Published:Updated:

கமல்ஹாசனோடு கூட்டு, எஸ்.பி.வேலுமணியோடு நட்பு… யார் இந்த `டிவி' மகேந்திரன்?!

கமல்ஹாசனுடன் டிவி மகேந்திரன்
கமல்ஹாசனுடன் டிவி மகேந்திரன்

விஜய் டிவியின் ஈவென்ட்கள் அனைத்துக்கும் மகேந்திரன்தான் பொறுப்பாளர். அப்படித்தான் ‘கமல் 50’ நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்பட மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார் மகேந்திரன். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடிக்க கமல்ஹாசனின் மிக நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் போயிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கட்சியை விட்டு வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. டாக்டர் மகேந்திரன், தான் வெளியேறக் காரணமாக சுரேஷ் ஐயர் மற்றும் விஜய் டிவி மகேந்திரனை குற்றம்சாட்டியிருந்தார். ‘’இவர்கள் இருவரும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி, கமல்ஹாசனை நெருங்கவிடாமல் செய்தனர். கமல்ஹாசனே தேர்தல் முடிந்ததும் இவர்களை வெளியே அனுப்பிவிடுவேன் என்று சொன்னார். ஆனால் அது நடக்கவில்லை’’ என்று சொல்லியிருந்தார் டாக்டர் மகேந்திரன். மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் தனிப்பெரும் சக்தியாக இருக்கும் இந்த 'டிவி' மகேந்திரன் யார், அவர் பின்னணி என்ன?!

‘விஜய் டிவி’ மகேந்திரன்!

நடிகர் ‘மிர்ச்சி’ சிவா போல 'விஜய் டிவி' மகேந்திரன் என்பதுதான் இவரது அடையாளம். எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’ உள்பட 1960-70களில் பல பெரிய படங்களைத் தயாரித்த ஜி.என்.வேலுமணியின் பேரன்தான் இந்த 'டிவி' மகேந்திரன். கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேந்தவர் இவர். 1990-களின் இறுதியில் விஜய் டிவி-யில் மக்கள் தொடர்பாளராக (PRO) பணியில் சேர்ந்தவர், காலப்போக்கில் அதன் துணைத்தலைவராக (Vice President) உயர்ந்தார்.

டாக்டர் மகேந்திரன், கமல்
டாக்டர் மகேந்திரன், கமல்

ஆரம்பத்தில் விஜய் டிவியில் சினிமா பிரபலங்களின் பேட்டிகளை ஒழுங்குசெய்துதரும் பணியில் இருந்ததால் தொடர்ந்து சினிமாகாரர்களுடன் பழக்கமாகி, அவர்கள் மூலம் சேனலிலும் நல்ல பெயர் எடுக்க விஜய் டிவியில் இவரது மதிப்பு உயர ஆரம்பித்திருக்கிறது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என எல்லா பிரபல நிகழ்ச்சிகளிலும் சினிமா பட ப்ரமோஷன்களைக் கொண்டுவந்து சினிமா உலகத்தினரின் குட்புக்கில் இடம்பிடித்திருக்கிறார் மகேந்திரன்.

விஜய் அவார்ட்ஸின் முகமாகவும் மகேந்திரன்தான் இருந்திருக்கிறார். இவரது தலைமையில்தான் ஒவ்வொரு ஆண்டும் விஜய் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதுத்தவிர விஜய் டிவி நடத்திய மிகப்பெரிய நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் இவர்தான் பொறுப்பாளர். அப்படித்தான் ‘கமல் 50’ நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்பட மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார் மகேந்திரன். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடிக்க கமல்ஹாசனின் மிக நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் போயிருக்கிறார்.

படங்களின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவிக்கு வாங்கும் பொறுப்பும் இவரிடம்தான் இருந்திருக்கிறது. அதனால், சினிமா உலகிற்கும் விஜய் டிவிக்குமான மிக முக்கிய இணைப்பாக இருந்திருக்கிறார் மகேந்திரன். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் சினிமா தயாரிப்பை தமிழ்நாட்டில் தொடங்கி ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ படங்களைத் தயாரித்ததில் மகேந்திரனின் பங்கு அதிகம். அட்லிக்கு முதல் வாய்ப்பை வழங்கியவர் என்பதால் அட்லி இவரோடு மிக நெருக்கமாக இருந்திருக்கிறார்.

புதுப்புது நிறுவனங்கள்!

''புதுப்புது நிறுவனங்கள் ஆரம்பிப்பது, அதன் மூலம் படங்கள் வாங்கி விஜய் டிவிக்கு விற்பது என மிகவும் பரபரப்பாக இருந்தவர் 2016-2017 காலகட்டத்தில் விஜய் டிவியில் வேலையை விட்டுவிட்டு கமல்ஹாசனோடு இணைந்தார். கமல்ஹாசன் எப்போதும் தனிமையை விரும்புபவர். அவருக்கும் வெளி உலகிற்கும் பொதுவாகவே அதிக தொடர்புகள் கிடையாது. சகோதரர் சந்திரஹாசனின் மறைவுக்குப்பிறகு கமல்ஹாசனின் தனிமை இன்னும் அதிகமானது. அந்த நேரத்தில்தான் கமல்ஹாசனின் ஆல் இன் ஆலாக மகேந்திரன் மாறினார்'' என்கிறார்கள் விவரமறிந்த சிலர். கமல்ஹாசன் தன் அன்பின் பரிசாக அவர் பயன்படுத்திவந்த விலை உயர்ந்த காரான டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ காரையும் 'டிவி' மகேந்திரனுக்கு கொடுத்திருக்கிறாராம்.

கமல்ஹாசன், டிவி மகேந்திரன்
கமல்ஹாசன், டிவி மகேந்திரன்

"கமல்ஹாசனுக்கும், வெளி உலகத்துக்குமான தொடர்பே 'டிவி' மகேந்திரன்தான். வெளியில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் மகேந்திரன் மூலமே கமல் சாருக்கு தெரிய வரும். 'டிவி' மகேந்திரன் சொல்வதைக் கேட்டுத்தான் எந்த ஒரு முடிவையும் கமல் எடுப்பார்'' என்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு நெருக்கமானவர்கள். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கவும், அதற்கு மிகப்பெரிய சம்பளம் பெறுவதற்கும் மிகப்பெரிய காரணியாக இருந்திருக்கிறார் டிவி மகேந்திரன்.

மகேந்திரன், சுரேஷ் ஐயர், நாராயணன் இவர்கள் மூவருமே விஜய் டிவியில் இருந்தவர்கள். சுரேஷ் ஐயர் விஜய் டிவியில், மகேந்திரனுக்கு பாஸாக அதாவது புரோகிராமிங் ஹெட்டாக இருக்க, நாராயணண் விஜய் டிவியின் பைனான்ஸில் இருந்தவராம். இவர்கள் மூவரும் அப்படியே கமல்ஹாசனிடம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். தேர்தலின்போது சுரேஷ் ஐயர் தலைமையில் 'சங்க்யா சொல்யூஷன்ஸ்' நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசன் ஆரம்பத்தில் பெரியார் பாணியில் அரசியல் செய்வதையே விரும்பியிருக்கிறார். நேரடி அரசியலுக்கு வரும் நோக்கம் கமலிடம் இல்லையாம். "'பெரியார் போல தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பேன்… மக்களோடு பேசிக்கொண்டேயிருப்பேன்... அவர்களின் மனசாட்சியாக இருப்பேன்' என்றுதான் கமல்ஹாசன் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால், இந்த நேரத்தில் அரசியல் கட்சித் தொடங்குவது சரியாக இருக்கும் என கமல்ஹாசனுக்கு ஒரு ரூட் மேப்பைப் போட்டுக்கொடுத்தவர் டிவி மகேந்திரன்தான். இப்போது கட்சியில் இருந்து விலகியிருக்கும் டாக்டர் மகேந்திரன் கட்சிக்குள் வருவதற்கும் முக்கிய காரணியாக இருந்தவர் டிவி மகேந்திரன்தான்'' என்கிறார்கள்.

2020-ல் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினி நடிப்பதாக இருந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பை முழுக்க முழுக்க டிவி மகேந்திரன் பார்த்துக்கொள்வதுதான் திட்டமாம். ''கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு மும்பை முதலீட்டாளர்கள் மூலம் பணம்திரட்டி படம் எடுக்க திட்டமிட்டார்கள். படத்தின் லாபத்தில் கமல்ஹாசனுக்கு 25 சதவிகிதம், நஷ்டம் ஏற்பட்டால் கமல்ஹாசனுக்கு எந்த இழப்பும் கிடையாது என்று பேசப்பட்டது. ஆனால், ராஜ்கமல் எனும் பெயருக்குள் சிலர் நுழைவது ரஜினிக்குப் பிடிக்காமல்போக அந்தப் படம் டிராப்பாகி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனே நடிப்பது என முடிவானது'' என்கிறார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எஸ்.பி.வேலுமணியோடு நெருக்கமா?!

எஸ்.பி.வேலுமணியோடு, டிவி மகேந்திரன் நெருக்கம் காட்டினார் என்கிற பகீர் குற்றச்சாட்டையும் கிளப்புகிறது இன்னொரு தரப்பு. ''கமல்ஹாசன் ஹெலிகாப்டர்களில் பறப்பதற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்கள் எழுந்தபோது எஸ்.பி.வேலுமணியிடம் பேசி டிவி மகேந்திரன்தான் அதை சரிசெய்தார். அதேபோல் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து ஒரு இந்து வேட்பாளர்தான் நிறுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், தி.மு.க-வின் வாக்குகளை பிரிக்க வேண்டும், சிறுபான்மையினர் வாக்குகள் அவர்களுக்கு விழுந்துவிடக்கூடாது என்பதற்காக கடைசி நேரத்தில் அங்கே மக்கள் நீதி மய்யம் சார்பாக முஸ்லீம் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்'' என்கிறார்கள். "டிவி மகேந்திரன் சமீபத்தில் 8 கோடி ரூபாய்க்கு சென்னை செனடாஃப் சாலையில் வீடு வாங்கியிருக்கிறார். தேர்தலின்போது பல பேரங்களை அவர் நடத்தினார்" என்று கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள்.

கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை கமல்ஹாசன்தான் நிர்வாகிகள் அனைவரிடமும் விசாரித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு