பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“விஜய்க்கு அக்கறை, ரஜினிக்கு விளம்பர நோக்கம்!”

அமீர்
பிரீமியம் ஸ்டோரி
News
அமீர்

கோட்டைக் கனவோடு பயணிக்கும் கோலிவுட்காரர்களுக்கு அரசியல் என்பது ஆடியோ ரிலீஸுக்கும் பட வெளியீட்டுக்கும் மட்டுமே தொட்டுப் பேசும் ஊறுகாய்! ஆனால், எப்போதும் அரசியல் பேசுபவர்களில் ஒருவர் அமீர்.

‘` ‘அசுரன்’ திரைப்படத்துக்கு எதிராக, ‘ஆண்ட பரம்பரை’ சர்ச்சை எழுந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`நாங்கள்தான் ஆண்ட பரம்பரை என்று எல்லா சாதியினருமே உரிமை கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அது உண்மையாகவும்கூட இருந்திருக்கலாம். ஆனால், அதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? வெள்ளைக்காரர்களும் முகலாயர்களும்கூடத்தான் நம்மை ஆண்டிருக்கிறார்கள். ‘நாங்கள்தான் ஆண்ட பரம்பரை’ என்று அவர்கள் சொன்னால், அது நமக்கு எவ்வளவு கௌரவக் குறைச்சலாக இருக்குமோ அதே போலத்தான், ஒரு குறிப்பிட்ட சமூகம் ‘நான் ஆண்ட பரம்பரை’ என்று சொல்லும்போது, மற்ற சமூகங்களுக்கு அது கௌரவக் குறைச்சலாக இருக்கிறது. ‘அசுரன்’ படத்தின் வசனத்தை இந்த அளவு எதிர்த்திருக்கிறார்கள் என்றால், இங்கே இன்னமும் சாதிய ஆதிக்க மனநிலை வேரூன்றி நிற்பதைத்தான் காட்டுகிறது.’’

“விஜய்க்கு அக்கறை, ரஜினிக்கு விளம்பர நோக்கம்!”

‘`ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்ற உங்கள் நண்பர் சீமானின் சமீபத்திய பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`சீமானின் அந்தப் பேச்சு, கோபத்தின் வெளிப்பாடு. ‘ராஜீவ்காந்தியை நீதான் கொன்றாய், நீதான் கொன்றாய்’ என்று தொடர்ந்து என்னை ஒரு குற்றச் சமூகமாகவே சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராக, கோபத்தின் உச்சத்தில் அவர் பேசிய வார்த்தைகளாகத்தான் நான் பார்க்கிறேன். ‘நாங்கள்தான் திட்டமிட்டுக் கொலை செய்தோம்’, ‘நாங்கள்தான் கருவறுத்தோம்’ என்றெல்லாம் அவர் சொல்லவில்லையே.’’

ராஜீவ் கொலையைப் பற்றி சீமான் அதிகமாகப் பேசப்பேச, அதை முழுக்க முழுக்க அரசியலாக்கி ஆதாயம் பார்க்கத் துடிப்பது பா.ஜ.க-தான்.

‘`பொறுப்பான ஓர் அரசியல் கட்சித் தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை மேடையில் பேசுவது சரிதானா?’’

‘`நிச்சயமாக இதுபோன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் என் கருத்தும்கூட. அதேசமயம், ஒரு மேடைப் பேச்சில், ஓர் அரசியல் தலைவர் இதுபோன்று பேசுவது என்பதெல்லாம் ஒன்றுமே கிடையாது. ஏனெனில், இதுபோன்று உணர்ச்சிவசப்பட்டுப் பல தலைவர்கள் பேசிய வரலாறெல்லாம் இங்கே உண்டு. ஆனால், எனக்கு இதில் ஒரேயொரு சந்தேகம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மொழி, இனம், மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் என சீமான் பேசியவற்றைப் பற்றி விவாதிக்கவோ முன்னிலைப்படுத்தவோ முன்வராத ஊடகம், இப்போது சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையைப் பேசிவிட்டார் என்பதை மட்டும் விடாப்பிடியாக எடுத்துக்கொண்டு விவாதிப்பதுதான், ‘இது என்னவிதமான அரசியல்...’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.’’

‘`ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள் செய்யவில்லை என்று விடுதலைப்புலிகளே மறுத்துவிட்ட பிறகு, ‘நாங்கள்தான் செய்தோம்’ என்று சீமான் பேசுவது, ‘யாருடைய தூண்டுதலின்பேரில் சீமான் பேசுகிறார்’ என்ற கேள்வியை எழுப்புகிறதே?’’

‘`ராஜீவ்காந்தி கொலையை விடுதலைப் புலிகள் எந்த இடத்திலுமே ஏற்கவில்லைதான். என்னைப் பொறுத்தவரையில், சீமானின் பேச்சு என்பது அது ஒரு கோபத்தின் வெளிப்பாடு. ஆனால், ‘இல்லை, நான் நிதானத்தோடுதான் பேசுகிறேன்’ என்று சீமான் சொல்வாரேயானால், யாருடைய தூண்டுதலினால் அப்படிப் பேசுகிறார் என்று பார்ப்பதைவிட, அவரது பேச்சு யாருக்கு சாதகமாகப் போய்விடும் என்ற அச்சம் எனக்கும் இருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், ராஜீவ் கொலையைப் பற்றி சீமான் அதிகமாகப் பேசப்பேச, அதை முழுக்க முழுக்க அரசியலாக்கி ஆதாயம் பார்க்கத் துடிப்பது பா.ஜ.க-தான். நாம் தமிழர் கட்சிக்கு இதுபோன்ற பேச்சுகள் பின்னடைவை ஏற்படுத்தலாம். எனவே, நாளடைவில் சீமான் தன் பேச்சை மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!’’

‘`சமீபகாலமாக, திரைத்துறையினர் அரசியல் பேசுவது அதிகரித்துள்ளதே. இது மக்கள்மீதான உண்மையான அக்கறையா, அல்லது, படத்துக்கான விளம்பர உத்தியா?’’

‘`என்னைப் பொறுத்தவரையில், நல்ல படைப்பாளி சமூகப் பொறுப்போடு இருக்கவேண்டும். சமூகப் பிரச்னைகளைத் தீர்க்கக் குரல் கொடுக்க வேண்டும். பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசிய பேச்சை நானும் வரவேற்றிருந்தேன். சமகாலத்தில் நிகழக்கூடிய ஒரு விஷயம் குறித்து ஒரு நடிகர் அக்கறையுடன் பேசுகிறார் என்றால், அதை நான் வரவேற்றுதான் ஆகவேண்டும். அவர் விளம்பரத்துக்காகப் பேசினாரா அல்லது உண்மையான அக்கறையோடுதான் விமர்சித்தாரா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம்.

Ameer
Ameer

ஆனால், ஒரு நடிகர் விளம்பரத்துக்காகத்தான் பேசுகிறாரா, இந்தப் பரபரப்புகளிலேயே தன் படத்தை ஓடவைத்து, சம்பளத்தையெல்லாம் உயர்த்திக்கொள்கிறாரா என்பதையெல்லாம் அவரவர் ரசிகர்கள்தான் சிந்தித்து உணர்ந்துகொள்ள வேண்டும். நீண்ட நெடுங்காலமாக, ரஜினிகாந்த் தன் ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் இப்படி அரசியல் பேசிவந்ததை, அவரின் ரசிகர்களே ஒருகட்டத்தில் புரிந்துகொண்டனர்.

தமிழ்நாட்டுக்கு வந்து குப்பையை அள்ளுகிற பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசி, குப்பைகளின் கூடாரமாக இருக்கிறதே!

”ஐ.நா சபை வரையிலும் தமிழை உயர்த்திப் பிடிக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், உங்களைப்போன்றோர் தொடர்ந்து பா.ஜ.க-வை விமர்சித்துவருகிறீர்களே?’’

‘`ஆளுகின்ற அரசு, மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்போது அது எந்த அரசாக இருந்தாலும் நாங்கள் விமர்சிப்போம். கடந்த காலங்களில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும்தான் விமர்சித்தோம். ஆனால், அப்போதெல்லாம் வராத ஒரு விமர்சனம், இப்போது பா.ஜ.க-வை விமர்சிக்கும்போது மட்டும் ‘அமீர் ஓர் இஸ்லாமியன்’ அல்லது ‘ஜோசப் விஜய்’, ‘ஆன்ட்டி இந்தியன்’ என்றெல்லாம் குறிப்பிட்டு வருகிறது. எனவே, பிரச்னை எங்களிடம் இல்லை.

உலகத்தின் பார்வையில் இந்தியாவின் அடையாளம் இந்தி எனச் சொல்கிற நீங்கள், அங்கேயல்லவா தமிழைத் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும்! தமிழ்நாட்டுக்கு வந்து குப்பையை அள்ளுகிற பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசி, குப்பைகளின் கூடாரமாக இருக்கிறதே! ஐ.நா சபையில், ‘யாரும் ஊரே யாவரும் கேளிர்’னு பேசுகிற பா.ஜ.க., டெல்லிக்கு வந்து ‘2020-க்குள் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை எல்லாம் வெளியில் அனுப்பிவிடுவோம்’ என்று சொன்னால், அந்தக் கட்சியை எப்படி நாங்கள் பாராட்ட முடியும்?’’