சினிமா
Published:Updated:

வாக்காளராகிய நான்

வாக்காளராகிய நான்
பிரீமியம் ஸ்டோரி
News
வாக்காளராகிய நான்

லிட்டில் ஜான் - ஓவியங்கள்: அரஸ்

தேர்தல் வந்துட்டா நம்ம வாக்களர்களைக் கையில புடிக்க முடியாது. ஓட்டும் கையுமாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசாக எட்டு திசைலயும் கெளம்பிடுவாங்க... 

வாக்காளராகிய நான்

``சொக்கா எனக்கில்லை...’’ 

`என் வாக்கு விற்பனைக்கல்ல’ என்கிற வாசகத்தைப் படித்தாலே உடலெல்லாம் நாக்குப்பூச்சி ஊர்கிற அளவுக்கு உணர்ச்சி கொந்தளிப்பார் இந்த வாக்காளர். ஆனால், ஏரியாவில் எந்தக் கட்சியாவது பணப் பட்டுவாடா பண்ணுகிறது எனத் தெரிந்துவிட்டால் போச்சு... `எங்கே குடுக்கறானுக?’ என்பதைக் கேட்கவும் முடியாமல், யார்கிட்ட விசாரிக்கணும் என்பதும் தெரியாமல், `எனக்கு எப்படா குடுப்பீங்க?’ என்று வோட்டர் ஐடியும் கையுமாக சோகஸ்மைலி இதயம் முரளியாக அலைய ஆரம்பித்துவிடுவார்.  பக்கத்து வீட்டுக்காரர் ``நேத்துதான் டூதவ்ஸண்ட் ருப்பீஸ் குடுத்துட்டு போனாங்க. உங்களுக்கு குடுக்கலயா...’’ என்று பல் குத்திக்கொண்டே இளிப்பார். `அதை ஏங்க கேக்குறீங்க...’ என்று மனசாட்சி மல்லாந்து வயலின் வாசிக்கும். மறைத்துக்கொண்டு, ``வாக்கு என்பது அதிகாரம்... பாக்கு என்பது பலகாரம்... அதிகாரம் விற்பனைக்கு அல்ல... பலகாரம் பார்சலில் அல்ல’’ என்று கமல் ட்வீட்போலப் புரிந்தும் புரியாமலும் பேசி, கலக்கத்தை கன்ட்ரோல் பண்ணிக்கொள்வார்!

வாக்காளராகிய நான்

``முதல்ல உனக்கு ஓட்டு இருக்கா?’’

ஞ்சு வருஷமாக வாக்காளர் பட்டியல் பற்றிக் கவலையேபட்டிருக்க மாட்டார்கள். திடீரென, தேர்தலுக்கு இரண்டு நாள்கள் முன்னர்தான் `வோட்டர் ஐடி இருக்கா இல்லையா’, `இருந்தா, எந்தத் தொகுதியில நமக்கு ஓட்டு’, `வீடு மாத்தினோம்; அட்ரஸ் மாத்தினோம்; ஆனா, ரேஷன்கார்டுல அட்ரஸ் மாத்தலை...’ என எல்லாக் கேள்விகளும் அடுக்கடுக்காக வரும்.  `நாம ஓட்டுப் போடாட்டி, ஜனநாயகக் கடமையைச் செய்யலைனு நாலு பேர் கேவலமா பேசுவானே...’ என்று மனசு வேறு துடிக்கும். `ஆபிஸ் போனா விரலை நோட் பண்ணுவானுகளே...’ என்று வேறு எரிச்சல் வரும். `ஜனாதிபதிக்கு போன் போடலாம்; அவர் நம்பரும் தெரியாது...’ என எண்ணங்கள் அலை அலையாக எழும். கடைசியில், `வாக்களிப்பதால் எந்த மாற்றமும் வந்து விடாது, புரட்சி ஒன்றே தீர்வு’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸைப் போட்டுவிட்டு, `ஃபீலிங் ஜனநாயக புறக்கணிப்பு’ என்று ஓவர்நைட்டில் தீவிரவாதியாக புரொமோட் ஆகிவிடவேண்டியதுதான்!

வாக்காளராகிய நான்

ஜென்டில் வாக்காளர்.

வரை நாம் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பார்க்க முடியும். எலெக்‌ஷன் ஆபிஸர் வருவதற்கு முன்னரே முதல் ஆளாக வாக்களிக்க வந்து நிற்பார். தன் வாக்குகளைப் பதிவுசெய்துவிட்டு, முதலிரவு முடிந்த புதுமாப்பிள்ளைபோல அப்படியே வெட்கமும் கெத்துமாக க்யூவில் லேட்டாக வந்து நிற்பவர்களைப் பார்த்தபடி வெளியே நடந்து வருவார். வழியெல்லாம் ஏரியாக்காரர்கள் யாரைப் பார்த்தாலும் ``நான் ஓட்டு போட்டுட்டேன்... நீங்க போடலியா... சீக்கிரம் போய்ப் போடுங்க’’ என்று மைவைத்த விரலைத் தூக்கி, ஆதாரமாகக் காட்டிக் காட்டி போட்டுத்தள்ளுவார்.

வாக்காளராகிய நான்

வொய்பிளட்டு சேம்பிளட்டு!

தே
ர்தல் காலங்களில் சில `Walk’காளர்கள் ரொம்பவே பரபரப்பாகிவிடுவார்கள். காலையில் எழுந்ததுமே பேப்பரை ஒரு புரட்டு புரட்டிவிட்டு, சூறாவளிபோல ஷூவை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். வழியில் டீக்கடை, பார்க், நடுரோடு, முட்டுச்சந்து என யாரை எங்கு பார்த்தாலும் தூண்டில்தான்... ``இந்த முறை யார் வருவானு நினைக்கிறீங்க?’’. உஷாரானவர்கள் இந்த கிட்னி திருடர்களிடமிருந்து தப்பிக்க, ``சார் ஆபிஸுக்கு லேட்டாயிடுச்சு...’’ என வாட்ச்சே இல்லாத கைகளைக் காட்டிவிட்டு தப்பியோடுவார்கள். அவர்களுக்குத் தெரியும்... எந்த பதில் சொன்னாலும் இந்தக் கொக்கி புயலின் காதுகளிலிருந்து தப்ப முடியாது என்பது. ``ஐடியா இல்லைங்க’’ என்று சொல்லி, தப்பிக்கலாம் என நினைக்கலாம். ``சார், நாம அரசியல் செய்யணும், இல்லாட்டி அரசியல் நம்மளை செஞ்சுடும்’’ என வீராவேசமாக ஆரம்பிப்பார். அடுத்த அரை மணி நேரமும் `ஆதாமும் ஏவாளும் யாருக்கு ஓட்டுப் போட்டாங்க... குடைவோலை முறையில நடந்த ஊழல்...’ என கொக்கிபீடியாவாக மாறி, கழுத்தை நெறிப்பார். ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது!

வாக்காளராகிய நான்

கேப்டனிஸம்!

கு
டும்பத் தலைவர்களின் அக்கிரமங்கள் உச்சத்தை எட்டுவது தேர்தல் காலத்தில்தான். அவர் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாரோ அதே கட்சிக்குத்தான் குடும்பமே ஓட்டுப் போடணும் என்பதை நாட்டாமை கணக்காக கண்டிஷனாகச் சொல்லிப்போடுவார். குடும்பத்தார் அப்போதைக்குத் தலையாட்டினாலும், வாக்குச்சாவடியில் போய் வேறு யாருக்காவது குத்திவிடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் புலன் விசாரணை தொடங்கும். தப்பித் தவறி தவறான பதில் வந்துவிட்டால் அவ்வளவுதான். புலன் விசாரணை விஜயகாந்த் சட்டென, `வானத்தைப் போல’ விஜயகாந்தாக மாறிவிடுவார். ``ஆத்தா... நாட்டோட வளர்ச்சிக்கு உன்னோட ஓட்டு எவ்ளோ முக்கியம் தெரியுமா... அதைப் போய் மாத்தி போட்டுட்டியே...’’ என்று ஆரம்பித்து சென்டிமென்ட்டாகப் பேசி... கடைசியில் `ரமணா’ விஜயகாந்த்போல ``நீ பண்ணின காரியத்தால இந்த தேசமே இன்னைக்கு தலை குனிஞ்சு நிக்கப்போகுது’’ என ஆவேசமாக முடிப்பார்!

வாக்காளராகிய நான்

`என்னத்த...’ குமார்கள்!

`எ
துக்கு சார் வேஸ்ட்டா ஓட்டு போட்டுகிட்டு...’ கோஷ்டிகள் தனி ரகம். `திஸ் என்டயர் சிஸ்டம் நீட் டு பி எராடிக்கேடட்... ஆர்மி ரூல் ஈஸ் தி ஒன்லி சொல்யூஷன்...’ என மேஜர் சுந்தர்ராஜனின் நாத்தனார் பையன்போல இங்கிலீஷாகப் பேசுவார். `ஓஹோ...’ என நாம் மதிப்புக் கொடுத்துத் தலையை ஆட்டினால்... `நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருக்காது... நம்ம நாட்ல சிஸ்டம் சரியில்லை, ராணுவ ஆட்சிதான் ஒரே வழி... உங்க ஓட்டால ஒரு மண்ணும் ஆகப் போறதில்லை... நீங்க ஓட்டுப் போட்டுட்டா எல்லாமே மாறிடுமா... சொல்லுங்க’ என்று நம்மிடம் கேள்விபோலக் கேட்பார். அதற்கு நாம் பதில் சொல்லக் கூடாது. சொன்னாலும், நம்ம ராணுவ ஜெனரலுக்கு அதையெல்லாம் கேட்க நேரமிருக்காது. நம்மை எப்படியாவது ஜனநாயக விரோதியாக மாற்றுவதுதான் அவருடைய ஒரே லட்சியமாக இருக்கும்.