Published:Updated:

சிறையில் அண்ணா கே.பி.சுந்தரம் (ஆசிரியர், ‘தையற் கலை’)

Annadurai
பிரீமியம் ஸ்டோரி
Annadurai

“அன்னையின் கருச்சிறையைவிட அண்ணாவுடன் சிறையிலிருந்ததே பாக்கியம்”- கே.பி.சுந்தரம்!

சிறையில் அண்ணா கே.பி.சுந்தரம் (ஆசிரியர், ‘தையற் கலை’)

“அன்னையின் கருச்சிறையைவிட அண்ணாவுடன் சிறையிலிருந்ததே பாக்கியம்”- கே.பி.சுந்தரம்!

Published:Updated:
Annadurai
பிரீமியம் ஸ்டோரி
Annadurai

‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்று ஒருவன் அகமும் முகமும் மலர, நெஞ்சம் நிமிர்ந்து கேட்க வேண்டுமானால், அவன் ஒரே ஒரு பாக்கியத்தைப் பெற்றவனாக இருந்தால் போதும்; அதுதான் அறிஞர் அண்ணாவுடன் சிறையிலிருக்கும் பாக்கியம். அப்பாக்கியசாலிக்குக் கொடுஞ்சிறையும் இனிய மலர்ச் சோலையாகிவிடும். நான் அப்படியொரு பாக்கியசாலி! 

நான் என் வாழ்க்கையில் அறிஞர் அண்ணாவின் நிழலிலும், அரவணைப்பிலும் எத்தனையோ அரிய பேறுகளைப் பெற்றிருக்கிறேன். 1949-ல் அண்ணாவின் ‘வழக்கு வாபஸ்’ என்ற நாடகத்தில் அன்பழகன், காஞ்சி மணிமொழியார், என்.வி.நடராஜன் ஆகியோருடன் நடித்த ஒரு நடிகனாக அண்ணாவுடன் தொடர்பு கொண்டவன் நான். சுமார் 20 ஆண்டு காலம் அண்ணாவின் கருத்துக்கிசைய அயராது கட்சிப் பணி செய்து இன்று ‘அண்ணாவின் குடும்ப நண்பர்கள்’ என்று கழகத் தொண்டர்களாலும், தோழர்களாலும் அழைக்கப்படும் சிறிய வட்டத்துக்குள் ஒருவனாகத் திகழும் பேறு பெற்றிருக்கிறேன். அப்படி என்னைப்போல் அண்ணாவின் நண்பர்கள் வாணன், செழியன், சி.வி.ராஜகோபால், மதியழகன், அன்பழகன், காலம் சென்ற டபிள்யூ. கே. தேவராஜன் ஆகியவர் போன்று வெகு சிலரே!

சிறையில் அண்ணா கே.பி.சுந்தரம் (ஆசிரியர், ‘தையற் கலை’)

அன்றும் இன்றும் என்றும் அண்ணாவுக்குத் தேவையான ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும் தொழிற்பெருமை எனக்கு உண்டு. எனது, `அழகுபடுத்தும் திறனும்,’ ‘தொழிலில் புதுமை காணும் ஆர்வமும்' அண்ணா அவர்களாலேயே போற்றப்பட்டவை.ஆனால், நான் பெற்ற ஒரே ஒரு பேற்றிற்காக மட்டும் நெஞ்சம் நிறையப் பெருமைப்படுகிறேன்.  அந்தப் பேறுதான் நூற்று எழுபது நாட்கள் அண்ணாவுடன் மத்தியச் சிறையில் நான் கழித்துக் களித்த வாய்ப்பு!  1963-ல் அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவைக் கொளுத்தும் ‘சட்ட எரிப்பு’ப் போராட்டத்தில் முதன்முதலாக அண்ணா தலைமையில் ஈடுபட்டுச் சிறை புகுந்த ஐவர் அணியில் நானும் ஒருவன்.

மற்றவர்கள் பொன்னுவேல், வெங்கா, பார்த்தசாரதி ஆகியோர். அண்ணா கைதி எண் 6342; நான் 6343. அவர் உள்ளத்திலும் அடுத்தவன் எனப் புரிந்துதான் சிறையதிகாரிகள் எனக்கு அந்த அடுத்த எண்ணைக்  கொடுத்தார்களோ என்னவோ! எங்களோடு பின்னர் வந்து சேர்ந்துகொண்டவர்கள் அன்பழகன், மதியழகன் ஆகியோர்.

அண்ணாவுடன் 16-11-1963-ல் கைதான நான் ரிமாண்டு வாசம், வழக்கு, தண்டனை எல்லாவற்றையும் சந்தித்து முடித்துவிட்டு, 23-5-1964-ல் விடுதலையானேன். அந்தக் காலத்தில் நான் சிரமப்பட்டு நொந்து போனது சுமார் முப்பது நாட்கள்தான் இருக்கும். அந்த நாட்கள் பொன்னேரியில் தனிமையில் ரிமாண்டிலிருந்த காலமும், அண்ணா மருத்துவ மனையிலிருக்கும்போது நாங்கள் தனியாக மத்தியச் சிறையிலிருந்த காலமும் ஆகும். மற்ற நாட்களெல்லாம் மத்தியச் சிறையில் எனக்கு அடுத்த அறையிலிருந்து அண்ணாவின், “சுந்தரம்!”, “சுந்தரமூர்த்தி நாயனார்!” என்ற அழைப்பொலிகள் சதா என்னை வளைத்து அணைத்துக் கொண்டிருந்த அற்புத நாட்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இராமன் இருக்கும் இடம்தான் அயோத்தி! எங்களுக்கு அண்ணா இருக்கும் இடம்தான் வீடு! அண்ணா எங்களுடன் சிறைக்குள் வந்ததும் எங்களுக்குச் சிறை சிறையாக இல்லை. எங்கள் வேதனைகளுக்கு அவர்தான் மருத்துவர். யாராவது சோர்ந்திருந்தால் போதும்; அவரை வம்புக்கிழுத்து, கிண்டல் பேசிக் கலகலப்பாக்கிவிடுவார். “பாவம், சுந்தரத்துக்கு வீட்டு நினைவு!” என்று கிண்டல் பேசி எத்தனையோ முறை என் மானத்தை வாங்கியிருக்கிறார் அவர்.

சிறையில் நாங்களே சமைத்துக் கொள்வோம். சமையற்கலை டியூஷன் அண்ணாதான். நூல் நூற்றுக்கொண்டே ‘வெங்காய ஸ்பெஷல்’ தயாரிக்கப் பக்குவம் சொல்ல உட்கார்ந்துவிடுவார். அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சிறையிலிருக்கும்போது நான் கண்வலியால் சிரமப்பட்டேன். சிகிச்சைக்காக சிறையை விட்டு பொதுமருத்துவமனைக்கு வரவேண்டி இருக்கும்; காவலர் பாதுகாப்புடன்தான். ஒருநாள் அண்ணா என்னிடம், “வெளியே போகிறாயே, எனக்குக் காராப்பூந்தி வாங்கி வா!” என்றார். `ஓ' என்று தலையை ஆட்டிவிட்டுப் போனேன். எனக்குக் கண்வலி மறந்து போய்விட்டது; காராப்பூந்தி நினைவுதான். ஆனால், காவலரின் காவலோடு போகும் கைதிக்குக் காராப்பூந்தி யார் கொடுப்பார்கள்? வெறுங்கையோடு திரும்பி வந்தேன்.

அண்ணா என்னுடைய தோல்வியைக் கண்டு, ‘சிரி சிரி’யென்று சிரித்துவிட்டு, “எனக்குத் தெரியாதா, உனக்குக் காராப் பூந்தி கிடைக்காது என்று? நீ கண் வலியை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டு போகக்கூடாது என்பதற்காகத்தான் உன் சிந்தனையைக் காராப்பூந்தி பக்கம் திருப்பிவிட்டேன்’’ என்றாரே பார்க்கலாம்!

ஒருநாள், எனக்கு மாபெரும் நடிக மன்னனாக மாறும் வாய்ப்பு பறி போய்விட்டது. பழைய கால நாடக நிகழ்ச்சிகளை நினைவூட்டிக் கொண்டிருந்தார் அண்ணா. மதியழகன், அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தில் மடாதிபதியாக வேஷம் போட்டவர். அவரை எங்கள் சபையில் பாடச் சொன்னார் அண்ணா. கம்பீரமாகப் பாடினார் மதி. இனிமையாகப் பாடினாரா என்று கேட்காதீர்கள்! என் முறை வந்தது. “சுந்தரம், நீ இந்த வசனத்தைச் சரியாக வாசித்துவிட்டால், நாம் விடுதலையானதும் ஒரு நாடகக் குழு அமைத்து, உன்னை நடிக்க வைக்கிறேன்” என்றார். ஒரு பத்திரிகையில் வந்த பகுதியை என்னிடம் நீட்டினார். அந்தப் பத்திரிகைத் தமிழ் என் வாயில் நுழையவில்லை. அவ்வளவு தான். “போ, உனக்கு நடிக்கச் சான்ஸ் கிடையாது. வெறும் நாடக மானேஜர் தான்” என்று என் ஆசையைத் தீர்த்துக் கட்டிவிட்டார் அண்ணா.

இப்படிப் பிறர் துன்பத்தைப் போக்க வேடிக்கை பேசிக்கொண்டிருப்பவருக்குத் துன்பமே இல்லையா..? ஏராளம், ஏராளம்!

சிறையில் அண்ணா கே.பி.சுந்தரம் (ஆசிரியர், ‘தையற் கலை’)

அவர் சிறையிலிருந்தபோது, சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும் எத்தனையோ வேதனைகள். தொத்தாவின் மறைவு, தீராத தோள் வலி, சி.வி. ராஜ கோபாலின் உண்ணாவிரதம், புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தது... இப்படி எவ்வளவோ! ஆனால், எந்தத்துயரத்தையும் தன்னுள் அடக்கிப் பரிகாரம் தேடுவாரே தவிர, பிறருக்குப் பரவவிட மாட்டார். பிறர் எப்போதும் காண்பது அவருடைய புன்னகை தவழும் மலர்ந்த முகத்தைத்தான். தோள் வலியால் அவர் வேதனைப்படுவார். நான் தைலம் தேய்த்துவிட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய முதுகில் தைலத்தோடு என் கண்ணீரும் கலக்கும். ஆனால், அண்ணாவின் முகத்தில் துயரச் சாயையைக் காணவே முடியாது. ஓவியம் என்றால் எனக்குப் பெரும் பற்று. (இந்தப் பற்று ஓவிய ஆசிரியையான என் மனைவியின் தூண்டுகோலால் எனக்கு ஏற்பட்டது என்பது ரகசியம். வெளியே சொல்லாதீர்கள்!) சிறையில் ஓவியம் வரைந்துகொண்டிருப்பேன். அதைக் கண்டதும் அண்ணாவின் கலை ஆர்வம் கிளர்ந்தெழுந்துவிட்டது. உடனே, அண்ணாவும் ஓவியம் வரையத் தொடங்கி விட்டார். அவருக்குத் தெரியாத கலையா? தன் ஓவிய ஈடுபாட்டின் காரணமாக ஒவ்வொரு மாநாட்டிலும் ஓவியக் கண்காட்சி அமைக்கச் சொல்வார். அவர் முதன் முதலாக ஓவியம் வரைந்தது சிறையில்தான்.

அழகாக வரைவார் அண்ணா. இருந்தாலும் நாங்கள் வேண்டுமென்றே அவரின் படைப்புக்களைக் கேலி செய்வோம். அவர் வரைந்த ராணுவ வீரரின் ஓவியத்தில் ‘தொப்பி சரியாக இல்லை’என்றார் ஒரு நண்பர். “அதெப்படிச் சரியாக இருக்க முடியும்? இவன் தோற்றுப் போன ராணுவத் தலைவன் ஆயிற்றே!” என்று ஒரு போடு போட்டுச் சமாளித்தார் அண்ணா.

ஒரு மலைக் காட்சியைத் தீட்டினார் அண்ணா. அதில் யானையைவிடப் புலி பெரிதாக இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி நான் கேலி செய்தேன். அண்ணாவா விடுபவர்? “உனக்குப் பதினாறு அடி வேங்கையைப் பற்றித் தெரியாது. அது தான் இது!” என்று அடித்துக் கூறிவிட்டார். என்னிடம் இருக்கும் அரிய செல்வங்கள், நான் சேகரித்து வைத்திருக்கும் அண்ணாவின் ஓவியங்களும், நானே எடுத்த அண்ணாவின் அழகான புகைப்படம் ஒன்றும்தான். நான் எடுத்த அந்தப் புகைப்படத்தை மாதிரியாகக் கொண்டுதான் திருச்சி, தஞ்சை ஆகிய ஊர்களில் இருக்கும் அண்ணாவின் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். குடும்பத்தைப் பிரிந்து சிறைக்குப் போகும்போது கண் கலங்குபவர் உண்டு. ஆனால், 23-5-64 அன்று சிறையிலிருந்து விடுதலையாகி வீட்டுக்குத் திரும்பியபோது ரத்தக் கண்ணீர் வடித்தேன். ஏனென்றால், அன்று அண்ணாவைச் சிறையில் விட்டு விட்டு நானும் நண்பர்களும் வெளியேற வேண்டியிருந்தது. அன்னையின் கருச்சிறையில் முந்நூறு நாட்கள் இருந்து பிறவியெடுத்த பயனை, அண்ணாவுடன் நூற்று எழுபது நாட்கள் சிறை இருந்ததில்தான் அனுபவித்தேன் நான். அந்த ஒரு பெருமையே போதும் எனக்கு!

(12.01.1969தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)