Published:Updated:

நானும் நீயுமா - 22 | கமல்ஹாசன் இன்னொரு ஜெயலலிதாவா… அரசியல் பயணத்தில் வெற்றியும் தோல்வியும்!

கமல்ஹாசன்
News
கமல்ஹாசன்

‘அரசியல் வருகை' என்கிற விஷயத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் ஒருவரே காரணமாக இருந்திருக்கிறார் என்பது தற்செயலான ஆச்சரியம். ஆம், அது ஜெயலலிதா.

நானும் நீயுமா - 22 | கமல்ஹாசன் இன்னொரு ஜெயலலிதாவா… அரசியல் பயணத்தில் வெற்றியும் தோல்வியும்!

‘அரசியல் வருகை' என்கிற விஷயத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் ஒருவரே காரணமாக இருந்திருக்கிறார் என்பது தற்செயலான ஆச்சரியம். ஆம், அது ஜெயலலிதா.

Published:Updated:
கமல்ஹாசன்
News
கமல்ஹாசன்
ரஜினி vs அரசியல் தொடர்பான கடந்த வார கட்டுரைகளின் சாரத்தை ஒற்றை வரியில் சுருக்கிச் சொல்வதென்றால் 'மக்களின் வாழ்வாதார பிரச்னை தொடர்பானது என்பதால் 'அரசியலுக்கு வருவேன்... வரக்கூடும்... வரலாம்...' என்கிற பரமபத விளையாட்டை ரஜினி நெடுங்காலம் இழுத்திருக்க வேண்டாம்' என்பதே.

ஓகே... ரஜினியின் அரசியலுக்கு அடுத்தது அவரது இணை பயணியான கமலின் அரசியல் பயணத்தைப் பற்றிதானே பேச வேண்டும்? ஒருவகையில் இந்தத் தொடரின் மையமும் அதுதானே..? சமகாலத்தில் இயங்கும் இரு முன்னணி நடிகர்களில் ஒருவர் ஓரடி முன்னே நிற்க, அடுத்தவர் பின்னே நிற்கிறார். சினிமாத் துறை என்று பார்த்தால் வணிக மதிப்பு, புகழ், செல்வாக்கு, மக்கள் அபிமானம் போன்ற விஷயங்களில் ரஜினி ஓரடி முன்னே நிற்கிறார். கமல் ஓரடி பின்னால் நிற்கிறார். இது பற்றி முன்னரே பார்த்து விட்டோம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஆனால், அரசியல் பயணம் என்கிற நோக்கில் இது எவ்வாறாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். 'புலி வருகிறது... புலி வருகிறது' என்கிற கதையாக மிக நீண்ட காலத்துக்குத் தனது நேரடி அரசியல் நுழைவை ரஜினி தாமதப்படுத்திக் கொண்டிருந்த அதே சமயத்தில், அதற்கான எவ்வித தடயமும் இல்லாமல் இருந்த கமல் திடீரென அரசியல் களத்துக்குள் வந்து குதித்தது ஆச்சர்யமான விஷயம் மட்டுமல்ல, பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட. தயங்கித் தயங்கி நின்று கொண்டே இருப்பதை விடவும் ஒரு விஷயத்தில் துணிச்சலாக குதிப்பது ஒருவகையில் சிறந்த அணுகுமுறை.

கமலின் இந்த அரசியல் பயணம் ஆரம்பக்கட்டத்திலேயே ஆட்டம் கண்டிருப்பது தற்காலிகமான பின்னடைவா... 'மய்யம்' இதிலிருந்து சுதாரித்து மீளுமா என்கிற கேள்வியையே கமலின் அரசியல் செயல்பாடுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

"நீங்கள் திடீரென அரசியலில் குதித்திருக்கிறீர்களே?" என்று கமல் கட்சி ஆரம்பித்தபோது பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். "நான் நீண்ட காலமாக அரசியலில்தான் இருக்கிறேன்" என்று தன் வழக்கமான பாணியில் சாதுர்யமாக சொன்னார் கமல். அவர் இப்படிச் சொல்வது தத்துவார்த்தமான நோக்கில் சரிதான்.

அது பிரபலமோ அல்லது சராசரி நபரோ, ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் விடியலில் இருந்து உறங்கச் செல்லும் வரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலால் பாதிக்கப்படாத ஆசாமியே இல்லை எனலாம். ஒருவரின் படுக்கையறைக்குள் கூட அரசியல் புகுந்திருக்கிறது. 'இத்தனை குழந்தைக்குள் மேல் பெற்றுக் கொள்ளாதே' என்று ஒரு தனிநபரின் தேர்வில் அரசு நுழைவதும் ஒருவகையான அரசியல்தான்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்

நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுபவரைத்தான் 'அரசியல்வாதி' என்று புரிந்து கொள்வது சமூக நடைமுறை. இந்த வகையில் கமலின் திடீர் அரசியல் வருகை ஓர் இனிய ஆச்சரியம்தான். ஆனால், அது வெறும் ஆச்சர்யத்திலேயே நின்றுவிட்டதா என்கிற அளவுக்கு 'மையமாக' பல விஷயங்கள் நடந்துவிட்டன.

கமலும் சரி, ரஜினியும் சரி, சினிமாவில் முன்னணி நாயகர்களாக இயங்கிக் கொண்டிருந்தபோது நீண்ட காலத்துக்கு அரசியல் வாடையே இல்லாமல்தான் செயல்பட்டார்கள். இருவரும் முன்னணி அரசியல்வாதிகளிடம் இணக்கமாகவே செயல்பட்டார்கள். 'நான் சிறுவனாக நடித்தபோதே எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றவன். சிவாஜியின் பிள்ளைகளை விட அவரின் மடியில் நான்தான் அதிகமாக இருந்தேன். கலைஞர் என் தமிழ் ஆசான்' என்று தனது நேர்காணல்களில் நெகிழ்ச்சியுடன் கூறுவது கமலின் வழக்கம்.

ஆனால், இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவின் வழக்கான கதையம்சங்களின் படி 'கெட்ட அரசியல்வாதிகள்' இவர்களின் திரைப்படங்களில் வில்லன்களாக வந்தார்கள். 'நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு" என்கிற கிண்டலான பாடல் ரஜினி நடித்த 'குரு சிஷ்யன்’ படத்தில் இருந்தது. கமல் நடித்த 'சத்யா'வில் மேற்பார்வைக்கு நல்லவர் போல் தென்படும் ஒரு நயவஞ்சக அரசியல்வாதியின் பாத்திரம் சித்thiரிக்கப்பட்டது. ‘'போட்டா படியுது படியுது... துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது…’’ பாடலில் அரசியல்வாதிகளின் கீழ்மைகள் தோலுக்கரிக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் வரும் விஷயம்தான். அரசியல்வாதிகளின் மீது மக்களுக்கு இருக்கும் மெளனக் கோபத்தின் வடிகால்களாக இவை செயல்பட்டன.

‘அரசியல் வருகை' என்கிற விஷயத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் ஒருவரே காரணமாக இருந்திருக்கிறார் என்பது தற்செயலான ஆச்சரியம். ஆம், அது ஜெயலலிதா.
விஸ்வரூபம் கமல்
விஸ்வரூபம் கமல்

ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட முட்டலின் தொடக்கம்தான் ரஜினி தேர்தல் காலத்தில் அரசியல் 'வாய்ஸ்' தரும் வரைக்கும் சென்றது. இதேபோன்ற சூழலைத்தான் கமலும் ஒருமுறை சந்தித்தார். 'அரசியலே வேண்டாம்' என்கிற தெளிவுடன் இருந்த கமல் ஒரு மிகப்பெரிய பிரச்னையை 2013-ம் ஆண்டில் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆம்... அந்த ஆண்டில் மிகுந்த பொருட்செலவுடன் அவர் இயக்கி, நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி "'விஸ்வரூபம்’ திரையிடப்படக்கூடாது" என்று தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நிகழ்த்தின. 'படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்' என்ற ஜெயலலிதா ஆட்சி 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு 15 நாள்களுக்கு தடை விதித்தது. தமிழகம் தவிர இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இத்திரைப்படம் வெளியாவதில் பிரச்னை ஏற்படவில்லை. தமிழக ரசிகர்கள் ஆந்திரா, கேரளா பார்டருக்கு சென்று படம் பார்த்த சம்பவம் எல்லாம் நடந்தது.

இந்தப் பிரச்னைக்கு முன் அப்போதுதான் கமல் இன்னொரு பிரச்னையை தீர்த்து விட்டு வந்திருந்தார். ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை OTT-யிலும் (DTH) வெளியிட கமல் செய்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பலத்த கண்டனத்தை எழுப்பியது. 'விஸ்வரூபத்தை' திரையிட மாட்டோம் என்று முடிவு செய்தது.

இன்றைய தேதியில் OTT-ல் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாவது இயல்பாகிவிட்டது. ஆனால் 2013-ம் ஆண்டிலேயே தொலைநோக்குப் பார்வையுடன் கமல் முதலில் காலடி எடுத்து வைக்கும்போது பலத்த எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒருவழியாக அதை முடித்து விட்டு வரும்போது 'அரசு ஏற்படுத்திய தடை' எனும் இன்னொரு பெரிய பாறாங்கல்லையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தச் சூழல் கமலுக்கு மிகுந்த கோபத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் தந்தது. அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார் கமல். "கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், நாட்டை விட்டு வெளியேறுவேன்" என்று அவர் பேட்டி தரும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபமானது.

ரஜினி - ஜெயலலிதா - கமல்
ரஜினி - ஜெயலலிதா - கமல்

ஆனால் 'விஸ்வரூபம்' தடைக்குப் பின்னால் 'சட்டம் ஒழுங்கு' பிரச்னை மட்டும் காரணம் இல்லை. அது வெறும் கண்துடைப்பே. அதற்குப் பின்னால் பல பழிவாங்கும் காரணங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை அப்போதைய ஆளுங்கட்சி தான் நடத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சிக்கு விற்கச் சொல்லி நெருக்கடி தந்ததாகவும், கமல் அதை மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதை விடவும் ஒரு முக்கிய காரணம் ஒரு விழாவில், "வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வேண்டும்" என்று ப.சிதம்பரத்தை முன்னிறுத்தி கமல் பேசியது. இது ஜெயலலிதாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லப்பட்டது.

பெரும்பாலும் எதற்கும் விளக்கம் தராத ஜெயலலிதா, "இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காகத்தான் திரைப்படத்துக்கு தடை" என்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி தந்தார். ஒரு திரைப்பட பிரச்னைக்காக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பிரஸ் மீட் நடத்தியது அப்போது மிக ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

ஆக... ரஜினியைப் போலவே கமலும் ஒருவகையில் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். இதுதான் கமலின் அரசியல் பயணத்துக்கு ஒரு ஆரம்பக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவைத் தவிர உப காரணங்களும் இருந்தன. ரஜினிக்கு ராமதாஸ் என்றால் கமலுக்கு கிருஷ்ணசாமி.

சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஒருவர் அரசியலில் இணைய ஒரேயொரு பிரதான காரணம்தான் இருக்க முடியும். பணம், புகழ், மக்கள் அபிமானம் என்று ஒரு பிரபலத்தின் பின்னால் பலம் வாய்ந்த பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் 'அதிகாரம்' எனும் விஷயம் அதை விடவும் சக்தி வாய்ந்தது. அரசாங்க அதிகாரம் எனும் பலமான ஆயுதம் கொண்டு எந்தவொரு நபருக்கும் நெருக்கடி தர முடியும்; பணிய வைக்க முடியும்.

நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என்று பலர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கும் அல்லது முன்னணி அரசியல் கட்சியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் இதுதான் முக்கியமான காரணம். 'அதிகாரம்'. தாங்கள் ஈட்டிய செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் அரசியல் செல்வாக்கு அவசியமாக இருக்கிறது.

கமல்
கமல்

கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் முன்னணி நடிகர்களுக்கு ஒரு சிறு எதிர்ப்பு கூட அவர்களின் அகங்காரத்திற்கு சவாலாக அமைந்து விடலாம். 'இந்த அதிகாரத்தின் மூலம்தானே என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள்... நானும் அதே பாதையில் வருகிறேன்' என்று கிளம்பத் தோன்றிவிடும். அதன் எதிர்வினைகளைத்தான் பன்ச் டயலாக்குகளாக, 'நாளைய முதல்வரே' என்னும் போஸ்டர் வாசகங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கிளம்பியவர்களில் அரிதாக மிகச்சிலர்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலோனோர் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்.

சமீபத்திய சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னால் கமலின் 'மக்கள் நீதி மய்யத்திலிருந்து' பல முக்கியமான பிரமுகர்கள் அவசரம், அவசரமாக கட்சியை விட்டு வெளியேறினார்கள். "கட்சிக்குள் ஜனநாயகத்தன்மை இல்லை, தான் சொல்வதை மட்டுமே நிர்வாகிகள் கேட்டு நடக்க வேண்டும் என்று கமல் வலியுறுத்துகிறார்’’ என்று பல காரணங்கள் சொல்லப்பட்டன.

வெளியேறிய நிர்வாகிகள் சொல்லும் காரணங்களைப் பார்த்தால் ஏறத்தாழ அது ஜெயலலிதாவின் ஆளுமையை, அவருடைய பாணியை நினைவுப்படுத்துகிறது. ஜெயலலிதாவுடன் உருவான உரசல்தான் கமலின் அரசியல் பயணத்துக்கு ஆரம்பம் என்று வைத்துக்கொண்டால், இப்போது கமலே இன்னொரு ஜெயலலிதாவாக உருமாறி இருக்கிறாரா என்கிற சந்தேகத்தை இந்தச் சூழல் ஏற்படுத்துகிறது.

- இன்னமும் அலசுவோம்