Published:Updated:

"பவர்ஸ்டாரின் காமெடி ஸ்கோர்; மன்சூர் அலிகானுக்கு என்ன இடம்?!" - தேர்தல் களத்தில் சினிமா பிரபலங்கள் நிலை

தேர்தல் களத்தில் நடிகர்கள் ஸ்கோர் என்ன?!
News
தேர்தல் களத்தில் நடிகர்கள் ஸ்கோர் என்ன?!

"பவர் ஸ்டாரின் காமெடி ஸ்கோர்; தக்காளி விற்று, புரோட்டா சுட்ட மன்சூர் அலிகானுக்கு என்ன இடம்?!" - தேர்தல் களத்தில் சினிமா பிரபலங்கள் நிலை

இந்தியாவில் அரசியலும் சினிமாவும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி, சுயேச்சை, புதிய கட்சி... இவை அனைத்தும் பல நடிகர், நடிகைகளை வேட்பாளராக நிறுத்தியிருந்தது. சினிமாவில் ஜொலித்தவர்கள், அரசியலில் என்ன செய்தார்கள்?

கமல்
கமல்

தமிழகத்தைப் பொறுத்தவரை கமல் ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அரசியல் என்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது. ரஜினியின் அரசியல் வருகை இன்னும் தெளிவு பெறாத நிலையில், கமல் கட்சி ஆரம்பித்த விஷயம் பாசிட்டிவாகப் பார்க்கப்பட்டது. அவ்வப்போது, சர்ச்சைப் பேச்சுகள், 'பிக் பாஸ்' மூலம் பொதுமக்களைக் கவரும் தொலைக்காட்சி ஊடகத்தைப் பயன்படுத்திக்கொண்டது... எனக் கட்சியை ஆரம்பித்து 13 மாதங்களைக் கடந்த பிறகு, தேர்தலைச் சந்தித்தார் கமல். இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 3.77% வாக்குகளைப் பெற்றிருக்கிறது, மக்கள் நீதி மய்யம் கட்சி. இந்தக் கட்சி சார்பாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிய கவிஞர் சினேகன் 22,931 வாக்குகளையும் சென்னை மத்திய தொகுதியில் களமிறங்கிய தயாரிப்பாளர் கமீலா நாசர் 92,249 வாக்குகளையும் பெற்றனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி 3.78% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தொடர் கூட்டங்கள், வேட்பாளர்களில் மகளிருக்கு 50% வாய்ப்பு என வாக்காளர்களைக் கவர்ந்தார் சீமான்.

சீமான்
சீமான்

இந்தக் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் பரோட்டா சுட்டு, வெங்காயம், தக்காளி விற்று வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான் 54,957 வாக்குகளைப் பெற்றார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட 20 வேட்பாளர்களில், மன்சூர் அலிகானுக்கு நான்காவது இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

மன்சூர் அலி கான்
மன்சூர் அலி கான்

'இந்தியக் குடியரசு கட்சி' சார்பில் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டார், நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் 670 வாக்குகளைப் பெற்று சாதனை (?!) படைத்திருக்கிறார். டி.டி.வி.தினகரனின் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' சார்பாகப் போட்டியிட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் திருநெல்வேலி தொகுதியில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 62,209.

 பவர் ஸ்டார் சீனிவாசன்
பவர் ஸ்டார் சீனிவாசன்

பழுத்த அரசியல்வாதிகளையே ஒரு பொழுதுபோக்காகப் பார்க்கும் மனநிலைக்கு மாறிவிட்ட தமிழக மக்கள், பொழுதுபோக்குத் துறையில் இருக்கும் சினிமா பிரபலங்களை அரசியலுக்கு உகந்தவர்களாகப் பாவிக்கவில்லை என்றே தெரிகிறது. அதேசமயம், தமிழகத்தைப்போல சினிமா பிரபலங்களை முற்றிலும் ஒதுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு வெற்றியையும் வரவேற்பையும் கொடுத்திருக்கிறார்கள் பிறமாநில மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான நட்சத்திரங்கள் அங்கே வெற்றி பெற்றிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் போட்டியிட்ட சன்னி தியோல், உத்தரப் பிரதேசம் மதுரா தொகுதியில் போட்டியிட்ட ஹேம மாலினி , சண்டிகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் அனுபம் கேரின் மனைவிவும் மூத்த நடிகையுமான கிரோன் கேர் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஊர்மிளா
ஊர்மிளா

அண்டை மாநிலமான கேரளாவின் திருச்சூரில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, மூன்று லட்சத்துக்கு நிகரான வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.    

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 'இந்தியன்' ஹீரோயின் ஊர்மிளா மட்டோன்கர் மும்பை வடக்கு தொகுதியில் 2,41,431 வாக்குகள் பெற்று தோற்றார். நீண்ட காலமாக பா.ஜ.க-வில் இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் சார்பாகப் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

சமாஜ்வாதி கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்கு சமீபத்தில் கட்சி மாறியவர், நடிகை ஜெயப்ரதா. உத்தரப் பிரதேசம் ராம்பூர் தொகுதியில் தன்னை வளர்த்தெடுத்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அசாம் கானிடம் தோல்வியைத் தழுவினார். 

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரைவிடக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றுள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 நடிகை ரோஜா
நடிகை ரோஜா

தெலுங்குத் திரைப்பட உலகின் பவர் ஸ்டாரும் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணின் 'ஜன சேனா' கட்சி, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற இரு பெறும் கட்சிகளை எதிர்த்துக் களம் கண்டது.

 பவன் கல்யாண்
பவன் கல்யாண்

ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்திருப்பதால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என இரு தேர்தல்களிலும் தன் பலத்தை நிரூபிக்க முடியாமல் நிற்கிறார், 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண். தவிர, அவர் போட்டிடயிட்ட பீமாவரம் மற்றும் குஜ்ஜிகவா தொகுதிகளில் தோல்விதான் கிடைத்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பே மதவாத சக்திகளுக்கு எதிராகவும், பா.ஜ.க கட்சிக்கு எதிராகவும் பலமாகக் குரல் கொடுத்தவர், நடிகர் பிரகாஷ் ராஜ். பெங்களூரு மத்தியத் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராகக் களமிறங்கினார். சுயேச்சையாகப் போட்டியிட்ட அவர் 28,906 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடமே பிடிக்க முடிந்தது. தேர்தல் முடிவுகள் குறித்து ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ், 'இது பெரிய அடி. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்திருந்தார்.

பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜ்

இவர்களைத் தவிர, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரபோர்த்தி, முன்னணி நடிகர் தேவ், சதாப்தி ராய் ஆகிய திரைப் பிரபலங்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தேர்ந்த அரசியல் கொள்கை, தொலைநோக்குப் பார்வைகொண்ட அரசியல்வாதியாகக் காட்டிக்கொள்வது, பிரபலம் என்ற அடையாளத்தை மட்டுமே நம்பிக் களமிறங்குவது... ஆகியவை மட்டும் போதாது. தேர்தல் களத்தில் வெற்றிபெற ஒரு பெரிய கட்சியின் ஆதரவு அல்லது பின்புலம் வேண்டும் என்ற நிதர்சனம் இந்தத் தேர்தலில் தெரிகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம்; அடுத்த தேர்தல் வரை காத்திருப்போம்!