Published:Updated:

உன்னோடு போனதே அண்ணா!

Annadurai, Karunanidhi
பிரீமியம் ஸ்டோரி
News
Annadurai, Karunanidhi

அண்ணாவை இன்றும் சக மனிதர்கள் கொண்டாடுவதற்கு என்ன காரணம் தெரியுமா...?

'அ'... மொழிக்கு முதல் எழுத்து. அண்ணா... பல கட்சிகளுக்கு முன்னெழுத்து. இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் அவர்தான் தலையெழுத்து!

அசாதாரண மனிதர்களையே ஆச்சர்யப்படவைத்த அண்ணாவுக்கு இது நூற்றாண்டு விழா தொடங்கும் நேரம்!இன்றும் அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு, அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மட்டும்தான் காரணமா? இல்லை, அத்துடன் அவரிடம் இருந்த அரசியல் நாகரிகமும் பண்பாடும்தான் காரணம். தனக்குக் கீழே இருந்த தம்பிகளை மதித்தார். அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அரவணைத்தார். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று நினைத்தார். அவர் வளர்த்த நாகரிகம் இன்றைய அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டால், சமூகமே மேம்படும்!

Annadurai
Annadurai

அண்ணாவின் கதையைத் தேடினால், 'உன்னோடு போனதே அண்ணா!' என்றுதான் சொல்லத் தோன்றும். அந்த ஏக்க காலத்தின் சில சொச்சங்கள் மட்டும் இங்கே...

பழிக்குப் பழி!: தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. வண்டியில் ஏற்றும்போது அண்ணாவின் தோளில் கிடந்த துண்டு கீழே விழுந்தது. அந்த அதிகாரி தனது கையில் வைத்திருந்த தடியால் துண்டைத் தூக்கிஎறிந்தார். குனிந்து எடுத்த அண்ணா, கோபத்தைக் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டார். கமிஷனர் அலுலலகம் அழைத்து வரப்பட்ட அண்ணாவை சேரில் உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடியே விசாரித்தார் அந்த அதிகாரி. அப்போதும் அமைதியாகவே இருந்தார் அண்ணா. 

சில ஆண்டுகளிலேயே தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா, முதலமைச்சர் ஆனார். அந்த அதிகாரிக்கு பயம் வரத்தானே செய்யும். தனது பதவியை ராஜினாமா செய்தார். அண்ணா அதைஏற்கவில்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் போனாலும், அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். விலகத் தேவைஇல்லை'' என்று அந்த அதிகாரியை வரச் சொன்னார். வெட்கப்பட்டபடியே அவரும் வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு... தி.மு.க-வின் முன்னாள் மேயர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், தான் சொல்வதைத்தான் இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்ட தகவல் அந்த உயரதிகாரிக்குத் தெரிய வந்தது. அண்ணாவின் காதுக்குத் தகவலை கொண்டுபோனார். ''இப்படி ஒருவர் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்களோ... அதையே செய்யுங்கள். இனி, என்னைக் கேட்க வேண்டாம்'' என்று உத்தரவு போட்டார் அண்ணா!

அண்ணன் குரல்: அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகப் பார்க்க வேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும்!கட்சி வேறு, ஆட்சி வேறு!: தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அண்ணா வெளியிட்ட ஓர் அறிக்கை, ஆட்சியாளர்களின் சட்டப் புத்தகமாக அமையும் அளவுக்கு முக்கியமானது.

''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும்.

இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.

அண்ணன் குரல்: ஆளுங்கட்சி என்பதால் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிகாரம் செலுத்தக் கூடாது!குடும்பமா... கிட்ட வராதே!: முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்.

மறுநாள் நுங்கம்பாக்கத்தில் அண்ணாவின் வீட்டுக்கு அரசு அலுவலர்கள் புதிய நாற்காலிகள், சோபாக்களை கொண்டுவந்து வைத்தார்கள். அதை எங்கே வைக்க வேண்டும் என்று ராணி சொல்லிக்கொண்டுஇருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த அண்ணா, ''எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க'' என்றார்.

விதிமுறைப்படிதான் செய்கிறோம் என்று அலுவலர்கள் சொன்னபோதும் தேவையில்லை என்று அனுப்பிவைத்த அண்ணா, ''ராணி... எனக்கு இந்தப் பதவி நிரந்தரமல்ல. நாளைக்கே ஆட்சி போய்விடும். அப்போது இவர்களே வந்து சோபாவை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அப்ப உன்னோட மனசுதான் வருத்தப்படும். நமக்கு இந்த நாற்காலியே போதும்'' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

Annadurai
Annadurai

அண்ணன் குரல்: குடும்பம் வேறு, கட்சியும் ஆட்சியும் வேறு!

அரசியல் வேண்டாம்!: தி.மு.க. வேர் பிடிக்க ஆரம்பித்த காலம். செ.அரங்கநாயகம் அப்போது பள்ளிக்கூட ஆசிரியர். ''தி.மு.க. சார்பு ஆசிரியர்களை ஒன்றுசேர்த்து ஒரு சங்கம் ஆரம் பிக்கலாமா?'' என்று கேட்க, அண்ணா மறுத்தார்.

''கல்வி அனைவருக்கும் பொதுவானது. அதில் அரசியலைப் புகுத்தக் கூடாது'' என்ற அண்ணா, மாணவர்கள் அரசியலுக்கு வருவதையும் விரும்பவில்லை. ''அரசியல் ஈடுபாடு இருக்கலாம். ஆனால், படித்து முடித்ததும்தான் பங்கேற்க வேண்டும். அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. திருமணத்துக்கு முன் சுத்திச் சுத்தி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது'' என்றார்.

அண்ணா முதல்வரானதும், ஒரு கோயிலில் அறங்காவலர் விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. ''கட்சிக் காரர்களை கோயில் அறங்காவலர்களாகப் போடக் கூடாது'' என்று உத்தரவிட்ட அண்ணா, அதற்கு இரண்டு காரணங்களும் சொன்னார்.

''கட்சிக்காரங்களுக்கு கோயில் ஐதீகம், விதிமுறைகள் தெரியாது. இது கோயிலுக்கு இழப்பு. கட்சிக்காரர்களை அறங்காவலராப் போட்டா, அவங்க கோயில்ல தர்ற பொங்கலைச் சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடுவாங்க. இது கட்சிக்கு இழப்பு!'' என்றார்.

அண்ணன் குரல்: அரசியல் லாபங்களுக்காக யாரையும் பலியிடக் கூடாது!

பதவி ஆசையில்லை!: தி.மு.க. ஆரம்பித்தபோது தலைமைப் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்திருப்பதாகச் சொல்லி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் அண்ணா.அந்தப் பதவியையும் தானே கடைசி வரை வகிக்கக் கூடாது என்று நினைத்து ''சுற்று முறையில் பதவி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்'' என்றார். இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தவர், நெடுஞ்செழியனைக் கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கினார். ''தம்பி வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்குக் கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன்'' என்று அறிவிக்கும் அளவுக்கு பக்குவப்பட்டு இருந்தார்.

நெடுஞ்செழியனுக்கு அடுத்தது யார்... மதியழகனா, என்.வி.நடராஜனா என்ற சிக்கல் தி.மு.க-வில் பலத்த சலசலப்பை ஏற்படுத்த, வேறு வழியில்லாமல்தான் மீண்டும் பொதுச் செயலாளரானார் அண்ணா.1967... ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் எதிர்ப்பு. தி.மு.க. கூட்டணிதான் ஆட்சியைக் கைப்பற்றும் என்ற நிலை. தான் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானால்தான் முதல்வராக முடியும் என்ற நினைப்புகூட இல்லாமல் தென்சென்னை எம்.பி. பதவிக்குப் போட்டியிட்டார் அண்ணா!

அண்ணன்குரல்: அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பதவியை எதிர்பார்த்தே எப்போ தும் கணக்குப் போடக் கூடாது!தனது குறைபாட்டை தானே சொன்னார்!: 'யாருக்கும் பயப்பட மாட்டேன்... எதிர்ப்பு எனக்கு தூசு!' என்றுதான் தலைவர்கள் பேசுவார்கள். தலைவர்கள் யாரும் தங்களின் குறைபாட்டை மறந்தும் சொல்ல மாட்டார்கள். அண்ணா அதற்கு நேர் எதிர்!''

எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாயசூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என்றார்.

அண்ணன் குரல்: பொது வாழ்க்கையில் இருப்பவர் தனது குறைபாடுகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்!

நோயை ஒப்புக்கொண்டார்!: தலைவர்கள் இப்போதெல்லாம் சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனால்கூட, அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். நடிகர்களைவிட தலைவர்கள்தான் 'இமேஜ்' பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால், அண்ணா தனது உடல்நலம் பற்றி பகிரங்கமாக எழுதினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா மறைந்தது 1969-ல். ஆனால், அதற்கான அறிகுறிகள் பத்தாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இதற்கான அறிகுறி வந்து, டாக்டரைப் போய் பார்த்துவிட்டு வந்ததும் பக்கம்பக்கமாக திராவிட நாடு பத்திரிகையில் எழுதி னார். 'உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அண்ணா, கழுத்தின் பின்புறத்தில் கட்டி இருப்பதைச் சொன்னார்.

''இடது தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப்போய் என்னால் கையைத் தூக்க முடியவில்லை'' என்று சொன்னார். ''என்னுடைய உடலமைப்பே அதிக அளவு அலைந்து கட்சி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது'' என்றார்.

Annadurai, karunanidhi
Annadurai, karunanidhi

அண்ணன் குரல்: தலைவர்களின் வாழ்க்கை பகிரங்கமாகச் சொல்லவேண்டியது. அதை கட்சிக்காரர்களும் பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்!

மாற்றார் மீதும் மதிப்பு!: ''தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத்துக்குள் வர வேண்டும்'' - 1967 தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணா சொன்னது.

தேர்தல் முடிவுகளை டிரான்சிஸ்டர் வைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தார் அண்ணா. முதல் முடிவு, பூங்கா நகர். கூட்டணிக் கட்சியான சுதந்திரா வேட்பாளர் ஹண்டே வெற்றி. மகிழ்ச்சி அடைந்தார். அடுத்ததாக, மாயவரம் தி.மு.க. வேட்பாளர் கிட்டப்பா வெற்றி. துள்ளிக் குதித்தார். அடுத்ததாக விருதுநகர் காமராஜர் தோல்வி. துவண்டுபோனார் அண்ணா.

''காமராஜர் எல்லாம் தோற்கக் கூடாதுய்யா!'' என்று கலங்கினார். ''ஜெயிச்சது நம்ம கட்சிதானே'' என்று பக்கத்தில் இருந்த கவிஞர் கருணானந்தம் கேட்க, ''காமராஜ் தோற்கக் கூடாதுய்யா.

நாட்டுக்காக உழைச்சவரை எப்படித் தோற்கடிக் கலாம்?'' என்றார் அண்ணா. பதவியேற்றதும், ''காமராஜர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண் டும்'' என்று அவரை நேரில் பார்க்கப் போனார். யாரை வீழ்த்தி தி.மு.க. வெற்றிபெற்றதோ, அந்த முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் பார்த்து ஆசி வாங் கினார்.

அரசியல் அதிசயமாக நடந்த சம்பவம், பெரியாரையும் பார்க்கப் போனதுதான். பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா, 18 ஆண்டுகள் அவரை எதிர்த்து கட்சி நடத்தினார். இரண்டு இயக்கங்களும் தகுதி குறைந்த விமர்சனங்களைக்கூட செய்துகொண்டன. தேர்தலில் தி.மு.க-வை எதிர்த்து பெரியாரே பிரசாரம் செய்தார். ஆனால், வெற்றி பெற்ற அண்ணா, ''இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை!'' என்றபோது பெரியாரால் பேச முடியவில்லை. 'அண்ணா வந்து பார்த்தபோது கூச்சத்தால் குறுகிப்போனேன்' என்றுதான் பெரியாரால் சொல்ல முடிந்தது.

அண்ணன் குரல்: அனைவரிடமும் அன்புசெலுத்து. நன்றியை நெஞ்சில் நிறுத்து!

- விகடன் டீம்

(20.12.2010 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து....)