Published:Updated:

“விஜய், சிம்புலாம் இல்ல... சிவகார்த்திகேயன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!"- சசிகலா புஷ்பா

யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற விவாதம் விஸ்வரூபமாகி கொண்டிருக்கிறது. இதில் புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார், அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

சமீபத்தில் நடிகர் விஜய்யின் அம்மா, விஜய்க்கு எழுதியிருந்த கடிதத்தில், “எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது” என வாழ்த்தியிருந்தார். இணையத்தில் வெளியாகியிருந்த இந்தக் கடிதம், ஆதரவு, எதிர்ப்பு என இரு எதிர்வினைகளையும் எதிர்கொண்டது. விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘பிகில்’ படத்துக்கு, விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகரை வைத்து கடிதம் மூலமாக விளம்பரம் தேடுவதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

 சீமான்
சீமான்

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக, ஆகஸ்ட் 30-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய சூழலில் நடிகர் ரஜினிகாந்த்துக்கும், விஜய்க்கும்தான் திரையுலகில் போட்டி நிலவுகிறது. ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் விஜய்தான்” என்று கொழுத்திப் போட்டார். இவ்வருட தொடக்கத்தில் நடிகர் சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் கூறியிருந்தார். இப்போது, சிம்புவிடம் நேரம் தவறும் குறை இருக்கிறது. இதை அவர் திருத்திக்கொள்ளவேண்டும், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. - சசிகலா புஷ்பா, “சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் கடந்த நாற்பதாண்டுகளாக ஒளிர்ந்துகொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவர் கைவசம் நான்கு படங்கள்தான் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார், சீமான். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, அசோக் நகர் இடம் பறிபோனதும் கருணாநிதியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார் விஜய். 'தலைவா' படத்திற்கு ஜெயலலிதாவிடமும், 'மெர்சல்' படத்திற்கு எடப்பாடியிடமும் கோரிக்கை வைத்து, பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் சரணாகதி அடைந்தவர் விஜய்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

'பாபா' படப் பிரச்னை உச்சமடைந்த நிலையிலும் எவருடைய நிழலைக்கூட அண்டாதவர் ரஜினி. தன்னால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்குப் பணத்தைத் திரும்பிக்கொடுத்த பண்பாளர். எத்தனை பேருக்கு அப்படிச் செய்துள்ளார் விஜய்?

சினிமா பின்புலம் துளியுமில்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து, சின்னத்திரை, வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டு சூப்பர் ஸ்டார் ரேஸில் சப்தமின்றி ஓடிக் கொண்டிருப்பவர், சிவகார்த்திகேயன். விஜய்க்கு தில் இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு ரிலீஸ் செய்து போட்டியிடச் சொல்லுங்கள் பார்ப்போம். வசூலில் யார் கில்லி என ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் கூறிவிடுவார்கள். ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் யாரென கேள்வி வந்தால், காலம் சிவகார்த்திகேயன் என அடையாளம் காட்டும்” என்று கூறியுள்ளார்.

சிவ கார்த்திகேயன்
சிவ கார்த்திகேயன்

இதனிடையே, ரஜினிக்கும், விஜய்க்குமான உறவைக் கொண்டாடும் விதமாக, அன்புள்ள_ரஜினிவிஜய் என்கிற ‘ஹேஷ்டேக்’கை உலகளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.