Published:Updated:

"Varisu நல்லெண்ணத்தை வழங்கும் படமாக இருந்தால் நன்றாகயிருக்கும்”- போஸ்டர் சர்ச்சை குறித்து ஜெயவர்தன்

விஜய்

விஜய்யின் முந்தையப் படங்கள்போல் இல்லாமல் ’வாரிசு’ திரைப்படம் தயாரிப்பாளருக்கு செல்வங்களை வாரி வாரி கொடுக்கின்ற வகையில் அமையவேண்டும். அதேநேரம், வாரிசுகளின் பட்டியலில் என்னை சேர்க்காதீர்கள். நான் அரசியல் வாரிசே கிடையாது. - ஜெயவர்தன்

"Varisu நல்லெண்ணத்தை வழங்கும் படமாக இருந்தால் நன்றாகயிருக்கும்”- போஸ்டர் சர்ச்சை குறித்து ஜெயவர்தன்

விஜய்யின் முந்தையப் படங்கள்போல் இல்லாமல் ’வாரிசு’ திரைப்படம் தயாரிப்பாளருக்கு செல்வங்களை வாரி வாரி கொடுக்கின்ற வகையில் அமையவேண்டும். அதேநேரம், வாரிசுகளின் பட்டியலில் என்னை சேர்க்காதீர்கள். நான் அரசியல் வாரிசே கிடையாது. - ஜெயவர்தன்

Published:Updated:
விஜய்
விஜய்யின் ‘வாரிசு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் மனதை மகிழ்ச்சியாக்கியிருக்கிறது. அதேநேரத்தில், வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றன. இதனால் இந்தத் தலைப்பு சல சலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ‘கலகமில்லா ஒற்றைத் தலைமையே’ என்று விஜய் பிறந்தநாளுக்கு மதுரையில் போஸ்டர் ஒட்டி அதிமுகவை சீண்டியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள். அரசியலில் நிஜ வாரிசான ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனிடம், "வாரிசு தலைப்பை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று கேட்டோம். கலகலவென பேச தொடங்கினார்.
விஜய்
விஜய்

”வாரிசுகளின் பட்டியலில் என்னைச் சேர்க்காதீர்கள். நான் அரசியல் வாரிசே கிடையாது. என்னை அம்மாதான் வேட்பாளராகத் தேர்வு செய்தார். பாராளுமன்றத் தேர்தலின்போது இபிஎஸ், ஓபிஎஸ், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அண்ணன்கள்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்து லிஸ்ட்டை அம்மாவிடம் ஒப்படைத்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அம்மா டிக் செய்து வரும்போது, தென் சென்னை தொகுதிக்கு மட்டும் “நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் அப்ஜக்‌ஷன் இல்லாம ஏத்துக்கறேன். ஆனால், என் சார்பா நான் ஒரேயொரு வேட்பாளரை மட்டும் நிறுத்திக்கறேன். அது ஜெயவர்தன்” என்று சொல்லி எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அம்மா வாரிசு எல்லாம் பார்க்கமாட்டார். நானும் வாரிசாக நினைக்கவில்லை. மருத்துவம் படிக்கும்போதே மருத்துவ அணியில் இருந்துள்ளேன். வருடந்தோறும் ரத்த தான முகாம்களில் ரத்த தானம் செய்திருக்கிறேன். நான், கட்சியின் அடிமட்டத் தொண்டன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தந்தை ஜெயக்குமாருடன் ஜெயவர்தன்
தந்தை ஜெயக்குமாருடன் ஜெயவர்தன்

தனது பிறந்தநாளுக்கு ஆண்டுதோறும் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதை அப்பா வழக்கமாகக் கொண்டிருந்தார். நானும் அப்பாவுடன் செல்வேன். 12 வது படிக்கும்போது ”உன்னோட ஆம்பிஷன் என்ன?” என்று கேட்டார் அம்மா. “டாக்டர் ஆகவேண்டும்” என்றேன். வாழ்த்தி அனுப்பினார். அடுத்த வருடமே எம்பிபிஎஸ் -ல் சேர்ந்து அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். ஃபைனல் இயர் படிக்கும்போது அவரைப் பார்க்கச் சென்றிருந்தோம் ”என்ன ஸ்பெஷாலிட்டி பண்ணப்போற” என்று அக்கறையுடன் விசாரித்தார். எனக்கு பெயர் வைத்ததிலிருந்து வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் அம்மா இருந்துள்ளார். தந்தை அரசியலில் இருந்தால் அவரது மகனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பது என் விஷயத்தில் பொருந்தாது. ஏனென்றால், அம்மாவின் கருணையால் அடிமட்டத் தொண்டன் என்பதால் எனக்கு பதவி கிடைத்தது” என்றவரிடம் “வாரிசு ஃபர்ஸ்ட் லுக் பார்த்தீங்களா?" என்றோம்,

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

”நான் படம்லாம் ரொம்ப பார்க்கமாட்டேன். குழந்தையாக இருக்கும்போது வீட்டில் புரட்சித் தலைவரின் பாடல்கள்தான் ஓடின. இப்போதும் அப்படித்தான். நான் இளம் வயது என்றாலும் தியேட்டர் பக்கமே சென்றது இல்லை. ஆனால், உபயோகமாக இருக்கவேண்டும் என்று புத்தகங்கள்தான் படிப்பேன். விஜய், அஜித், ரஜினி என யாருடைய ரசிகராகவும் நான் இல்லை.

ஆனால், விஜய்யோட ’வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்திருப்பதாக கட்சிக்காரங்கச் சொன்னாங்க. விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். புரட்சித் தலைவர் மக்களிடையே தனது படங்கள் மூலம் நல்லெண்ணம் விதைக்கும் கதைகளை வாரி வாரி வழங்கினார். அவரைப்போலவே, நல்லெண்ணங்களை மக்களுக்கு வாரி வாரி வழங்கும் கதைகளில் விஜய் நடிக்க வேண்டும். ’வாரிசு’ படம் நல்லெண்ணத்தை வாரி வழங்கும் படமாக இருந்தால் நன்றாக இருக்கும். அதேபோல, முந்தையப் படங்கள் போல் இல்லாமல் ’வாரிசு’ தயாரிப்பாளருக்கு செல்வங்களை வாரி வாரி கொடுக்கின்ற படமாக அமையவேண்டும்” என்பவர், மதுரையில் ஒட்டப்பட்ட ”கலகமில்லா ஒற்றைத் தலைமையே” போஸ்டர் குறித்து பேசினார்.

ஜெயவர்தன்
ஜெயவர்தன்

“தற்போது, ஒற்றத்தலைமை மிகப்பெரிய விவாதம் ஆகியுள்ளது. ஒற்றைத் தலைமை இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையானது. கலைத்துறையில் விஜய் பங்களிப்பு முக்கியமானது. இன்றியமையாதது. மேம்படக்கூடியதாக இருக்கிறது. அதனால், அவரை சினிமாவில் ஒற்றைத் தலைமையாக அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால் இப்படியொரு தலைப்பை போட்டிருக்கிறார்கள். மற்றபடி இதனை நான் அதிமுகவை சீண்டுவதாகப் பார்க்கவில்லை. விஜய் என் தொகுதியில்தான் தங்கியுள்ளார். இதுவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவரது அம்மா என் அம்மாவுக்கும் சகோதரிக்கும் நல்ல நெருக்கம்" என்றவரிடம் “ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?” என்று கேட்டோம்,

”கழகத்தொண்டர்கள்தான். இந்தக் குடும்பம் ஒரு தனிப்பட்ட குடும்பத்துக்காக எழுதிவைக்கப்பட்ட இயக்கம் அல்ல. தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்குத்தான் இருக்கிறது. அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொண்டனாகிய என் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்குதான்” என்கிறார் இந்த வாரிசு.