கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

“பாபா சொன்ன ஸ்கிரிப்ட், ரஜினி நடிக்கணும்; புரட்சி வெடிக்கணும்!”

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

அரசியல் சுனாமி வீசும். லஞ்சம், ஊழல் ஒழியும்.

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வி பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைச் சுற்றும் கேள்வி. கடைசியில் ‘தனிக்கட்சி தொடங்குவேன்; 2021-ல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பேன்’ என்று அவரே முற்றுப்புள்ளி வைத்தார். ‘நான் முதல்வர் வேட்பாளர் இல்லை’ என்று அதிர்ச்சி கொடுத்தவர், ‘ரசிகர்கள் மக்களிடம் போய் அலையை ஏற்படுத்தவேண்டும்’ என்றார். பிறகு அவரே ‘புள்ளி வைத்து விட்டேன். அலை உருவாகிக் கொண்டிருக்கிறது’ என்றார்.

அவர் சொன்ன அலை உருவானதோ இல்லையோ, கொரோனா அலை எல்லோரையும் வாரிச்சுருட்டி வீட்டுக்குள் முடக்கியது. ரஜினி சொன்ன புள்ளி - கோலம் - அலை - கட்சி - ஆட்சி எல்லாம் என்ன ஆகும் என்பது இனிமேல்தான் தெரியும். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ஒரு சினிமா ஸ்கிரிப்டைத் தயார் செய்துவிட்டுப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தெற்குப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜா என்பவர். ரஜினியின் தீவிர ரசிகர், பாபாஜியின் தீவிர பக்தர்.

ரியல் எஸ்டேட், தொழில் செய்துவரும் சுப்புராஜ், ரஜினி ரசிகர் மன்றத்தின் ஒன்றியச் செயலாளர் பதவியில் இருக்கிறார். தியானத்தில் தன்னுடன் பாபாஜி பேசுவதாக நம்புபவர், பாபாவும் முருகக்கடவுளும் சொல்லித்தான் ரஜினி படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதியதாகவும் சொல்கிறார்.

“ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்கும் அனைத்து விஷயங்களும் இந்த ஸ்கிரிப்ட்டுல இருக்கு. முருகப்பெருமானும் பாபாஜியுமே எனக்குச் சொன்ன ஸ்கிரிப்ட் என்பதால் இது சக்தி வாய்ந்த ஸ்கிரிப்ட். ரஜினி செய்யவிருக்கும் அரசியல் புரட்சி, அவர் முதல்வர் ஆவாரா இல்லையா என்பதற்கெல்லாம் இந்த ஸ்கிரிப்ட் விடை கொடுக்கும். அவர் சந்திக்க நேரம் கொடுத்தால், அதையெல்லாம் அவரிடம் காட்டுவேன். காலத்துக்கு ஏற்றமாதிரி சில மாறுதல்களைச் செய்துவருகிறேன். கடந்த இரண்டு வருடங்களில் அவர் என்னைச் சந்தித்திருந்தால், இந்நேரம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும். அவர் முதல்வர் பதவிக்கு வநதிருப்பார்.

சுப்புராஜா
சுப்புராஜா

முருகன் பெயரை வைத்திருப்பதால்தான், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஓட்டிக்கிட்டிருக்கார். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் போன அன்னைக்கு இரவே எனக்கு மேலேயிருந்து தகவல் வந்தது, முருகன் பெயரைக் கொண்டவர்தான் அடுத்த முதல்வர்னு. நானும் அந்தப் பெயர்ல யார் இருக்காங்கன்னு தேடினப்ப 27 பேர் இருந்தாங்க. திரும்ப நான் தியானத்துல உக்காந்து பார்த்தப்ப... அது எடப்பாடி பழனிசாமிதான் என்று உறுதியாகத் தெரிந்தது.”

“அதெல்லாம் சரி, நீங்கள் எப்படி ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் இறங்கினீர்கள்?”

“பாபாஜிதான் என்னைத் திரைக்கதை வசனம் எழுதும் வேலையைச் செய்ய ச்சொன்னார். அன்றுமுதல், வசனங்கள் தானாகவே வந்து விழுந்தன. ‘சினிமாவுக்கு நீ கதைவசனம் எழுதுவது பணத்துக்காக இல்லை. இந்திய அரசியல் சிஸ்டமே சரியில்லை. அதை மாற்றி யமைக்கும் ஒரு திட்டம் உள்ளது. நாங்க சொல்றபடி செய். உனக்கு நின்னுபோன விஷயங்கள் தானாக நடக்கும்’ என்றார் பாபா. நான் இடைமறித்து, ‘என் முன்னால் சினிமா டைரக்டர் ஒருவரை இப்போ வரச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அரைமணி நேரம் ஆகியிருக்கும். டைரக்டர் பா.விஜய் ‘சைவம்’ பட சூட்டிங்கிற்காக அந்த வழியாகப் போனவர் திடீரென நான் இருந்த கோயிலுக்கு வந்தார். எனக்கே ஆச்சர்யம். இதுபோல் பல ஆச்சர்யங்கள் நடக்க விருக்கின்றன. அது ரஜினி என் ஸ்கிரிப்டைப் படித்து, படத்தில் நடித்தால் நாட்டுக்கு நன்மை சேர்க்கும்.”

“சரி, அந்த ஸ்கிரிப்டில் அப்படி என்னதான் இருக்கிறது?”

“ஊழலை ஒழிப்பதற்கான சட்டத்தைக் கொண்டுவர ரஜினி மெரினா காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக பிரசாரம் செய்து கொண்டே போகிறார். அமிதாப் பச்சன், கெஜ்ரிவால், இந்து மடாதிபதிகள், முஸ்லிம், கிறிஸ்துவத் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ரஜினி பின்னால் அணிவகுக்கிறார்கள். எங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்க நினைக் கிறாரோ, அது அத்தனையும் இந்த ஸ்கிரிப்ட்டில் இருக்கு. அதை ஓரளவுக்குத்தான் உங்களிடம் சொல்லமுடியும். ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். என் ஸ்கிரிப்ட்டில் தலைவர் நடித்தாலே நாட்டில் புரட்சி வெடிக்கும். அரசியல் சுனாமி வீசும். லஞ்சம், ஊழல் ஒழியும்.”

“சரி, இதை ரஜினியிடம் கொண்டுசெல்ல முயற்சி எடுத்தீர்களா?”

“ ‘அரசியல் சிஸ்டத்தையே மாற்றி அமைக்கும் விஷயங்களை எழுதியிருக்கிறேன். தலைவர் கூப்பிடமாட்டேங்கிறாரே?’ என்று வருத்தப்பட்டு முருகப்பெருமானிடம் வேண்டிக்கிட்டேன். மறுநாளே ரஜினி, ரசிகர்களைச் சந்திக்கிறார்னு பேப்பர்ல நியூஸ் வெளியானது. உள்ளுக்குள் சந்தோஷம். மறுபடியும் தியானத்தில் பாபாஜியைச் சந்திச்சு இதைச் சுட்டிக்காட்டினேன். ‘நீயாகப் போகாதே. அழைத்தால் மட்டுமே போ. இந்திய அரசியல் அமைப்பையே மாற்றும் அதிகாரத்தை அவரிடம் நாங்கள் கொடுத்திருக்கோம்’ என்று உத்தரவு போட்டார் பாபாஜி. ஆனாலும் ரஜினியாக என்னைத் தேடி வருவதாகத் தெரியவில்லை.

ரஜினி
ரஜினி

மார்ச் 10-ம் தேதி தலைவர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். ‘அரசியலில் நுழைவதற்கு முன்பு, என்ன செய்யப்போகிறோம் என்கிற விஷயங்களை உணர்த்தும் எனது ஸ்கிரிப்டைப் படிக்காமல் உங்களால் கட்சி ஆரம்பிக்கமுடியாது. இது பாபாஜி வேண்டுகோள்’ என்று எழுதியிருந்தேன். அவர் இதுவரை என் ஸ்கிரிப்டைப் படிக்காததால்தான் அவரால் கட்சி ஆரம்பிக்கவும் முடியவில்லை; உறுதியான முடிவுகளையும் எடுக்க முடியவில்லை.”

“உங்களை ரஜினியும் சந்திக்கவில்லை. நீங்கள் சந்திக்க எடுத்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. ஏன், பாபாஜியே ரஜினிகிட்ட உங்களைப்பற்றிச் சொல்லி சந்திக்கவைக்கலாமே?”

“சொல்லமாட்டாங்கல்ல..! ‘கஷ்டப்படு. தொடர்ந்து முயற்சி செய். உழைத்தால்தான் ஊதியம்’ - இதுதான் பாபாஜி எனக்குக் கற்றுக்கொடுத்தது. என்னை ரஜினியே தேடிவந்து சந்தித்தால்தான் எதுவும் நடக்கும். இரண்டு மூணு வருடங்களுக்கு முன்னரே, என் ஸ்கிரிப்டை ரஜினி பார்த்திருந்தால்... இந்தப்படம் ரிலீஸ் ஆகிறப்ப... இந்தியாவுல பெரிய புரட்சியே ஏற்பட்டிருக்கும். ப்ச், நடக்காமப்போயிடுச்சு.”

“ரஜினியே அரசியலுக்கு வந்தாலும் முதல்வர் ஆக மாட்டேன் என்று சொல்லிவிட்டாரே?”

“அவர் உண்மையான ஆன்மீகவாதி. தான் முதல்வர் ஆனால் தன் பெயரைச் சொல்லி யாராவது தப்பு செய்துவிடுவார்களோ என்று நினைக்கிறார். ஆனால் இதற்கும் என் ஸ்கிரிப்டில் தீர்வு இருக்கு. இந்த ஸ்கிரிப்டை மட்டும் தலைவர் படிச்சு, படம் நடிச்சுட்டாப் போதும், தமிழ்நாடு என்ன, இந்திய அரசியல் சூழலே மாறும்.”

சுப்புராஜா
சுப்புராஜா

கடைசிவரை முழுக்கதையையும் சொல்லாமல் ‘தலைவர் ஸ்கிரிப்டப் படிக்கணும்; படத்தில் நடிக்கணும்; புரட்சி வெடிக்கணும்’ என்றே சொல்லிக்கொண்டிருக்க, கேள்வி கேட்ட நாமே டயர்டாகிவிட்டோம்.

ஏற்கெனவே கொரோனா ஒருபக்கம், கொளுத்தும் வெயில் ஒருபக்கம்னு குழம்பிக் கலங்கிப்போயிருக்கோம். இதில் இவர் சொல்றதை நம்புறதா, வேணாமா? பாபாஜியும் ரஜினியும்தான் முடிவு பண்ணணும்!