Published:Updated:

``தேசிய விருது கிடைத்துவிட்டது; ஆனால் தகவல்..?”- இது காஷ்மீர் சிறுவனின் கதை

க.ர.பிரசன்ன அரவிந்த்

அமின் பட்டின் நாடகமான 'போன் நம்பர் 786' என்ற கதையைத் தழுவியே 'ஹமீத்' என்னும் படத்தை எடுத்துள்ளார், இயக்குநர் அய்ஜஸ் கான்.

தல்ஹா ஹர்ஷத் ரேஷி
தல்ஹா ஹர்ஷத் ரேஷி

சமீபத்தில் நடைபெற்ற 66-வது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த குழந்தை நட்சத்திரமாகத் தேர்வாகியுள்ள எட்டு வயதே நிரம்பிய தல்ஹா ஹர்ஷத் ரேஷிக்கு, தான் விருதுபெற்ற செய்தியே இன்னும் சென்றுசேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட 'ஹமீத்' என்னும் உருது படத்தில், மைய கதாபாத்திரமாக நடித்ததற்காக இந்த விருதை அவர் தட்டிச் சென்றார். மேலும், இப்படம் சிறந்த உருதுப் படமாகவும் தேர்வாகியுள்ளது.

ஹமீத்
ஹமீத்

தற்போது, காஷ்மீரில் அரசியல் சட்டம் 370-ன் நீக்கத்தைத் தொடர்ந்து, அங்கு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அதனால் படக் குழுவினரால் இந்த மகிழ்ச்சியான செய்தியை அந்தச் சிறுவனிடம் தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

அமின் பட்டின் நாடகமான 'போன் நம்பர் 786' என்ற கதையைத் தழுவியே 'ஹமீத்' என்னும் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் அய்ஜஸ் கான். காஷ்மீரின் பள்ளத்தாக்குகளில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தன் தந்தை தொலைந்துபோன காரணத்தால் அல்லாஹ்விடம் பேச முற்படுகிறான்.

ஹமீத் படத்தின் ஒரு கட்சி
ஹமீத் படத்தின் ஒரு கட்சி

அந்தச் சிறுவன், '786' என்ற எண்ணுக்கு கடவுளிடம் பேச தொலைபேசியில் அழைக்கிறான். ஆனால், மறுமுனையில் சிஆர்பிஎஃப் ஜவான் அபயாக நடித்துள்ள விகாஷ் குமார் பேசுகிறார். இந்தத் திரைப்படம், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் பந்தத்தையும் அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் துயரங்களையும் சொல்கிறது. இப்படத்தில், பல்வேறு உருக்கமான காட்சிகள் அமைந்துள்ளன.

தேசிய விருதுகளைக் குவித்த `மகாநடி'; `கே.ஜி.எஃப்'

மேலும், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களாக, சிறுவனின் தந்தை ரெஹ்மத்தாக சுமித் கெளலும் அம்மா இஷ்ரத்தாக ரஷிகா டக்கலும் நடித்துள்ளனர். பரப்பராக செல்லக்கூடிய படத்தில் அம்மாவாக நடித்துள்ள டக்கல், பலதரப்பு பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரமாகத் தேர்வாகியுள்ள ரேஷி, அந்த விருதை, பி.வி ரோஹித் (ஒன்டால்லா எரடல்லா) , சமீப் சிங்க் (ஹர்ஜீதா) மற்றும் ஶ்ரீநிவாஸ் போகலே (நாள்) ஆகியோருடன் பகிர்ந்துகொள்கிறார்.

ஹமீத்
ஹமீத்

படத்தின் இயக்குநரான அஜீஸ் பிடிஐ -க்கு அளித்த பேட்டியில், ``தேசிய விருது வாங்கியதைப் பற்றி தெரிவிக்க, தல்ஹாவின் குடும்பத்தினரைத் தொடர்ப்புகொள்ள முயன்றுவருகிறோம். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது" என்றார்.