Published:Updated:

சினிமாவின் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 சொல்வது என்ன?

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021
News
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021

இதனால் திரைக்கலைஞர்களின் ஜனநாயக உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. படைப்பாளிகள் அதிகாரத்தின் கைப்பாவைகளாகவும், அரசை எதிர்த்துக் கேள்விகேட்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

"ஒரு கலைப்படைப்பை அரசு எடைபோட்டு எது மக்களுக்கு ஏற்றது, ஏற்றதல்ல என்று முடிவு செய்தால் எப்படியிருக்கும்? ஆம், சென்சார் செய்யப்பட்ட படமே ஆயினும் அரசு நினைத்தால் அதில் மாற்றங்களைக் கொண்டு வரமுடியும், திருத்தங்கள் செய்ய முடியும். குறிப்பாக அது வெளியாகாமலே நிரந்தரமாகத் தடை செய்ய முடியும். இப்படி ஒரு வழிமுறை வருமாயின், ஆளும் அரசுக்கு எதிரான குரல்கள், விமர்சனங்கள் இனி திரைப்படங்களில் எப்படி இடம்பெறும், இது ஒரு பாசிச அரசின் போக்கு அல்லவா?"

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-க்கு எதிராக இப்படித்தான் குரல்கள் ஒலிக்கின்றன. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் மக்களின் கருத்துக்கேட்புக்கு இந்த வரைவு வந்துள்ளது. இந்தக் கருத்துக்கேட்புக்கான காலம் இன்றுடன் (ஜூலை 2) முடிகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, புதிய டிஜிட்டல் கொள்கை என வரிசையாக நிகழ்ந்துவரும் சட்டத் திருத்தங்களின் அடுத்த கட்டமாக இந்த ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சினிமா போன்றதொரு வெகுஜன ஊடகத்தை அரசு தன் இரும்புக்கரங்களால் ஒடுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Banned
Banned

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த சில வருடங்களாக சினிமாவில் அரசியல் தலையீடுகளும் அரசின் தலையீடுகளும் அதிகரித்திருக்கின்றன. ஒரு வரலாற்று நிகழ்வு, தனிப்பட்ட ஒருவர் அல்லது ஓர் இயக்கத்தின் வரலாறு, மதம் தொடர்பான நம்பிக்கைகளின் மீதான விமர்சனங்கள் போன்ற உணர்ச்சி மிக்க விஷயங்கள் குறித்துப் படங்கள் எடுக்கப்படும்போது அவை விவாதத்துக்கு உள்ளாகின்றன. படம் வெளிவரும் முன்னரே அது சம்பந்தப்பட்ட குழுக்களுக்கும், இயக்கங்களுக்கும் திரையிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போக்கும், வெறும் டிரெய்லரை மட்டுமே பார்த்துவிட்டுப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோஷமும் தற்போது அதிகரித்திருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள். இந்த சோஷியல் மீடியா யுகத்தில் ஏதேனும் ஒரு சிறிய யூடியூப் வீடியோவில் ஒரு பிழையிருந்தாலும் அதை முடக்க, எதிர்க்க, விமர்சனம் செய்யப் பெரும்படை ஒன்று காத்திருக்கிறது. இந்த விமர்சனப் போக்கு ஒரு வகையில் ஆரோக்கியமானது என்றாலும் ஒரு கட்டத்தில் தனிப்பட்ட சித்தாந்தங்கள் என்ற எல்லைக்குள் அது சுருங்கி, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் ஒன்றாகவும் மருவி நிற்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
அதேபோல் சம காலத்தில் ஆளும் அரசை விமர்சித்து வரும் படங்கள், அந்த மத்திய, மாநில அரசுகளாலேயே தடை செய்யப்படும் எல்லைக்குக்கூடச் சென்றிருக்கின்றன. இப்படிச் சிக்கலில் மாட்டிய படங்கள் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த பின்னரே வெளியாகியிருக்கின்றன. இந்த ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்பது கலையுலகின் மீது விழுந்த இரண்டாம் அடிதான். முதல் அடி, திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (Film Certification Appellate Tribunal) கலைத்தபோதே விழுந்துவிட்டது.

அது என்ன திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்?

இங்கே ஒரு திரைப்படம் பொதுமக்களுக்குத் திரையிடப்படுவதற்கு முன்பு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவிடம் (சென்சார் போர்டு - Central Board of Film Certification - CBFC) சான்றிதழ் பெறவேண்டும் என்பது நாம் அறிந்ததே. படத்தின் தன்மையைப் பொறுத்து அதற்கான சான்றிதழ்களும் (U, U/A, A) இருக்கும். இந்தியா போன்ற ஒரு நாட்டில், காட்சி ஊடகத்தின் தாக்கம் அதிகம் என்பதால் அதற்கான முறைப்படுத்துதல் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அப்படியான சென்சார் போர்டே சில சமயம், தனிநபர் விரோதத்திற்காகவோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவோ ஒரு கலைஞனின் படைப்பை வதைப்பதுண்டு. அப்படியெல்லாம் ஒரு கலைஞன் இன்னல்களைச் சந்திக்கையில் அவனுக்குக் கைகொடுத்தது இந்தத் திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்தான்.

மத்திய அரசு தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் படி, இந்தத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதால், தற்போது திரைப்படத் தணிக்கையில் ஒரு படைப்பாளருக்கு மாற்றுக்கருத்து இருப்பின் அவர் நேரடியாக நீதிமன்றத்தின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும்.

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு | Central Board of Film Certification - CBFC
மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு | Central Board of Film Certification - CBFC

அதில் என்ன சிக்கல்?

இப்படியான பிரச்னைகளை கவனிப்பதற்கென்றே பிரத்யேகமாகச் செயல்பட்ட ஒரு தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டதால், சட்டப்போராட்டமே ஒரே வழி என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால், சர்ச்சைக்கு உள்ளான படம் வெளியாவதற்கு இனி பல வருடங்கள் ஆகலாம். இந்தப் போக்கால் தயாரிப்பாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பாயத்தின் பணியை நீதிமன்றத்துக்குத் தருவதை எதிர்த்து அப்போதே பல கலைஞர்களின் குரல்கள் ஒலித்தன. அந்தக் குரல்கள் அடங்கும் முன்னரே தற்போது நீதிமன்றத்தையும் தாண்டியதொரு அதிகாரத்தை மத்திய அரசு பெற்றுவிட எத்தனிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்துக்கு (1952) சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே சென்சார் அனுமதி பெற்றுவிட்ட படத்தின் சான்றிதழில் மாற்றங்கள் செய்ய முடியும். தேவைப்பட்டால் அந்தச் சான்றிதழையே ரத்து செய்யவும் முடியும். இதன் மூலம், திரைத்துறையில் சென்சார் போர்டு, நீதிமன்றம் என்ற இரண்டையும் தாண்டிய உச்ச அதிகாரத்தை மத்திய அரசு பெற நினைக்கிறது எனலாம்.

இதனால் திரைக்கலைஞர்களின் ஜனநாயக உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பறிக்கப்படும் அச்சம் இருக்கிறது. படைப்பாளிகள் அதிகாரத்தின் கைப்பாவைகளாகவும், அரசை எதிர்த்துக் கேள்விகேட்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

ஒளிப்பதிவுச் சட்டம் 1952-ன் பிரிவு 5B (1)-ல், "ஒரு படம் நாட்டின் பாதுகாப்புக்கோ, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கோ, மற்ற நாடுகளுடனான நட்புறவுக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்கம் அல்லது அறநெறிக்கோ ஊறுவிளைவிப்பதாக இருந்தால் அதற்குச் சான்றிதழோ பொதுவெளியில் திரையிடப்படுவதற்கான அனுமதியோ மறுக்கப்படும். இது அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது இதுபோன்ற எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்சார் சான்றிதழ் (மாதிரி)
சென்சார் சான்றிதழ் (மாதிரி)
இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவில், இந்தப் பிரிவு 5B (1)-ஐ மீறும் எந்தவொரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழையும் புதிய பிரிவு 6 (1)-ன் படி, மத்திய அரசு திரும்பப் பெற முடியும். அதாவது சென்சாரே ஒப்புதல் அளித்திருந்தாலும் மத்திய அரசு நினைத்தால் ஒரு படம் வெளியாவதைத் தடுக்க முடியும். சென்சார் போர்டின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட முடியும்.

திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில் இப்படியொரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, சென்சார் செய்து சான்றிதழ் பெற்றுவிட்ட ஒரு படத்தைச் சீராய்வு செய்யவோ, அதில் மாற்றங்கள் செய்யவோ மத்திய அரசுக்கு அதிகாரங்கள் கிடையாது. இதற்கு முன்னர், கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் அரசு இப்படிச் செய்வதற்கான அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. அதையே உச்சநீதிமன்றமும் வழிமொழிந்தது. இதனால், இப்போது மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் இந்தச் சட்டத் திருத்தம் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகிறது.

இதற்கு எதிராக இந்தியாவின் பல திரைத்துறைகளிலிருந்தும் விமர்சனங்கள் குவிந்துவருகின்றன. கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், ஹன்சல் மேத்தா, வெற்றிமாறன், நந்திதா தாஸ், ஃபர்ஹான் அக்தர், திபாகர் பானர்ஜி உள்ளிட்ட பலர் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், இதன் மூலம் மத்திய அரசு ஒரு 'சூப்பர் சென்சார்' போர்டாக விரும்புகிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார். இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் கலையுலகமே ஸ்தம்பிக்கும் என்பதே அவர்களின் குரலாக இருக்கிறது.

வெற்றிமாறன் - கமல்ஹாசன்
வெற்றிமாறன் - கமல்ஹாசன்

இந்தச் சட்ட வரைவில் சொல்லியிருக்கும் பிற திருத்தங்கள் என்னென்ன?

* ஏற்கெனவே இருக்கும் 'U', 'U/A', மற்றும் 'A' சான்றிதழ்களுடன் வயது வாரியாக சில புதிய சான்றிதழ்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதன்படி, 'U/A 7+', 'U/A 13+' and 'U/A 16+' என 'U/A' சான்றிதழை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். இதற்கு முன்னர், மத்திய அரசு தன் புதிய டிஜிட்டல் கொள்கையில், ஓடிடி உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் பிளாட்பாரங்கள் இப்படி வயதுவாரியான ரேட்டிங்கைத் தங்களின் படைப்புகளுக்குக் காட்டவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதே முறைதான் தற்போது சென்சார் பெறும் திரைப்படங்களுக்கும் வரவிருக்கிறது.

* இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரிவு 6AA-யின் படி, "ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதியில்லாமல், அதை நகல் எடுக்கவோ, அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்யவோ, ஒளிபரப்பு செய்யவோ கூடாது. மீறினால், 3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3,00,000 அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.''

* தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒரு படத்தின் சென்சார் சான்றிதழ் 10 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர், அதைப் புதுப்பிக்கவேண்டும். புதிய வரைவில் இது மாற்றப்பட்டு, சென்சார் சான்றிதழ் இனி காலக்கெடு ஏதுமின்றி ஆயுள் முழுவதுக்குமான சான்றிதழாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்திருத்தம் குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.