Published:Updated:

விஜய்: ஆந்திராவில் எதிர்ப்பு; தமிழகத்தில் திரையரங்கு சிக்கல்கள்... `வாரிசு’ பட அரசியல்

`வாரிசு’ விஜய்
News
`வாரிசு’ விஜய்

பல நேரங்களில் நடிகர் விஜய்யின் படம் வெளியாகும்போது பிரச்னையோடுதான் வெளியாகியிருக்கிறது. தற்போது உருவாகிவரும் `வாரிசு’ படத்துக்கு வெளியாவதற்கு முன்பே பிரச்னை உருவாகியிருக்கிறது. இது குறித்த விசாரணையில் இறங்கினோம்.

Published:Updated:

விஜய்: ஆந்திராவில் எதிர்ப்பு; தமிழகத்தில் திரையரங்கு சிக்கல்கள்... `வாரிசு’ பட அரசியல்

பல நேரங்களில் நடிகர் விஜய்யின் படம் வெளியாகும்போது பிரச்னையோடுதான் வெளியாகியிருக்கிறது. தற்போது உருவாகிவரும் `வாரிசு’ படத்துக்கு வெளியாவதற்கு முன்பே பிரச்னை உருவாகியிருக்கிறது. இது குறித்த விசாரணையில் இறங்கினோம்.

`வாரிசு’ விஜய்
News
`வாரிசு’ விஜய்

நடிகர் விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிவரும் `வாரிசு’ திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வரும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் `துணிவு’ படமும் பொங்கல் ரிலீஸாக வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. `வாரிசு’ படத்தை விஜய்க்கு நெருக்கமான லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும், `துணிவு’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் வெளியிடப்போகின்றன. தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களான அஜித் - விஜய் படங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் போட்டியும் உருவாகியுள்ளன. ஆனால், தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடும் படம் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களும் `துணிவு’ படத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், நடிகர் விஜய்யின் `வாரிசு’ படத்துக்கு தமிழகத்தில் போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது எனவும் சொல்கிறார்கள்.

வாரிசு Vs துணிவு
வாரிசு Vs துணிவு

மேலும், தெலுங்கு தயாரிப்பாளர்களும் `வாரிசு’ படத்தை பொங்கலுக்கு ஆந்திராவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது, தமிழ் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இயக்குநர் பேரரசு, லிங்குசாமி உள்ளிட்டோர் தெலுங்கு தயாரிப்பாளர்கள் முடிவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெறாவிட்டால் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். அரசியல் தளத்திலும் இது பேசுபொருளாகியிருக்கிறது. இந்தப் பிரச்னையின் பின்னணி குறித்து விசாரணையில் இறங்கினோம்...

`வாரிசு’ படத்துக்கான சர்ச்சை குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, `` `வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு உதயநிதி ஸ்டாலினே காரணம். ரெட் ஜெயன்ட் சார்பில் வெளியாகும் `துணிவு’ படத்துக்கு அதிக தியேட்டர்கள் மற்றும் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தெலுங்கு தயாரிப்பாளர்களை அவர் மறைமுகமாகத் தூண்டிவிட்டு ரிலீஸுக்குச் சிக்கலை உருவாக்கியிருக்கிறார். தெலுங்கில் `வாரிசு’ ரிலீஸ் ஆகவில்லை என்றால் தமிழிலும் ரிலீஸ் ஆகாது என்பதற்காக இந்தப் பிரச்னையை உதயநிதி ஸ்டாலின் ஏற்படுத்தியிருக்கிறார்” என உதயநிதிமீது நேரடியாகப் புகார் வாசித்தார்.

``ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கும் புகலிடமாக விளங்கும் தமிழ்த்திரையுலகை வஞ்சிக்கும் போக்கு கண்டனத்துக்குரியது. இது விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கல் அல்ல. தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராக ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடி. இதை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது” என விஜய்க்கு ஆதரவாக வெகுண்டெழுந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குப் படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என எச்சரிக்கவும் செய்தார்.

சீமான் - கடம்பூர் ராஜூ
சீமான் - கடம்பூர் ராஜூ

“எந்த மாநிலமாக இருந்தாலும் முதலில் அந்த மாநில மொழித் திரைப்படங்களுக்குத்தான் தியேட்டர் ஒதுக்குவார்கள். பிறகுதான் மற்ற மொழிப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். தமிழ்நாட்டிலும் அதுதான் நடைமுறை. எனவே, இதைப் பெரிதாக்க வேண்டாம். ஆந்திராவில் தமிழ்ப் படங்கள் வெளியாவதிலும், அதிக தியேட்டர்கள் ஒதுக்குவதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது எனச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி நேர்ந்தால் நாமும் அதுபோல தீர்மானம் நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்று முடிவெடுத்திருக்கிறோம்” எனத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

`வாரிசு’க்கு எழுந்த பிரச்னை குறித்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். `` `துணிவு’ படத்தை நான்கு மாதங்களுக்கு முன்பே உதயநிதி சார்பில் பேசி ஓ.கே செய்துவிட்டார்கள். ஆனால், ‘அதை வெளியில் சொல்ல வேண்டாம். தீபாவளிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளலாம்’ என உதயநிதி தரப்பிலிருந்து சொன்னதாலேயே இத்தனை நாள் அது வெளியில் வராமல் இருந்தது. சமீபத்தில்தான் `வாரிசு’ படத்தின் விநியோக உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை விஜய் தரப்பிலிருந்து லலித் குமாருக்குத்தான் கொடுக்க வேண்டும் எனச் சொன்னதாலேயே அங்கே கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் உதயநிதி தரப்பில் `வாரிசு’ படத்தை வாங்குவதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. எனவே, விநியோக உரிமை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய் வீடு
நடிகர் விஜய் வீடு

தியேட்டர் ஒதுக்குவது தொடர்பாக உதயநிதி தரப்பை லலித் குமார் தரப்பு சந்தித்துப் பேசிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே, தியேட்டர் ஒதுக்கீட்டில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்பது இப்போதைய தகவல்” என்கிறார்கள்.