Published:Updated:

`திமுக-வை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த இரஞ்சித் எனும் ஈட்டி மழுங்கிப்போனதா?’-கொதிக்கும் ஜெயக்குமார்

ஜெயக்குமார் - இரஞ்சித்
News
ஜெயக்குமார் - இரஞ்சித்

`1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக்அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர்’ - ஜெயக்குமார்

பா.இரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் `சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், தி.மு.க-வைத் தூக்கிப்பிடித்து அ.தி.மு.க-வை விமர்சிப்பதாகக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. `சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டையை மையப்படுத்திய படமாக இருந்தாலும், படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனங்களும், காட்சியமைப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், வெளிப்படையான அரசியல் அடையாளங்கள் படத்தில் காணப்பட்டன.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

`சார்பட்டா பரம்பரை’யின் கோச்சாக, ரங்கன் வாத்தியார் என்கிற கதாபாத்தில் நடித்திருக்கும் பசுபதி, படம் முழுவதும் தி.மு.க கரைவேட்டியுடனே வலம்வருவதில் தொடங்கி அப்போது புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் எம்.ஜி.ஆரின் பின்னால் மக்கள் அணிதிரளக் கூடாது என்பதை ரங்கன் வாத்தியார் அறிவுறுத்தும் வகையிலான வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது தவிர்த்து எமெர்ஜென்சியை மிகக் கடுமையாக எதிர்த்து தி.மு.க ஆட்சியை இழந்ததையும், அந்தக் கட்சித் தொண்டர்கள் சிறைக்குச் சென்றதையும் இந்திரா காந்திக்கு ஆதரவாக அ.தி.மு.க தொண்டர்களின் பாதாயாத்திரை சுவரொட்டிகளையும் நம் பார்வைக்கு `சார்பட்டா பரம்பரை’ மூலம் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். இது போன்ற காட்சி அமைப்புகளால்தான் தி.மு.க-வைத் தூக்கிப்பிடித்து அ.தி.மு.க-வை விமர்சிக்கும் வகையில் படம் இருப்பதான கருத்துகள் வந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `சார்பட்டா பரம்பரை’ படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், ``முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுக்கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். சமீபத்தில் வெளியாகயிருக்கும் ’சார்பட்டா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும் விளையாட்டுத்துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பதுபோலக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க தி.முக-வின் பிரசாரப் படமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.

திரைப் பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாகக் கைகொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் படங்களை முன்மாதிரியாகக்கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்துக்கு வந்து வீரர்களாகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் என ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருடன் முகமது அலி
எம்.ஜி.ஆருடன் முகமது அலி

1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டையில் பங்கேற்பதற்காக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னைக்கு அழைத்துவந்தவர் நமது எம்.ஜி.ஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்துக்கு அவரை அழைத்துச் சென்று மீன்குழம்பு பரிமாறினார். அந்த அளவுக்குக் குத்துச்சண்டை மீது காதல்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகளை வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதியை அளித்து சர்வதேசப் போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்து அழகு பார்த்தார். ஆனால் 'சார்பட்டா' திரைப்படத்தில் தி.மு.க ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டதுபோலவும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கைகழுவியதுபோலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலை என்பது வரலாற்றைவிடக் கூர்மையானது. எனவே, அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல... வருங்காலத் தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது. ஆட்சியில் இல்லாத வரை திமுக-வை மேடைக்கு மேடை குத்திக் கிழித்த இரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கிப் போனதன் காரணம் என்னவோ... அதிகார மையத்தின் இடத்தில் அடைக்கலமாக எதிர்க்கட்சியின் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டுமா இரஞ்சித்? சமரசம் செய்துகொள்வது கலைக்கு மட்டுமல்ல, கலைஞனுக்கும் அது அழகல்ல.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

எம்.ஜி.ஆர் அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னைப் போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தின என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்.ஜி.ஆரை ’சார்பட்டா' படத்தில் தவறாகச் சித்திரித்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும், இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.