறைக்கு தேச பக்தியை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கோம். பட், அதுக்கான ஆவணங்கள்தான் தொலைஞ்சுப் போச்சு... போருக்கு கிளம்பறப்பயே எதிரிநாட்டு ஆயுதங்களை மதிப்பிழப்பு செஞ்சிடுவோம். அப்புறம் என்ன... போரில் தாமரை மலர்ந்தே தீரும்... தாமரை மலர்ந்தே தீரும்!”

- முத்துக்குமரன்

ஓவியங்கள்: அரஸ்