Published:Updated:

அறிஞர் அண்ணா - எத்தனை மனிதர்கள்...!

Annadurai.C.N
பிரீமியம் ஸ்டோரி
News
Annadurai.C.N

புராணங்களை இதனால தான் திராவிடர் கழகத்தினர் கடுமையா விமர்சிச்சாங்களோ!

"ராமாயணம் ஆரியரை உயர்த்தி - திராவிடரைத் தாழ்த்தி எழுதப்பட்டது. அதேபோல் பெரியபுராணம் - சாதிப் பிளவுகளை சமூகத்தில் நிலைநிறுத்தும் தந்திரத்தோடு, சாதிக்கு ஒரு நாயனார் என்ற ரீதியில் எழுதப்பட்டது. ஆகவே, தமிழர்களைத் தாழ்த்தும் இவற்றைக் கொளுத்த வேண்டும்" என்பது 1925-ம் வருட போக்கில் ஒரு தரப்பினர் எடுத்துவைத்த வாதம்! பெரியார் இதுபற்றி நிறைய பேசினார்... எழுதினார்...  அதே சமயம் ஆத்திகப் பெரியோர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சர்ச்சையில் இறங்கி, பெரியாரின் இயக்கத்தைக் கனல் பறக்கக் கண்டித்தார்கள்.  அன்று சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள், "ராவணன் அரக்கனல்ல, திராவிடன், இனிய குணங்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன், நல்லவன், வீரன்..."  என்று புதியதொரு கோணத்தில் விவாதத்தைக் கொண்டு போனார்கள்.

Annadurai.C.N
Annadurai.C.N

எதிர்ப்பவர்களோ, "இல்லை... இல்லை. ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போர் அல்ல. ராவணனும் ஒரு பிராமணன்தான்..." என்று ஓங்கியடித்துப் பேசினார்கள்.

இந்த சர்ச்சை, 'ராமாயணம் நடந்த வரலாறா, கற்பனையா..?' என்ற அடுத்த கட்டத்துக்குப் போனபோது, மூதறிஞர் ராஜாஜியும் இந்த சர்ச்சையில் கலந்துகொண்டார்.  தன் கருத்துக்களை அவர் வெளியிட்ட இடம் சிறைச்சாலை. 1930-ல், சுதந்திரப் போராடத்தில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த ராஜாஜி, ஒரு நாள் - ராமாயணம் பற்றிய சர்ச்சை குறித்துப் பேச்சு வந்தபோது, சிறையில் தம்மோடு இருந்த நண்பர்களிடம் கூறிய கருத்துக்களையே பின்னர் கட்டுரையாகவும் எழுதினார்.

அது, 'ராஜாஜியின் கட்டுரைகள்' என்ற தொகுப்பு நூலிலும் இடம்பெற்றிருக்கிறது. 'பொருளற்ற சண்டைகள்' என்பது ராஜாஜி எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. ராமாயணம் நடந்ததல்ல... நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேற்றுமைகளைக் காட்ட வால்மீகி முனி சிருஷ்டித்த கற்பனைதான் என்று வாதிடுகிறார் அவர். அது வருமாறு: "வடக்கிற்கும் தெற்கிற்கும் நடந்த கோர யுத்தமே ராமாயணம் என்று சிலர் சொல்லும் வேடிக்கையைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. ரைடர் ஹாகார்டு என்னும் ஆங்கில ஆசிரியர், 'ஷி' என்று ஒரு கதை எழுதினார்.

அதையே ஓர் உண்மைச் சரித்திரமாக எண்ணி, அதைக் கொண்டு ஆப்பிரிக்க தேசத்துப் பூர்வீக சரித்திரத்தை யாராவது ஆராய்ச்சி செய்தால் அந்த நாட்டவர் நகைப்பார்கள். இங்கே பண்டித சிகாமணிகளில் சிலர், ராவணனை ஒரு தமிழனாகப் பாவித்து வருகிறார்கள். அதிலும் ராமனைத் தீயவனாகவும் ராவணனை நல்லவனாகவும் பார்க்கிறார்கள். தமிழர் இம்மாதிரி ராவணனைப் பாராட்டிப் பார்ப்பதைக் கண்டு தெலுங்கர்கள் நகைப்பார்கள். நமக்குள் இவ்விஷயத்தில் தீவிர மதவேறுபாடு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெறுப்பதும் பகைப்பதுமாக இருக்கிறோம் என்று அவர்கள் அறியாதபடியால், இது ஒரு வேடிக்கை என்று ஆந்திரர்கள் எண்ணலாம்.

வால்மீகி முனி அல்லது யார் முதலில் பாடினாரோ அந்தக் கவிஞர், ஓர் அரக்கனைக் கற்பித்தார். உள்ளும் புறமும் மகா பயங்கரமாக விரிந்த ஒரு பிரகிருதியை சிருஷ்டித்தார். தமிழர் சிலர், அந்த அரக்கனே நம் குலபுருஷன் என்று வைத்துக்கொள்ள முற்படுகிறார்கள். கதையைச் சரித்திரமாக்கி, அதனின்று பகைமை உண்டாக்கிக்கொண்டு, ஒருவரையொருவர் தாக்கி, இல்லாத துக்கத்தைச் சம்பாதிக்கப் பார்க்கிறோம்" என்கிறார் ராஜாஜி.

ராஜாஜி இதைச் சொல்வதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு 1-7-28-ம் தேதியிட்ட குடியரசு பத்திரிகையின் தலையங்கத்தில் திரு.வி.க-வின் கருத்துக்களுக்குப் பதிலளித்து எழுதியிருக்கிறார் பெரியார். அதிலே - "கம்ப ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கவி அழகையும், வர்ணனையையும் ரசிக்கும் நோக்குடன் படிப்பவர்களிடம் நமக்கு வேலையில்லை. ஆனால், பாமர மக்களைக் கூட்டிவைத்து, அதைப் படிப்பதுதான் பக்தியென்றும், மோட்சத்துக்கு வழியென்றும் அதில் உள்ளவற்றை நம்பாதவன் நாஸ்திகன், முரடன் என்று சொல்கிறார்களே, அம்மாதிரியான மூடர்களின் பிரசாரம் ஒழிய வேண்டும் என்பதுதான் நமது கவலை" என்று திட்டவட்டமாக, தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் பெரியார். இந்த வாதம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. சுயமரியதை இயக்கம் - ராமாயண ஆதரவு இயக்கம் இரண்டிலும் தொடர்பு வைத்திருந்த சிலர், அடுத்த சில வருடங்களில் இந்த சர்ச்சைக்கு இன்னொரு திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தார்கள்.

Annadurai.C.N, Periyar
Annadurai.C.N, Periyar

'சுயமரியாதை இயக்கம் என்ன சொல்கிறது? ராமாயண பக்தர்கள் என்ன சொல்கிறார்கள்?' என்பதை பொதுமேடை அமைத்து, இருதரப்பையும் அழைத்து விவாதம் நடத்த ஏற்பாடு செய்தார்கள் அவர்கள். இந்த முயற்சியின் முதல் நிகழ்ச்சி 9.2.43 செவ்வாயன்று மாலையில் - சென்னை சட்டக்கல்லூரி மண்டபத்தில் நடந்தது. இந்துமத பரிபாலன நிலையத்தலைவர் ராமச்சந்திர செட்டியார் (பி.ஏ.பி.எல்) தலைமையில் அறிஞர் அண்ணா அவர்களும், 'சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களும் பெரியபுராணம், ராமாயணம் ஆகியவற்றை கொளுத்துவது சரியா, தவறா என்பது பற்றி விவாதம் நடத்தினார்கள். முதலில் பேசிய அண்ணா, "கவிநயம் என்ற பேரால், படிக்காத மக்களிடம் ராமர் தெய்வம் என்ற நம்பிக்கையைப் பரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று வாதிட்டார். "கலை என்று பேசும் நண்பர்கள் இந்நாட்டு மக்களின் நிலையுணர்ந்தார்களா என்று கேட்கிறேன். நூற்றுக்குத் தொண்ணுரற்று மூன்று பேர் இங்கு பாமரர்கள்.

ஒய்வின்றிப் பக்குவமின்றி, எழுத்தறிவேயின்றி உள்ள அவர்களிடம் தோழர் சேதுப்பிள்ளை கம்ப ராமாயணத்திலே உள்ள அணிஅழகு, உவமை உயர்வு கூறியா தெளியவைப்பார்? ராமாயணம் என்றதும் பொதுமக்கள் மண்ணுக்கும் விண்ணுக்குமாக ஓங்கி வளர்ந்த அனுமனின் அடிவிழவும், அவரை வணங்கவும் நினைப்பார்களே தவிர, கவித்திறனைக் கண்டு களிப்பதே முறை என்றா நினைப்பார்கள்?' என்று கேட்டார் அண்ணா. பின்னர் பதிலுரைக்க வந்த சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை "ராவணன் திராவிடனல்ல; ஆரியன்தான். அவன் பேசியது ஆரியம்" என்றார். "கம்பனின் காலம், தமிழ்நாடு சீர்குலைந்திருந்த காலம்; எனவே, மக்களுக்குப் பெருமையை உணர்த்த அவர் ஒர் நூல் இயற்றக் கருதினார். எல்லா மக்கட்கும் தெரிந்த கதையை எடுத்து அதிலே தமிழ்நாட்டுக் கலைச் செல்வத்தை அமைத்தார். கம்பரின் கவியால், சீதை நமக்கு ஒரு தமிழ் மங்கையாகவே தென்படுவது காண்போம். ராமன் வில் முறித்துச் சீதையை மணந்தான் என்கிறார் வால்மீகி. கம்பனோ தமிழர்க்குக் காதல் மணத்தைக் கூறுவதே சிறப்புடைத்தது என்று எண்ணினார். 'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்' என்றார். 'கண்ணைக் கண் கவ்விற்று' என்று கூறுகிறார். இங்கு நாம் தமிழ்நாட்டு மாண்பு காண்கிறோம். குற்றங்குறையுடைய ஆரியப் பாத்திரங்களைக் கம்பர் தன் எழுத்தில் தீட்டுகையில் பூசி மெழுகினார் என்று என் நண்பர்(அண்ணா) உரைத்தார். சிறியோர் செய்த சிறுபிழை பொறுத்தல் பெரியோர் கடன், கம்பரின் பெருந்தன்மையைத்தான் அது காட்டுகிறது. ராவணனிடம் வீரமும், மானமும் இருந்தது; இரக்கமில்லை. எனவே ஆணவத்தால் அழிந்தான்; ராவணனை திராவிடன் என்பதை நான் மறுக்கிறேன்" என்று முடித்தார் சேதுப்பிள்ளை.

பத்தே நிமிடங்கள் பேசிய அவர், அண்ணாவின் பதிலுக்காகத் காத்திராமல் உடனடியாகக் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் சில பெரியோர் பேசினர். அண்ணாவும் சேதுப்பிள்ளையின் வாதங்களுக்குப் பதிலளித்து மறுபடி பேசினார். இறுதியில் பேசிய விவாதமன்றத் தலைவர் ராமச்சந்திர செட்டியார், "இரண்டுபேரும் அழகுறப் பேசினர். விவாதம் மிக மேலான முறையில் இருந்தது" என்று பாராட்டினாரே தவிர, தமது கருத்தை அல்லது தீர்ப்பைக்கூற மறுத்து விட்டார். இதுவும் - இதேபோல் ராமாயணம் பற்றி அண்ணாவுக்கும் நாவலர், சோமசுந்தர பாரதியாருக்கும் நடந்த வேறொரு விவாதமும் 'தீ பரவட்டும்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது! இதன் பிறகும், ராமாயணம் பற்றிய சர்ச்சை முடிவடைந்துவிடவில்லை. புலவர் குழந்தை 'ராவண காவியம்' என்ற பெயரிலேயே ராமாயணத்திலுள்ள தகவல்கள் அடிப்படையில் ஒரு நூல் எழுதினார். இதற்கு ஓர் ஆராய்ச்சி முன்னுரையை அண்ணா எழுதியிருக்கிறார்.

ராமாயணத்திலே உள்ள குறைகள் என்று ஒரு பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார், அந்த முன்னுரையில். "ராமன் தெய்வமாக்கப்பட்டான், ராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, ராவணன் அரக்கனாக்கப்பட்டான். கோயிலுக்கு ஓர் உரு தேவை என்பதற்காக, கொற்றவன் மகனாக மட்டுமே குறிக்கப்பட வேண்டிய ராமன் கையில், மகத்துவம் பொருந்திய கோதண்டத்தையும், ராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும் கவி (கம்பர்) கற்பித்துக் கொண்டார். வில்லும் வாலும் வீட்டிலும் வணக்கத்துக்குரிய பொருள்களாக்கப்படவே, தோள்வலியும் மனவலியும் கொண்ட ஒரு மன்னன் மிலேச்சனாக்கப்பட்டான். ராமனுக்குச் செந்தாமரைக்கண் அமைத்தார் கவி. எனவே ராவணன் கண்கள் செந்தழலை உமிழ்ந்தன என்று தீட்டலானார். அவருடைய நோக்கம் ராமனைத் தேவனாக்க வேண்டும் என்பது.

Annadurai.C.N
Annadurai.C.N

அதற்கேற்றபடி கதை புனைந்தார்."- என்று ராமாயணத்தை விமரிசிக்கும் அண்ணா, "அந்த பாணியில் யாரையும் உயர்த்த வேண்டும் அல்லது தாழ்த்த வேண்டும் என்பதற்காக போட்டிக் கதையாக எழுதப்பட்டதல்ல ராவண காவியம். ராமதாசர்களுக்கு ராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல. இந்நூல் ராமதாசர்களுக்குத் தன்மானத் தமிழர் தரும் மயக்கநீக்கு மருந்து..." என்கிறார். "இதுவும் அந்நாள் ராமாயணம் போலக் கலைப்போர் முரசுதான். இரண்டும் கற்பனைகளே முன்னது ராமனை தேவனாக்க! இஃது ராவணனைத் தேவனாக்க அல்ல... தமிழனாக்க! அதாவது வீரனாக்க.

முன்னதற்குக் கவி கம்பர், வானையும் வானில் உறைவோரையும் துணைகொள்ள நேரிட்டது. இந்த ராவணகாவியத்துக்கு அது தேவையில்லை. அந்த நூலில், புதைந்துள்ளவற்றைக் கொண்டே ராவணனின் உருவம் இத்தன்மையது என்று இந்த நூலில் எடுத்துக்காட்டி இருக்கிறார் நூலாசிரியர்."- என்பது அண்ணாவின் முன்னுரை. ராவணகாவியம் வெளிவந்த உடனேயே பெரியதோர் சர்ச்சையை உருவாக்கியது! ராமாயண அன்பர்கள், "ராவண காவியத்தைத் தடை செய்ய வேண்டும்" என்றார்கள். அன்றைய காங்கிரஸ் அரசு 'ராவண காவிய'த்துக்குத் தடைவிதித்துவிட்டது.

அதன்பிறகு 1969-ல் கலைஞர் முதல்வரான பிறகுதான் - அந்தத் தடை நீக்கப்பட்டது. இதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் ஒரு விஷயம் - தமிழகத்தில் ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் சுயமரியாதை இயக்கத்தினருக்கும் ராம பக்தர்களுக்குமிடையே தொடர்ந்து நடந்து வந்த சண்டை, ஒரு போதும் வன்முறை என்று வரம்புகடந்த சண்டையாக மாறியதே இல்லை! ஆனால், இன்று...? ராமன் பிறந்த இடம் இதுதான் என்ற அடிப்படையில் பாபர் மசூதியை இடித்து, பன்னெடுங்காலமாய் தாயாய்ப் பிள்ளையாய் பழகிக் கொண்டிருந்த இரு மதத்தாரிடையே நிலவிய சமூக நல்லிணக்கத்தைத் தொலைக்கும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்த பிறகுதான் நம் வேதனை எல்லை கடக்கிறது.

- சின்னக்குத்தூசி

(11.06.2000 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து...)