Published:Updated:

அரசியல் அஸ்திவாரமா... `No' அவசரமா! - 'பிகில்' விழாவுக்கு விஜய் மூட் என்ன?! #BigilAudioLaunch

"நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப்பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.''

Vijay in Sarkar audio Launch
Vijay in Sarkar audio Launch
"தர்மம் ஜெயிக்கும், நியாயம் ஜெயிக்கும். ஆனா, லேட்டா ஜெயிக்கும். புழுக்கம் வந்தா மழை வரும். அந்தமாதிரி ரொம்ப நெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வெளிய வருவான். அவன் லீடரா மாறுவான். அவன் தலைவன் ஆவான். அதான் இயற்கை. அந்த இயற்கையை ஒண்ணும் பண்ணமுடியாது. அவனுக்குக் கீழே நடக்கிற சர்கார் வேறமாதிரி இருக்கும்!"
விஜய்
‘மெர்சல்’ ரிலீஸுக்கும் நாங்கதான் காரணம்... - ‘சர்கார்’ பிரச்னைக்கும் நாங்கதான் காரணம்!

கடந்த வருடம் `சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வார்த்தைகள் இவை. இன்று இரவு 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதுதான், கோலிவுட் டு தமிழக அரசியல் வரை ஹாட் டாபிக்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை விட்டு... விட்டு, மெல்ல... மெல்ல வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் அரசியல் ஆசை கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்கிற இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு நேரடியாக வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

முதலமைச்சர் ஆனால்?!

அரசியல் பேசத் தேவையில்லாத இடத்திலும்கூட நிகழ்கால அரசியல் நிகழ்வுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார் விஜய். அரசியல்வாதிக்கு முதல் தகுதியே மேடைப் பேச்சுதான் என்ற கருத்தை விளைவித்த கழகங்களின் பாணியைக் கையில் எடுத்து மிக அமைதியாக மேடைப் பேச்சை வளர்த்துக்கொண்டு வருகிறார் விஜய்.

Mersal
Mersal

உதாரணமாக, `சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, "இது ஆடியோ வெளியீட்டு விழாபோல இல்லை... சின்ன மாநாடு மாதிரி இருக்கு. இந்தச் சமுதாயத்துக்கு விஜய் போன்றவர்கள் தேவை!" என்று கொளுத்திப்போட, பின்னர் பேசிய விஜய் "நிஜத்துல முதலமைச்சரானால், முதலமைச்சரா நடிக்கமாட்டேன்; உண்மையா இருப்பேன்" என்று பன்ச் பேச, 'ஆளும் கட்சித் தலைவர்களை நக்கல் அடிக்கிறார்’ என்று பேச்சு செம வைரல் ஆனது.

ரசிகர் மன்றம் டு மக்கள் இயக்கம்!

2009-ம் ஆண்டு ஜூலை 26-ல் விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை `மக்கள் இயக்கம்' என்ற பெயரில் ஓர் அரசியல் அமைப்பாக மாற்றினார். இந்த மக்கள் இயக்கம் தொடங்குவதற்கு முன்பே தனது இயக்கக் கொடியை அறிமுகப்படுத்தினார். மக்கள் இயக்கம் மூலமாக, மீனவர் பிரச்னைக்கு நாகையில் உண்ணாவிரதம் இருந்தார்; அப்போது பேசிய விஜய், ``தமிழன் மேல ஒவ்வொரு அடி விழும்போதும், அது என் மேல விழுற அடி'’ என்று அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

Vijay
Vijay

அதே ஆண்டு ஆகஸ்ட்டில் புதுவையின் அன்றைய முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில், தனது மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தைக் கூட்டி நலத்திட்ட உதவிகளைச் செய்தார் விஜய்.

அப்போது பேசிய விஜய், ``அரசியலுக்கு கட்டாயம் வருவேன். ஆனால், நிதானமாக வருவேன்'’ என்றார். அடுத்து டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார். விஜய் தரப்பில் அப்போது ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கேட்கப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டன. அன்றைய காலகட்டத்தில் ஆளும் தி.மு.க அரசை எதிர்த்து சில போராட்டத்திலும் ஈடுபட்டது விஜயின் மக்கள் இயக்கம்.

`தலைமை ஏற்க வா!'

அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கும் ஆதரவுகொடுத்தார். `காவலன்' பட பிரச்னைக்கு தி.மு.கதான் காரணம் என்று, 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர் விஜய் ரசிகர்கள்.

`தளபதியே வா! தலைமை ஏற்க வா!' என்று 'காவலன்', 'வேலாயுதம்' படங்களுக்கு போஸ்டரை அடித்து ஆளுங்கட்சியினரை அதிரவைத்து அமர்க்களப்படுத்தினர் விஜய் ரசிகர்கள். அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.

Thalaivaa
Thalaivaa

"இந்த ஆட்சி அமைய நானும் ஒரு அணில் போல உதவியதில் பெருமைப்படுகிறேன்'' என அறிக்கைவிட்டார் விஜய். கடுப்பானார் ஜெயலலிதா. விஜய்யின் பிறந்தநாளுக்காக சென்னை விமானநிலையம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட, இன்னொருபக்கம் அ.தி.மு.க பொதுக்கூட்டத்துக்காக ஜெயலலிதா போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒருபக்கம் `அம்மா அழைக்கிறார்'' என ஜெயலலிதா பேனர்கள் இருக்க, இன்னொருபக்கம் 'அப்பா அழைக்கிறார்' என எஸ்.ஏ.சந்திரசேகரின் பேனர்கள் புன்னகைத்தன. உஷ்ணமானார் ஜெ.

ஜெயலலிதா vs விஜய்

2013-ம் ஆண்டு ‘தலைவா’ ரிலீஸுக்கு முட்டுக்கட்டை விழுந்தது. 'தலைவா' என்கிற தலைப்போடு 'டைம் டு லீட்’ என்று சிறியதாக வைக்கப்பட்டிருந்த வாசகம்தான் ஆளும்கட்சிக்கு ஆத்திரமூட்டியது. ‘தலைவா’ படத்தை வாங்க எந்த சேனலும் முன்வராத நிலையில் சன் டி.வி. வாங்கியது. இது மேலும் சர்ச்சைக்குள்ளானது. `தலைவா படத்தை திரையிட்டால் தியேட்டர்களை தாக்குவோம்’ என மிரட்டல் வந்ததால் படம் ரிலீஸாக முடியாத சூழல். விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கொடநாடு வரை சென்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாமல் திரும்பிவந்தார்கள். சென்னை திரும்பிய விஜய், ஜெயலலிதாவின் ஆட்சியில் செய்த திட்டங்களைக் கூறி, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள் எனக் கோரிக்கை வைத்தார். அதன்பிறகுதான் ஒரு வழியாக ‘தலைவா’ ரிலீஸானது.

Mersal
Mersal

ஜோசப் விஜய் - மோடி vs மெர்சல்

அடுத்து 'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக விஜய் பேசிய வசனம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் `மெர்சல் vs மோடி' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற வசனம், நடிகர் விஜய்யின் மற்றோர் அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது. ஹெச்.ராஜா விஜய்யை 'ஜோசப் விஜய்' என்று சொல்ல, லெட்டர் பேடிலேயே 'ஜோசப் விஜய்' என அச்சிட்டு பதில் கொடுத்தார் விஜய். அடுத்து 'சர்கார்' இலவச அரசியல் சர்ச்சை. சர்கார் பேனர்களை கிழித்துப்போட்டனர் அ.தி.மு.க-வினர்.

விஜய்யின் மூட் என்ன?

ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ள இந்த சமயத்தில், அவர்களிடமிருந்து பாடம் கற்று வருகிறார் விஜய். மக்களுக்கு ஆதரவாக ரஜினி குரல்கொடுக்கும்போது கிளம்பும் வழக்கமான எதிர்ப்புகள், மக்களுக்காக விஜய் குரல்கொடுக்கும்போது இல்லை என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

With Modi
With Modi

மாறாக, சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சுக்கு ஆதரவு குவிகிறது என்கிறார்கள். ரஜினி மட்டும் அல்ல, தானும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கிங்தான் என்று நிரூபித்துவிட்டார் விஜய். மேலும் ரஜினியின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது ரஜினி தமிழர் இல்லை என்பது. விஜய்க்கு அந்தப் பிரச்னை இல்லை என்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி நீட் தேர்வினால் இறந்த அனிதா வீட்டுக்கும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினார் விஜய். இது அவர்மேல் ஒரு பாசிட்டிவ் இமேஜை ஏற்படுத்தி இருக்கிறது.

"நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை. யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமா போட்டுக்கிட்டே வர்றேன். யாருக்கு எப்போ, எப்படி வெற்றி/தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது'' - 2011-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் விஜய் சொன்ன வார்த்தைகள் இவை.

``ரஜினி யாரோ... ஆனால், விஜய் என் தம்பி!" - சீமான் சிறப்புப் பேட்டி

அஸ்திவாரத்தை இன்னும் பலப்படுத்துகிறாரா அல்லது அமைதிகாக்கிறாரா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்!