Published:Updated:

``கட்சித்தாவல் இங்கே தர்மமடா..'' - தமிழக அரசியல் தலைவர்களின் லாங் ஜம்ப்கள்!

இ.லோகேஷ்வரி

"கட்சித்தாவல் இங்கே தர்மமடா!'' - இதுதான் அரசியல்வாதிகளின் தாரக மந்திரமாக இருக்கிறது. அப்படி அரசியலில் அதீத தர்மத்தோடு நடந்துகொண்ட சில தமிழக அரசியல்வாதிகளைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

அரசியல் தலைவர்கள்
அரசியல் தலைவர்கள்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!
மகான் கவுண்டமணி

கவுண்டமணியின் இந்த டயலாக் உலக ஃபேமஸ். அப்படி அரசியலில் சாதாரணமாக நடக்கும் பல விஷயங்கள் பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஆனால், சர்வ சாதாரணமாக நடப்பதெல்லாம், அரசியல் வரலாறாக மாறும். அப்படித்தான் அரசியலில் `கட்சித் தாவலும்'. ஒரு காலத்தில் கட்சியைவிட்டு, கொண்ட கொள்கையைவிட்டு வெளியேறுவது அபூர்வம். அப்படியே வெளியேறினாலும், வேறு கட்சிகளுக்குச் செல்வார்களா என்பது சந்தேகமே. ஆனால், கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் வரலாறு வேறு மாதிரி இருக்கிறது. தமிழக அரசியல் களமும் அதற்கு விதிவிலக்கல்ல.

தங்க தமிழ்ச்செல்வன்

அ.தி.மு.க சார்பில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு, அ.தி.மு.க-வின் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தினகரனால் வளர்க்கப்பட்டு ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக அவரால் கொம்பு சீவி விடப்பட்டவர். கடைசியில் தினகரனின் மீதே பாய்ந்து கிழித்து எடுத்துவிட்டார்.

தங்க தமிழ்செல்வன்
தங்க தமிழ்செல்வன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி தினகரனுடன் இணைந்து செயல்பட்டதுடன், அவர் துவக்கிய அ.ம.மு.க-வில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். பலமான அடி வாங்கியபின்னும் தமிழக அரசியலில் அவருக்கான மவுசு குறையவில்லை. அ.தி.மு.க அழைக்க, தி.மு.க திசை திருப்ப இப்போதைக்கு அவர் ஐக்கியமாகியிருப்பது அறிவாலயத்தில்!

செந்தில் பாலாஜி

1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, 2000-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இணைந்தார். 2011 தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றதுடன் கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் வகித்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் தினகரன் ஆதரவாளராக இருந்தார். பின்னர் மனக்கசப்பு காரணமாக, 2018 டிசம்பரில் தி.மு.கவில் இணைந்தார். அண்மையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அரவக்குறிச்சித் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

ராதாரவி

ஆரம்பத்தில் தி.மு.கவில் இருந்தவர், பின்னர் அ.தி.மு.க., பக்கம் போனார். 2001 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.கவிலிருந்து விலகி மீண்டும் தி.மு.கவில் இணைந்தார். சில மாதங்களுக்கு முன்னர், நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்தார். இது சர்ச்சையானது.

ராதாரவி
ராதாரவி

இதையடுத்து, ராதாரவி, தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்காக, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மீண்டும் தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார் ராதாரவி.

நாஞ்சில் சம்பத்

தி.மு.கவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை வைகோ தொடங்கியதும், அவருடன் சென்றார். ம.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். வைகோவுடனான கருத்து வேறுபாட்டால், அக்கட்சியிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியை அவருக்கு அளித்தார் ஜெயலலிதா. சர்ச்சைக்குரிய பேட்டியளித்ததால், பின்னர் அப்பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத்தை நீக்கினார் ஜெயலலிதா. ஜெ. மறைவுக்குப் பின்னர், அ.ம.மு.க சென்றார். அங்கிருந்து வெளியே வந்தவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார்.

கருப்பசாமி பாண்டியன்

எம்.ஜி.ஆர் விசுவாசியான இவர், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க பிளவுபட்டபோது ஜெ-வுக்கு ஆதரவு தெரிவித்தார். ஒருகட்டத்தில், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராகப் பலமுறை வெற்றிபெற்றுள்ள கருப்பசாமி பாண்டியன், 2000-வது ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அந்தக் கட்சியில் பல்வேறு பதவிகள் வகித்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2015-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின்னர், ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெ மரணத்திற்குப் பின்னர், இவரை அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக நியமித்தார் சசிகலா.

Vikatan

டி.டி.வி தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளாமல், ஜெ-வுக்குத் 'துரோகம்' செய்த ஒருவரை அ.தி.மு.கவின் உயர் பதவியில் நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். கருணாநிதி மறைவுக்குப் பின், தி.மு.க தலைவர் மு. க. ஸ்டாலினைச் சந்தித்து, 2018-ல் மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார்.

பழ. கருப்பையா

ஆரம்பத்தில் ம.பொ.சியின் தமிழரசு கட்சியிலிருந்தவர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கிருந்து ம.தி.மு.கவுக்குச் சென்றார். தொடர்ந்து அ.தி.மு.கவில் இணைந்து, 2011 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2016 ஜனவரி 28-ல், ஜெயலலிதாவால் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்தநாள் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

பழ கருப்பையா
பழ கருப்பையா

பழ.கருப்பையா வீட்டில் இருந்த அவரின் மனைவியை அடையாளம் தெரியாத சிலர் தாக்கினர். பின்னர் அ.தி.மு.க அரசின் ஊழல்கள் குறித்த செய்திகளை அவர் வெளியிட்டார். தொடர்ந்து, கருணாநிதி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.

மன்சூர் அலிகான்

தொடக்கத்தில் பா.ம.க-வில் இருந்தவர், பிறகு புதிய தமிழகம் கட்சியில் இணைந்தார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப்பிடித்தார். அங்கிருந்து வெளியேறி, சிறிது காலம் படங்களில் கவனம் செலுத்திவந்தவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

பின்னர் அங்கிருந்தும் வெளியே வந்து, ஓரிரு தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சாருபாலா தொண்டைமான்

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்த இவர், திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 2016-ம் ஆண்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். ஜெ மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் அ.ம.மு.கவில் இணைந்து அதன் அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார்.

`இதைக் கவனிக்காம, கட்சிக்கு ஆள்பிடிக்கிற வேலையில் இருக்கிறார்!' - விஜயபாஸ்கரை சாடும் தினகரன்

மைக்கேல் ராயப்பன்

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், தொகுதிப் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதாவைச் சந்தித்த எம்.எல்.ஏக்களில் ஒருவராகி, 2016 தேர்தலுக்கு முன், அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெ மறைவுக்குப் பிறகு, அ.ம.மு.க-வில் இணைந்தார். நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மைக்கேல் ராயப்பன், மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

மாஃபா பாண்டியராஜன்

2000-வது ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர், பின்னர் விஜயகாந்தின் தே.மு.தி.க-வில் இணைந்து, 2011 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அங்கிருந்து அ.தி.மு.க-வுக்குத் தாவினார். 2016 தேர்தலில் ஆவடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்று, அமைச்சரானார். அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் தனி அணியாகப் பிரிந்தபோது, அவருக்கு பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்ததால் அமைச்சர் பதவி பறிபோனது. அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, எடப்பாடி அமைச்சரவையில் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், எம்.ஜி.ஆர் பிரிந்தபோது அ.தி.மு.க-விலும் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியிலும் பணியாற்றிய இவர், மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனி அமைப்பை நடத்தினார். தே.மு.தி.க-வின் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டியார், 2011 தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றார். 2013 டிசம்பர் 10-ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், தே.மு.தி.க-வில் இருந்தும் விலகினார். 20.3.2014 அன்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

விஜய டி.ராஜேந்தர்

தி.மு.க-வில் இணைந்து, தன் அரசியல் பணியைத் தொடங்கினார். தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996-ல் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்புத் திட்ட ஆலோசனைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

டி ராஜேந்தர்
டி ராஜேந்தர்

2004-ல் தி.மு.க-விலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2013 இறுதியில், லட்சிய தி.மு.கவைக் கலைத்துவிட்டு, மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். பின்னர் மீண்டும் தி.மு.க-விலிருந்து விலகி, லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்.

சரத்குமார்

1996-ம் ஆண்டு தி.மு.க-வில் சேர்ந்தார். அக்கட்சியின் வேட்பாளராக 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002-ல் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006-ம் ஆண்டு, தி.மு.க-விலிருந்து வெளியேறி, அ.தி.மு.க-வில் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளைக் காரணம் காட்டி, அ.தி.மு.க-விலிருந்து வெளியேறினார். 2007-ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.

Vikatan

ஜெகத்ரட்சகன்

அ.தி.மு.க சார்பில் மக்களவை உறுப்பினராகி, 1985 முதல் 1989 வரை, அக்கட்சியின் மக்களவைத் தலைவராகச் செயல்பட்டார். பின்னர் தி.மு.க-வில் இணைந்தார். 1999 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அங்கிருந்து வெளியேறி, 2004-ல் வீர வன்னியர் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். 2004-ல் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்று அது பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் தன் கட்சியை 2009-ல் தி.மு.க-வுடன் இணைத்தார்.

கராத்தே தியாகராஜன்

1986 முதல் 1996-ம் ஆண்டுவரையும், மீண்டும் 1998 முதல் 2001-ம் ஆண்டுவரையும் காங்கிரஸ் கட்சியிலிருந்தார் கராத்தே தியாகராஜன். 2001-ல் அ.தி.மு.க-வில் இணைந்தார். அ.தி.மு.க சார்பில் கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சியின் துணை மேயராக நியமிக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு மேயராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து துணை மேயர் பொறுப்பிலிருந்து 2002-ல் நீக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் சஸ்பெண்டு செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை.
கராத்தே தியாகராஜன்

பின்னர் தி.மு.க மீது மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக வழக்கு பதியக் காரணமானார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் அ.தி.மு.க-விலிருந்து, 2005-ல் நீக்கப்பட்டார். 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான இவர், காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில், கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.