Published:Updated:

ஜெயலலிதா பயோபிக் சீரிஸுக்கு எதிர்ப்பு... சட்டம் என்ன சொல்கிறது?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெப் சீரிஸ் இயக்கியுள்ளது கௌதம் வாசுதேவ் மேனன் - பிரசாத் முருகேசன் கூட்டணி. இதை ஜெயலலிதாவின் உறவினர் தீபக் எதிர்த்துள்ளார். 'பயோபிக்' திரைப்படங்கள் எடுப்பதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

Queen - Web series
Queen - Web series

இது 'பயோபிக்' திரைப்படங்களின் காலம். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் சஞ்சய் தத், நடிகை சாவித்திரி, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, ஜான்சி ராணி, எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோ முதலானோர் பற்றிய 'பயோபிக்' திரைப்படங்கள் இயக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கவுள்ளதாக அறிவித்தனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகை கங்கனா ரணாவத்தை முன்னணி நடிகையாக வைத்து, 'தலைவி' என்ற தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

The Iron Lady
The Iron Lady

இயக்குநர் மிஷ்கினின் துணை இயக்குநர் பிரியதர்ஷினி, நடிகை நித்யா மேனனை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைத்து, 'தி அயர்ன் லேடி' என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர் MX பிளேயர் ஸ்ட்ரீமிங் நிறுவனத்திற்கு, ஜெயலலிதா வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளனர். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த வெப் சீரிஸ் 'குயின்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.

Deepak Jayakumar
Deepak Jayakumar

கௌதம் வாசுதேவ மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் ஜெயலலிதா பற்றி இயக்கியுள்ள வெப் சீரிஸ் பற்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "ஜெயலலிதா பொது வாழ்க்கையில் இருந்தவர். அவரது பொது வாழ்க்கையைத் தழுவி, படம் எடுக்கப்பட்டிருந்தால், நான் அதற்கு எதிராக நிற்கப் போவதில்லை. ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமானால், என்னுடைய அனுமதியையும் தீபாவின் அனுமதியையும் பெற வேண்டும். எங்கள் அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் படமாக இயக்கியிருந்தால், நாங்கள் நிச்சயம் நீதிமன்றம் செல்வோம்" எனக் கூறியுள்ளார்.

பிரபலங்களை மையப்படுத்தி, பயோபிக் திரைப்படங்கள் இயக்கப்படும்போது இதுபோன்ற சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பயோபிக் திரைப்படங்கள் இயக்குவதைப் பற்றி சட்டத்தின் பார்வை குறித்து வழக்கறிஞர் சாரதா விவேக் அவர்களிடம் பேசினோம்.

பயோபிக் திரைப்படங்கள் இயக்குவதற்கு, சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் வேண்டும். அந்த நபர் உயிருடன் இல்லாத பட்சத்தில், அவரின் சட்டபூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அனுமதி இல்லாமல் அந்தப் படைப்பு உருவாக்கப்பட்டால், வாரிசுகள் அதை வெளியிடுவதில் தடை கோரலாம் அல்லது அவதூறு வழக்கு தொடுக்கலாம். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவரின் பொது வாழ்வையும், அந்த நபரின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளையும் மட்டுமே படைப்புகளாக்குவதால் பிரச்னைகள் எழாது. எனினும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் பிரித்துப் படைப்பாக மாற்றுவதைக் கவனமாகச் செய்ய வேண்டும்.
வழக்கறிஞர் சாரதா விவேக்

பயோபிக் திரைப்படங்கள் இயக்குவதில், தொடர்புடைய பிரபலத்தின் வாரிசுகளின் அனுமதியோடு இயக்கினாலும், அதில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதன் உதாரணமாக இருக்கிறது, கடந்த ஆண்டு வெளிவந்த 'நடிகையர் திலகம்' திரைப்படம்.

'நடிகையர் திலகம்' திரைப்படம் தமிழின் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைத் தழுவி இயக்கப்பட்டிருந்தது. அதற்காக, நடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரியின் அனுமதியோடு இயக்கப்பட்டது. எனினும், ஜெமினி கணேசன் சாவித்திரிக்கு மது அருந்த பழக்குவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள், ஜெமினி கணேசனின் முதல் மனைவியின் குழந்தைகளுக்கும் சாவித்திரியின் மகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படக் காரணமாக அமைந்தன.

Vikatan

பயோபிக் திரைப்படங்கள் குறித்தும், அவற்றை இயக்குவதில் தனி நபர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது குறித்தும் வழக்கறிஞர் சித்தார்த் அவர்களிடம் பேசினோம். "ஆட்டோ சங்கர் வாழ்க்கையைப் பற்றி நக்கீரன் இதழில் வெளிவந்த தொடர் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த வகையான படைப்புகளை நீதித்துறை எப்படி அணுகுகிறது என்பதற்கான உதாரணமாக இருக்கிறது. இது இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும், அடிப்படை உரிமைகளான சட்டப்பிரிவுகள் 19 மற்றும் 21 ஆகியவற்றோடு தொடர்புடையது" என்றார்.

தொடர்ந்த வழக்கறிஞர் சித்தார்த், "தனி நபர் ஒருவரின் வாழ்க்கையைப் படைப்புகளாக்கும்போது, அவரது பொது வாழ்க்கையின் ஆதாரங்களாக, பொதுவில் உள்ள பதிவுகளைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட விவகாரங்களை, உண்மையாகவே இருந்தாலும், பொதுவெளியில் பேசுவது தவறு. பொதுவில் பதிவு செய்யப்படாத விவகாரங்களைப் படைப்புகளாக்கும்போது, சர்ச்சைகள் எழுகின்றன. 'ஆதார்' வழக்கில், தனியுரிமை என்றால் என்ன என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Advocate Sidharth
Advocate Sidharth
ஒவ்வொரு தனி நபருக்கும் தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையுள்ளது; தங்களை இந்த உலகின் முன், தங்கள் விருப்பம்போல, அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமையும், தங்கள் அடையாளம் விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டால், அதைக் கட்டுப்படுத்தும் உரிமையும் உள்ளது. இதன்மூலம், ஒரு தனி நபரின் படம், பெயர், அடையாளம் முதலானவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதையும், அவர் அனுமதியின்றி விற்பனைப் பண்டமாக மாற்றப்படுவதையும் தடுப்பதற்கான உரிமையை, அந்தத் தனிநபர் பெற்றவர் ஆகிறார்.
உச்சநீதிமன்றம் - 'ஆதார்' தீர்ப்பில்.
கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமையாக இருந்தாலும், தனி நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை, எந்தப் பொது நலனும் இல்லாத சூழலில் வெளிப்படுத்துவதை, இந்திய அரசியலமைப்பு தடுக்கிறது.

பயோபிக் படைப்புகள் பொதுப் பதிவுகளின் அடிப்படையில் இயக்கப்படும்போது பிரச்னை எழாது. ஆனால் அதை மீறி, இறந்தவரின் கண்ணியத்தை அந்தப் படைப்பு கேள்விக்குள்ளாக்கினால், படைப்பாளி மீது அவதூறு வழக்கு தொடுக்க முடியும்; ஒரு வகுப்பினரின், ஒரு சாராரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் வழக்கு தொடுக்க வாய்ப்பு உண்டு" என்றார் வழக்கறிஞர் சித்தார்த்.