சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஜெயம் ரவியின் `கோமாளி’ பட டிரெய்லரில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கலாய்த்து ஒரு காட்சி வர, கண்டனக் கணைகள் கிளம்பிவிட்டன.

அதில் முக்கியமானது, கருத்து சுதந்திரத்தின் காட்ஃபாதராகக் காட்டிக்கொள்ளும் கமலிடமிருந்து! உடனே அந்தக் காட்சியை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறது படக்குழு. சரிதானே, இங்கே கருத்து சொன்னாலும் அதை கமல்தான் சொல்லவேண்டும். ஏன்..?

இதோ காரணங்கள்!

  • `விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமலின் கருத்து சுதந்திரத்துக்கான வேட்கை பிரமாண்டமாய் வெளிவந்தது. காரணம், அது பெரிய பட்ஜெட் படம். ஆனால் `கோமாளி’, சின்ன பட்ஜெட் படம். அதில் கருத்து சொல்வது, நிறைய பேரிடம் ரீச் ஆகாது. அது தெரிந்தும் கருத்து சொல்லியிருக்கிறார் கமல். ஆக, கருத்து சொல்ல பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கமாட்டார் கமல். அதனால், அவர் கருத்து சொல்வதில் தவறில்லை!

  • `களத்தூர் கண்ணம்மா’வில் திரை வாழ்க்கையைத் தொடங்கினாலும் பெரும்பாலும் 90-களில் வந்த `தேவர் மகனி’லிருந்துதான் அரிய பல கருத்துகளைச் சொல்லத் தொடங்கினார் கமல். அதேபோல `கோமாளி’ படத்தின் இயக்குநரும் நடிகரும் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து, முடியெல்லாம் நரைத்த பிறகு, இப்போதைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி கருத்து சொல்லலாம். அதுதான் நியாயமாக இருக்கும்.

  • கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஏழு ஸ்வரங்களிலும் கமல் குரலெழுப்பியபோது, அவர் நடிகராக மட்டுமே இருந்தார். ஆனால் இப்போதோ, பார்ட் டைம் அரசியல்வாதி. எனவே, அரசியல்வாதியின் டெம்பிளேட்டுக்குள் இருந்து யோசித்துப்பார்த்து, `மற்றவர்கள் கருத்து சொல்வது தவறு’ என முடிவு எடுத்திருக்கிறார்.

  • திரைப்படங்கள், பேட்டிகள், ட்விட்டர் என எங்கெங்கு காணினும் கமலின் கருத்துமழைகள்தான். ஒருகட்டத்தில் கருத்துகளே வெறுத்துப்போய் பெயரை மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றுமளவுக்குக் கொட்டித்தீர்க்கிறார். இப்படி கருத்துகளின் மொத்த காப்பிரைட்டையும் வைத்திருக்கும் உலக நாயகன் இருக்கும்போது, இன்னொருவர் கருத்து சொல்வதா? நோ... நெவர்!

  • கமல், ரஜினி இருவரும் பல தசாப்தங்களாக தமிழகத்தில் வீற்றிருக்கும் ஆளுமைகள். அவர்களை ஐடியா அய்யனாரு முதற்கொண்டு சின்னச் சின்ன ஆள்கள் எல்லாம் கருத்து சொல்லிக் கலாய்த்தால் எப்படி? நியாயமாகப் பார்த்தால், ஜுனியர் பாலையா, சரத்பாபு போன்ற அனுபவம்வாய்ந்த ஆளுமைகளுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. ஆகவே, அவர்கள் கலாய்க்காததால், கமலே கலாய்த்திருக்கிறார்!