அலசல்
அரசியல்
Published:Updated:

சட்டம்-ஒழுங்கு பற்றி, எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது!

மா.சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
மா.சுப்பிரமணியன்

உழைத்தால் தி.மு.க-வில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம்.

தி.மு.க ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. பல்வேறு பாராட்டுதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் இடையே இந்த ஓராண்டு கழிந்திருக்கிறது எனலாம். தி.மு.க ஆட்சியின் போக்கு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம், கட்சி விவகாரம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்விகளை முன்வைத்தேன்...

“இந்த ஓராண்டு ஆட்சியின் சிறப்பான திட்டங்கள் என எவையெவற்றைச் சொல்வீர்கள்?”

“ஓராண்டில் தி.மு.க அரசு என்ன செய்திருக்கிறது என்பதை முதல்வர் சட்டப்பேரவையில் பட்டியலிட்டிருக்கிறார். அந்தப் பட்டியலிலிருந்த அனைத்தும் சிறப்பான திட்டங்கள்தான். பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, அரசுப் பேருந்தைப் பயன்படுத்தும் பெண்களின் சதவிகிதம் 41-லிருந்து 60 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. சமூகப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ ‘இன்னுயிர் காப்போம்’, ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ ஆகிய திட்டங்கள் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்டன. இவை தவிர, கல்வித் துறையில் ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘மாடல் பள்ளி’ உருவாக்குதல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பசுமைப் பரப்பு, விவசாய நிலப்பரப்பு உள்ளிட்டவற்றை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எனப் பல்வேறு திட்டங்களை இந்த ஓராண்டில் செயல்படுத்தியிருக்கிறோம். தலைவர் அரசின் ஓராண்டுச் சாதனைகளைச் சொல்ல இதுபோல நூறு நேர்காணல்கள் கொடுக்க வேண்டும்.”

சட்டம்-ஒழுங்கு பற்றி, எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது!

“ஆனால், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது சரிதானா?”

“எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என 1989-ல் கலைஞர் அறிவித்தார். இது குறித்து கலைஞர், `எட்டாவதுவரை படித்த ஏழை வீட்டு இளஞ்சிட்டு, எட்டாப் பழமடியோ இல்வாழ்க்கை என ஏங்கியதை மாற்றிவிட்டு, தட்டாமல் அவள் கழுத்தில் தாலி ஏற வைப்பதற்குத் தந்திடும் ஐந்தாயிரம் தவமின்றி பெற்ற வரம்’ எனக் கவிதை பாடினார். அந்தக் காலகட்டத்தில் இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்துவைத்ததோடு அவர்களின் படிப்பையும் நிறுத்தினார்கள். கலைஞர் இந்தத் திட்டத்தை அறிவித்த பின்னர் பல பெண்கள் எட்டாம் வகுப்புவரை படித்தனர். 91-ல் ஆட்சி அமைத்த ஜெயலலிதா இந்தத் திட்டத்தைத் தடை செய்தார். 1996-ல் ஆட்சி அமைத்த கலைஞர் மீண்டும் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்து, உதவித்தொகையை 10 ஆயிரமாக உயர்த்தியதோடு 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு உதவித்தொகை என்ற நிபந்தனையையும் விதித்தார். அதன் பிறகு அ.தி.மு.க ஆட்சியில் 20 ஆயிரமாக உயர்த்தி, தாலிக்குத் தங்கமும் கொடுக்கப்படும் என்றார்கள். இப்போது அதை உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என மாற்றியதோடு `ராமாமிர்தம் அம்மையார் பெயரிலேயே நீடிக்கும்’ எனவும் முதல்வர் அறிவித்திருக்கிறார். இதன் நோக்கம் பெண்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதுதான். பெண்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்தைவிட, கல்வி அவசியம் என்பதை உணர்ந்தே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார் தலைவர். இதுதான் திராவிட மாடல்.”

“தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்ற விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றனவே?”

“சமீபத்தில், சென்னையில் ஒரு காவல் நிலையத்தில் மரணம் நடந்தது. அது குறித்து விரைவாக விசாரணை செய்து உடனடியாக அதில் தொடர்புடையவர்கள்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. எந்த ஆட்சியிலும் இந்த வேகத்தில் ஒரு குற்றத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. குடும்பத்திலேயே சில சிக்கல்கள் எழும்போது மிகப்பெரிய நிர்வாகத்தில் ஒன்றிரண்டு தவறுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால், அப்படி நடக்கும் தவறுகள்மீது எவ்வளவு வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். தஞ்சையில் தேர்மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததை அறிந்ததும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, நிவாரண உதவியையும் அறிவித்துவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்தித்தார் தலைவர். ஆனால், தூத்துக்குடி கொடூரம் நடந்தது குறித்து கேட்கப்பட்டதற்கு ‘எனக்கு எதுவும் தெரியாது, டி.வி-யில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என பதில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி சட்டம்-ஒழுங்கு பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.”

“தி.மு.க அரசு, பழிவாங்கும் நோக்கில்தான் முன்னாள் அமைச்சர்கள்மீது ரெய்டு நடத்துகிறதா, வழக்குகள் பதிவு செய்கிறதா?”

“2001-ல் தி.மு.க அமைச்சர்கள் எத்தனையோ பேர் மீது அ.தி.மு.க-வினர் வழக்கு பதிவு செய்தார்கள். அவர்களால் எந்தவொரு தி.மு.க அமைச்சர் மீதான குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. அதேநேரம் தி.மு.க வழக்கு பதிவுசெய்த அ.தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களான பி.டி.சரஸ்வதி, இந்திரகுமாரி, செல்வகணபதி, பொன்னுசாமி போன்றவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஏன் ஜெயலலிதா, சசிகலாமீது தி.மு.க தொடர்ந்த வழக்கில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதே... தி.மு.க எப்போதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைத்ததில்லை. அதற்கான உதாரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.”

“சீனியர் அமைச்சர்களும் சட்டமன்றத்தில் உதயநிதி புகழ்பாடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இதில் எந்தத் தவறும் இல்லை. வாழையடி வாழையாக தி.மு.க வளர வேண்டும் என நினைக்கிறோம். உதயநிதி நல்ல இளம் தலைவர், கூட்டத்தை ஈர்க்கும் திறனுடையவர், அவரின் தாத்தாவைப்போல சமயோசிதமாகப் பேசும் நுட்பமும் கைவருகிறது. கட்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறார். அவரைக் கட்சி பயன்படுத்திக்கொள்கிறது. அவ்வளவுதான்.”

“தலைமையைப் புகழ்ந்துதான் தி.மு.க-வை வளர்க்க வேண்டியிருக்கிறதா?”

“தலைவர்களைப் புகழ்வதில் தவறில்லை. தலைவராகத் தகுதியுடைய ஒருவரைப் புகழ வேண்டும். 20 லட்சம் பேர் இருந்த இளைஞரணியில் உதயநிதி பொறுப்பேற்ற பிறகு அது 50 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அவரைப் புகழ்வதில் என்ன தவறு?”

“அ.தி.மு.க-வின் திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது தி.மு.க என்றொரு குற்றச்சாட்டு எழுகிறதே?”

“அண்ணாநகரில் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றி, `அறிஞர் அண்ணா அரங்கம்’ எனப் பெயர் வைத்தோம். அதை ‘அம்மா அரங்கம்’ எனப் பெயர் மாற்றினார்கள். இப்படி அண்ணாவின் பெயரையே மாற்றியவர்களுக்கு எங்களைப் பார்த்து கைநீட்ட என்ன தகுதி இருக்கிறது... ரிப்பன் மாளிகையில் ஒரு கட்டடம் தி.மு.க ஆட்சியில் தொடங்கி 90 சதவிகித வேலைகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு `அம்மா மாளிகை’ எனப் பெயர் வைத்தார்கள். அ.தி.மு.க ஆட்சியில் திட்டங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. பெயர் வைப்பதற்காகவே திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள். அப்படி அம்மா பெயரைச் சூட்டுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட உணவகம், உப்பு, குடிநீர், அரிசி ஆகிய திட்டங்கள் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தப்பட்டதோடு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய திட்டங்கள். அவற்றையெல்லாம் முறைப்படுத்துகிறோம்.”

சட்டம்-ஒழுங்கு பற்றி, எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது!

“தி.மு.க மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைக் குறைக்கப்போவதாக தகவல் வருகிறதே, உண்மையா?”

“இல்லை... இல்லை... இல்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜூன் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான வேலைகள்தான் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. கட்சியின் கட்டமைப்பை மெருகேற்றும் பணிகள்தான் நடக்கின்றனவே தவிர வேறு எந்த மாற்றமும் உட்கட்சி அமைப்பில் செய்யப்படவில்லை.”

“மாற்றுக் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு மட்டும்தான் தி.மு.க-வில் முக்கியத்துவம் தரப்படுகிறதா?”

“மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தெரிகிறது. தி.மு.க-வில் யாருக்கும், எந்தப் பொறுப்பும் உடனடியாக வழங்கப்படுவதில்லை. சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எ.வ.வேலு போன்றவர்கள் கட்சிக்கு வந்து நீண்ட உழைப்பைக் கொடுத்ததாலேயே முக்கியப் பொறுப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். உழைத்தால் தி.மு.க-வில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம். தி.மு.க-வில் இப்போது மட்டுமல்ல, எப்போதும் உழைப்பைப் பார்த்துத்தான் பொறுப்புகள் வழங்கப்படும்.”

“2026 தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்களோடு பா.ஜ.க பேரவைக்குள் நுழையும் என்றிருக்கிறாரே அண்ணாமலை?”

“ஒட்டுமொத்த இந்தியாவையும் சேர்த்து அந்த எண்ணிக்கையைச் சொல்லியிருப்பார்.”

“அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான செயல்திட்டமாக எதைவைத்துப் பயணிக்கிறது தி.மு.க அரசு?”

“தமிழ்நாட்டு மக்கள் எளிதில் அணுகும் அரசாக மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகளை மக்கள் அதிகம் நாடி வரும்படி அவற்றை மேம்படுத்த வேண்டும். மக்கள் எதிர்பாராத இன்னும் நல்ல செயல்திட்டங்களோடு மக்கள் அரசாக இந்த அரசு இருக்கும்!”